full screen background image

“திட்டமிட்டபடி ‘பாயும் புலி’ நாளை ரிலீஸாகும்..” – தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு விளக்கம்..!

“திட்டமிட்டபடி ‘பாயும் புலி’ நாளை ரிலீஸாகும்..” – தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு விளக்கம்..!

இன்று ஒரே நாளில், தமிழ் சினிமா துறையினரின் நேற்றைய முடிவுகள் திருத்தப்பட்டுள்ளன.

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘லிங்கா’ படத்தினால் நஷ்டமடைந்ததாகச் சொல்லி சில வினியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் நஷ்டஈடு கேட்டு போராட்டம் நடத்தினர்.

‘லிங்கா’ பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ரூ.12.5 கோடி நஷ்டஈடாக தர ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது. ‘லிங்கா’ படத்தின் வினியோகஸ்தர்களுக்கு அதில் ஒரு பகுதி கொடுக்கப்பட்டது.

ஆனால், செங்கல்பட்டு மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் மட்டும் தங்களுக்கு தரப்பட வேண்டிய இரண்டே கால் கோடி ரூபாயை இன்னும் தரவில்லை என்று புகார் கூறினர்.

paayum-puli-stills-photos-pictures-20

அந்த நஷ்டஈட்டினை தந்தால்தான் விஷால் நடித்த ‘பாயும்புலி’ படத்தை வெளியிடுவோம் என்று நிபந்தனையும் விதித்தனர். ‘லிங்கா’ படத்தை வெளியிட்ட வேந்தர் மூவீஸ் பட நிறுவனம்தான் ‘பாயும்புலி’ படத்தை தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் கூடுதலாக 65 தியேட்டர்கள் ‘பாயும் புலி’ கிடைக்க வேண்டியது. அது கிடைக்காவிட்டால் சுமார் 4 கோடிவரைக்கும் நஷ்டமாகும் என்று கணக்கிட்ட வேந்தர் மூவிஸ் இது பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டது.

தியேட்டர் உரிமையாளர்களின் இந்த நடவடிக்கைக்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. ரோகிணி தியேட்டர் உரிமையாளர் பன்னீர்செல்வம் தன்னுடன் ஒரு தவறான கூட்டத்தை வைத்துக்கொண்டு ‘பாயும்புலி’ படம் வெளியாகவிடாமல் தடுக்கிறார் என்று குற்றம் சாட்டினர்.

producer council-meeting-2

நேற்றைய தினம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு அவசரமாகக் கூடி.. இது பற்றி விவாதித்தது. தியேட்டர்காரர்களுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. எதுவும் பலனளிக்காமல் போகவே,  “இன்று ‘பாயும் புலி’. நாளை வேறொரு படத்திற்கு இதே கதிதான் நடைபெறும். நாம் பட ரிலீஸையே தள்ளி வைப்போம்..” என்று தீர்மானத்தை நிறைவேற்றி அதை நேற்று இரவு தெரிவித்தார்கள்.

ஆனால் இந்தத் தீர்மானத்தை ‘பாயும் புலி’ படத்தின் ஹீரோவான விஷாலே ஏற்கவில்லை. மேலும் நாளை மற்றும் செப்டம்பர் 11-ம் தேதியில் ரிலீஸாகவிருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களும் ஏற்க மறுத்த நிலையில் தமிழத் திரைப்படவுலகில் பரபரப்பான இரவாக நேற்றைய தினம் கழிந்தது.

இன்று காலை ரோகிணி பன்னீர்செல்வம் தலைமையில் அவர்களுடைய சங்க அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் திரையரங்கு உரிமையாளர்கள்.

rohini panneerselvam-1

அப்போது பேசிய அச்சங்கத்தின் செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம், “பாயும்புலி’ படத்துக்கு தியேட்டர் அதிபர்கள் சங்கம் தடை விதிக்கவில்லை. செங்கல்பட்டு பகுதியில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் தங்களுக்கான ‘லிங்கா’ பட நஷ்டஈடு தொகையான இரண்டே கால் கோடி ரூபாய் வரவில்லை என்பதால் சில முடிவுகளை அவர்களாகவே எடுத்துள்ளார்கள். அதற்கும், சங்கத்துக்கும் தொடர்பு இல்லை. 

தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கொடுத்த 12.50 கோடி ரூபாய் நஷ்ட ஈடாகக் கொடுக்கப்பட்டுவிட்டதாக தாணு சொல்வது பொய். அதில் 9 கோடி ரூபாய் அளவிற்கே பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் 3.50 கோடி ரூபாய் இன்னமும் தரப்படவில்லை. அது எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. அதைத்தான் இந்தத் திரையரங்கு உரிமையாளர்களும் கேட்கிறார்கள். அந்தப் பணத்தை இவர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும்.

ரஜினிகாந்த் கொடுத்த நஷ்டஈட்டு பணத்தை முழுவதுமாக திருப்பி தரவில்லை. அதை வாங்கியே தீருவோம். தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தாணுவை நான் மிரட்டவில்லை. அவர்தான் என்னை மிரட்டினார். தாணு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 

தாணு தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்தே எங்களுக்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகிறார். ஆனால் அந்தச் சங்கத்தில் இருக்கும் பெரும்பான்மையான சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் எங்களுடன் இணைக்கமாக இருக்கிறார்கள். நாங்கள், அவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கிறோம். மிக விரைவில் அந்தத் தயாரிப்பாளர்களை வைத்து புதிய தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்கப் போகிறோம்.

தாணு, இந்த ‘லிங்கா’ பட விஷயத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் சொல்லியே அவருடைய கால்ஷீட்டை வாங்கியிருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் ரஜினியை மிரட்டித்தான் அவரிடத்தில் இந்த ‘கபாலி’ பட வாய்ப்பை பெற்றிருக்கிறார்.. இதெல்லாம் ஒரு நாள் வெளியில் தெரிய வரும்..” என்று பேசினார்.

இந்த சந்திப்பு முடித்த அடுத்த 2 மணி நேரத்தில் அக்கார்ட் மெட்ரோபாலிட்டன் ஹோட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர் தமிழ்த் திரைப்படக் கூட்டமைப்பினர்.

இதில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, பெப்சி தலைவர் சிவா, விநியோகஸ்தர்கள் சார்பில் திருப்பூர் சுப்பிரமணியம், செல்வின்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும், தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தாணு, துணைத் தலைவர்கள் தேனப்பன், கதிரேசன், செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

producer-council-4

இந்தக் கூட்டத்தில் பேசிய தாணு, “நேற்று தயாரிப்பாளர் கவுன்சிலில் எடுக்கப்பட்ட 4-ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்ற முடிவு கைவிடப்பட்டது. தமிழ்த் திரையுலக கூட்டமைப்பைச் சேர்ந்த அனைவரின் வேண்டுகோள் மற்றும் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  ‘பாயும் புலி’ திரைப்படம் நாளைய தினம் நிச்சயமாக வெளியாகும்.

‘லிங்கா’ படத்துக்கு நஷ்டஈடாக கொடுக்கப்பட்ட தொகை முழுவதும் சம்பந்தப்பட்டவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுவிட்டது. மீதி தொகையை அடுத்த வாரம் தந்துவிடுவதாக ராக்லைன் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுகிறோம். சிறு பட தயாரிப்பாளர்கள் நலனுக்காக பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். வரும் அக்டோபர் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

producer-council-statement-1

‘பாயும் புலி’ படம் திரைக்கு வருவதைத் தடுப்பவர்கள் மீது நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம். செங்கல்பட்டு ஏரியாவில் எந்தெந்த தியேட்டர்கள் ‘பாயும் புலி’ படத்திற்கு ஒப்பந்தமாகி திரையிடவில்லையெனில் அவர்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி நாங்கள் பேசி முடிவெடுப்போம்..” என்றார்.

“ரஜினியை நீங்கள் மிரட்டித்தான் ‘கபாலி’ படத்தை தயாரிக்கும் வாய்ப்பை பெற்றீர்கள் என்று பன்னீர்செல்வம் குற்றம் சொல்லியிருக்கிறாரே..?” என்று கேட்டதற்கு, “இது அப்பட்டமான பொய்.. ரஜினி ஸார் ஒரு பெரிய மலை.. ரொம்ப உயரத்தில் இருக்கார். அவரைப் போய் யாராவது மிரட்ட முடியுமா..?” என்று திருப்பிக் கேட்டார்.

“தயாரிப்பாளர் சங்கத்திற்குப் போட்டியாக புதிய சங்கத்தை உருவாக்கப் போவதாக ரோகிணி பன்னீர்செல்வம் கூறியிருக்கிறாரே..?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “இதுவரையில் எங்களது சங்கத்திற்குள்ளேயே பிரச்சினைகளை கிளப்பிக் கொண்டிருப்பது யார் என்பது எங்களுக்குத் தெரியாமலேயே இருந்தது. இப்போது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. எந்தப் பிரச்சனை வந்தாலும் நாங்கள் சமாளிப்போம்..” என்றார் தாணு.

“படங்களை டிஜிட்டலில் வெளியிடும் க்யூப் கம்பெனிக்கு எதிராக நீங்களே போட்டி நிறுவனத்தைத் துவக்கப் போவதாகச் செய்திகள் வருகிறதே..?” என்று கேட்டதற்கு, “க்யூப் போன்று கம்பெனியைத் துவக்க வேண்டுமெனில் அதற்கு 300 கோடி ரூபாய் அளவுக்கு பணம் வேண்டும். நான் சாதாரணமான 30 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர். என்னிடம் அந்த அளவுக்கு பணமில்லை. ஆனால் இங்கேயுள்ள அனைவரின் கூட்டு முயற்சியினால் புதிய திட்டங்களை ஆரம்பிக்கலாம் என்கிற எண்ணம் எங்களுக்கு உண்டு..” என்றார்.

தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் கணவன், மனைவி போன்றவர்கள். ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டோ, முறைத்துக் கொண்டே சென்றால் குடும்பம் நடத்த முடியாது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்தான் இருவரது வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்..! புரிந்து கொண்டால் சரி..!!!

Our Score