full screen background image

“தனி ஒருவனின் வெற்றி கதை கேட்கும்போதே தெரிந்தது..” – ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் சந்தோஷ பேட்டி..!

“தனி ஒருவனின் வெற்றி கதை கேட்கும்போதே தெரிந்தது..” – ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் சந்தோஷ பேட்டி..!

தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் ராம்ஜி. 1987-ல் வெளியான ‘வள்ளல்’ படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளராக தமிழ்ச் சினிமாவிற்குள் அறிமுகமானவர்.

Cinematographer-Ramji-3

அதன் பின்பு ‘டும் டும் டும்’, ‘மெளனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்தி வீரன்’,  ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’, ‘இரண்டாம் உலகம்’ என பல முக்கியமான தமிழ்ப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, மலையாளப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி-நயன்தாரா நடித்து வெளியாகியிருக்கும் ‘தனி ஒருவன்’ படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தற்போது இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூலை அள்ளி வருகிறது.

thani oruvan-poster

இந்த ‘தனி ஒருவன்’ என்கிற வெற்றி படத்தில் பணியாற்றியது குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் ராம்ஜி.

அவர் பேசும்போது, “இந்தப் படத்தின் வெற்றியைக் கேள்விப்பட்டபோது சந்தோஷமாக இருந்தது. படம் நிச்சயமாக ஜெயிக்குமென்று படத்தின் துவக்கத்திலேயே எனக்குத் தெரிந்தது. அதனால்தான் இந்தப் படத்தில் வேலை செய்யவும் நான் ஒத்துக் கொண்டேன்.

படத்தின் கதை அப்படிப்பட்டது. அதோடு ட்ரீட்மெண்ட்டும் தனி ஸ்டைலில் இருந்ததால் நிச்சயம் இது தனித்து பேசப்படும்னு நினைத்தேன். அப்படியே நடந்துவிட்டது. மோகன் ராஜா சிறந்த இயக்குநர். இவருடன் பணியாற்றியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

பொதுவாக ஸ்கிரிப்ட் பிடித்திருந்தால் மட்டும்தான் நான் படம் செய்ய ஒத்துக் கொள்வேன். அதனால்தான் இத்தனையாண்டு கால சினிமா வாழ்க்கையில் எண்ணிச் சொல்வது போலத்தான் சில படங்களில் பணியாற்றியிருக்கிறேன். இதற்கான காரணமும் இதுதான். சில படங்களென்றாலும் அவை என் பெயரைச் சொல்லி தனித்து நிற்கணும்னு விரும்புவேன்.

பிலிமில் கடைசி படம் இதுதான்

என்னுடைய முதல் படம் ‘வள்ளல்’ முதல் ‘தனி ஒருவன்’ படம்வரை பிலிமில்தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். ‘தனி ஒருவன்’ படம்தான் பிலிமில் செய்த கடைசி படமாக இருக்கும் என நினைக்கிறேன். இனி பிலிம் வருமா, வராதா என்று தெரியவில்லை.

????????????????????????????????????????????????????????????????????????

இந்தப் படத்தின்போதுகூட பிலிம் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. கடைசிக் கட்டத்தில் நாங்கள் எதிர்பார்த்த அளவு பிலிம் கிடைக்கவில்லை. அதனால், ஜெயம்ரவி, நயன்தாராவின் டூயட் பாட்டு, கிளைமாக்ஸ் காட்சிகள் போன்ற ஒரு சில காட்சிகளை டிஜிட்டலில்தான் படமாக்கினோம்.

இரண்டுக்கும் அதிக வித்தியாசமில்லை. பிலிமிற்கு சிறிது மெனக்கெட வேண்டும். லைட்டிங்ஸ் வைக்க அதிக நேரம் தேவைப்படும். ஆனால் டிஜிட்டலில் வேலை குறைவு. ஆனால் நினைத்த மாதிரியெல்லாம் பின்பு கலரிங் செய்து கொள்ள முடியும்.. இதனால் என்னைப் போன்றவர்களுக்கு பெரிய பலுவெல்லாம் இல்லை..

நயன்தாராவை அழகாக காட்டவில்லையா..?

thani oruvan-5

இந்தத் ‘தனி ஒருவன்’ படத்தில் நயன்தாராவை அழகாக காட்டவில்லையே என்று பலரும் என்னிடத்தில் வருத்தப்பட்டார்கள். படத்தின் கதைப்படி நாயகன், நாயகி இருவருமே முக்கியமில்லாமல் போய்விட்டது. கதையும், திரைக்கதையும்தான் முக்கியம் என்றாகியிருந்தது. ஆகவே காட்சிகளின் வேகத்தின்போது அவர்களுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சின்படி கூடுதல் அழகு தேவைப்படவில்லை. அதனால் அதில் நாங்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.. மற்றபடி நயன்தாரா எப்போதும்போல அழகாகத்தான் இருந்தார்.

ஆயிரத்தின் ஒருவனின் தோல்வி

ஒரு படத்தின் வெற்றியும், தோல்வியும் என்னை பாதிக்காது. ஆனால், ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் தோல்வி என்னை ரொம்பவே அப்செட்டாக்கியது. மூணு வருஷம் ரொம்பக் கஷ்டப்பட்டு உருவாக்கின படம் இது. செல்வா என்கிட்ட கதை சொல்லும்போது இது தமிழ்ச் சினிமால ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்கப் போகிறது என்பதை மட்டும் புரிஞ்சுக்கிட்டேன். அதனால்தான் மூன்று வருடமானாலும் பரவாயில்லைன்னு அந்தப் படத்தில் வேலை செய்தேன்.

Cinematographer-Ramji-4

ஆனால், படம் வெளிவந்த பிறகு ஒளிப்பதிவு நன்றாக இல்லை என்று சொல்லியிருந்தால்கூட சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால், அந்தப் படத்தை பற்றி யாரும் ஒரு கருத்தும் கூறவில்லை. அப்படியே அனாதையாக விட்டுவிட்டார்கள். மனோபாலா ஒருவர் மட்டுமே எனக்கு போன் செய்து, “படம் எனக்குப் பிடிக்கலை. ஆனால் உங்க வொர்க் ரொம்ப நல்லாயிருக்கு”ன்னு பாராட்டினார். 3 வருடங்கள் உழைத்த படத்தை நல்ல முயற்சி என்றுகூட யாரும் சொல்லவில்லை. அப்போதுதான் எனக்கு மிகவும் வலித்தது. ஆனால் இப்போது ‘பாகுபலி’ படம் வந்த பின்புதான் சில நாட்களாக ‘ஆயிரத்தில் ஒருவனைப்’ பற்றிப் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள்.

கதை நல்ல கதைதான். ஆனால் பிரசண்டேஷனில் ஏதோ தவறு நடந்துவிட்டதாக உணர்கிறேன். அல்லது மக்களுக்கு செல்வா சொன்னது புரியவில்லையோ என்றும் தெரியவில்லை.. ஆனாலும் இந்தப் படத்தில் நான் வேலை செய்தது என் வாழ்நாளில் மறக்க முடியாது..!

செல்வராகவனுடனான அனுபவம்

செல்வராகவன் இப்போதைய சிம்பு படத்திற்குக்கூட என்னை அழைத்தார். ஆனால் இந்த ‘தனி ஒருவனி’ல் நான் மாட்டிக் கொண்டதால் செல்ல முடியவில்லை. இது வருத்தமாகத்தான் இருக்கிறது..! அவரிடத்தில் வேலை செய்வதே ஒரு தனி சுகம். ஒரு நல்ல அனுபவம்.. நிறைய கற்றுக் கொள்ளலாம்..!

Cinematographer-Ramji-10

எனக்கு அமைந்த கதைகள் எல்லாம் நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும் படங்களாகவே அமைந்துவிட்டது. இனி வருடத்துக்கு பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய முடிவெடுத்திருக்கிறேன்.

இத்தனை இயக்குநர்களிடத்தில் வேலை செய்தாலும் ஒவ்வொருவரும் ஒரு ரகம். அமீர் தேவையில்லாமல் ஒரு ஷாட்கூட எடுக்க மாட்டார். இதைப் பயன்படுத்தப் போகிறோம் என்று தெரிந்தால் மட்டுமே அதை படமாக்கச் சொல்வார். ஆனால் செல்வராகவன் அப்படியில்லை. இப்படியும் எடுத்துப் பார்ப்போம். எது நன்றாக வருகிறதோ அதை வைத்துக் கொள்வோம் என்று சொல்லி ஒரு காட்சிக்கு பல ஷாட்டுகளை பல கோணங்களில் எடுக்கச் சொல்வார். என்னைக் கேட்டால் இரண்டுமே தவறில்லைதான். பணம், நேரம் விரயம்தான். ஆனால் ஒரு படைப்பாளி தன்னுடைய படைப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்றுதானே நினைப்பார்.? ஆக இதிலொன்றும் தவறில்லையே..?

விமர்சனங்களில் ஒளிப்பதிவுக்கு இடமில்லையே..?

Cinematographer-Ramji-9

நாங்கள் கஷ்டப்பட்டு ஒளிப்பதிவு செய்து படத்திற்கு உயிரைக் கொடுக்கிறோம். ஆனால் விமர்சனங்களில் ஒளிப்பதிவினைப் பற்றி யாரும் எழுதுவதில்லை. ‘ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கிறது; இருந்தது’ என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு எஸ்கேப்பாகுகிறார்கள். இயக்குதல் போல் ஒளிப்பதிவும் ஒரு துறை. அதையும் நுணுக்கமாக அலசி, ஆராய்ந்து எழுதலாம்; விமர்சிக்கலாம். ஒரு காட்சியில் ஒளிப்பதிவு எந்தவிதத்தில் உதவி செய்திருக்கிறது. எந்தக் காட்சியில் ஒளிப்பதிவினாலேயே படத்தை ரசிக்க முடிந்தது என்பதையெல்லாம் குறிப்பிட்டு எழுதலாம்.

கதை பிடித்தால் உடனே கிளம்பலாம்தான்..!

புதிய இயக்குநர், புதிய கம்பெனி என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. எனக்குக் கதை பிடிக்கணும். பிடித்திருந்தால் நாளைக்கே ஷூட்டிங் என்றாலும் உடனேயே ரெடி என்பேன்.

Cinematographer-Ramji-1

‘இதுவரையிலும் சினிமாவிற்காக உழைத்தது போதும். இனிமேல் உன் குடும்பத்திற்காக உழைத்துக் கொள்’ என்று அண்ணன் சிவக்குமார் எனக்கு அட்வைஸ் செய்துள்ளார். இதுவும் நல்லதுதான் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்..!” என்று சொல்லி முடித்தார்.

ஒளிப்பதிவாளர் ராம்ஜி, மென்மேலும் உயர வாழ்த்துகிறோம்..! 

Our Score