full screen background image

பண்ணையாரும் பத்மினியும் – சினிமா விமர்சனம்..!

பண்ணையாரும் பத்மினியும் – சினிமா விமர்சனம்..!

குறும்பட இயக்குநர்களின் வெற்றி சரித்திரத்தில் அடுத்த பதிப்பு இது.. திடீரென்று இணையத்தில் எழுந்த இந்த பண்ணையாரும் பத்மினியும் என்ற பெயர் இக்குறும்படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியது.. மிகக் குறுகிய காலத்தில் அதிகமானோர் இதனை பார்த்தார்கள்.. இதன் விசாரிப்பு அதிகமான பின்பு திடீரென்று ஒரு நாள் இணையத்தில் இருந்து இந்தக் குறும்படம் தானாகவே விலகிக் கொண்டது.. பின்பு விசாரித்தபோதுதான் இது படமாக உருவாகப் போகிறது என்றார்கள்.

விஜய்சேதுபதியை கையெடுத்து கும்பிட வேண்டும்.. எத்தனையோ நடிகர்கள் ஒரு படம் ஓடினாலே அடுத்து யார் அதிகச் சம்பளம் தருகிறார்களோ அவர்களுக்கே தங்களது கால்ஷீட் என்று வீட்டு வாசலில் போர்டு மட்டும் மாட்டாமல் அந்த வேலையை மட்டுமே செய்கிறார்கள். தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்துவிட்டு வரிசையான படங்களும் நிச்சயம் வித்தியாசமானதாகவே இருக்க வேண்டும் என்ற கொள்கையை இவர் மட்டுமே கடைப்பிடிக்கிறார்.. வெற்றியும் பெற்றிருக்கிறார். இந்தப் படமும் அதே வெற்றிதான்..!

என்னுடைய சின்ன வயதில் நான் அதிகம் பார்த்திருந்த 2 கார்களில் ஒன்று அம்பாசிடர்.. இன்னொரு இந்த பிரிமீயர் பத்மினி. இந்தக் காரின் முன்னால் பேனட்டுக்குக் கிழே அடையாளச் சின்னமாகப் பொறிக்கப்பட்டிருக்கும் PAL என்ற இரும்புத் தகடு ஒன்றை பல நாட்கள் நான் என் வீட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்தது இப்போது ஞாபகத்திற்கு வருகிறது. அம்பாசிடரைவிட எடை குறைவாக.. மத்தியத் தர மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்திய கார் இது.. இந்தக் கார்தான் இதில் கதாநாயகன்..!

ஜெயபிரகாஷ் ஊர் பண்ணையார். அவரது மனைவி துளசி. தன்னுடைய உறவினர் மகாதேவனின் வீட்டிற்கு செல்லும் ஜெயபிரகாஷ், அவருடைய புத்தம் புதிய காரான பிரிமியர் பத்மினியை முதன்முதலாகப் பார்க்கிறார். பார்த்தவுடன் ஈர்ப்பு வந்துவிடுகிறது. அதன் பின்பு அவரது கவனமும், பேச்சும் முழுக்க முழுக்க பத்மினியை பற்றியே இருக்கிறது.. மகாதேவன் வெளியூர் செல்ல நேரும்போது காரை ஜெயபிரகாஷிடம் கொடுத்துவிட்டுப் போகிறார். ஜெயபிரகாஷ் தன்னுடைய ஊர்க்காரரான விஜய்சேதுபதியை அழைத்து கார் ஓட்டும் பணியை வழங்குகிறார். அதுவரையிலும் டிராக்டரை மெதுவாக ஓட்டிப் பழகிக் கொண்டிருக்கும் விஜய்சேதுபதிக்கும் இது ரொம்பவே பிடித்துப் போகிறது..! அந்த ஊரில் ஏற்கெனவே ரொம்ப நல்லவராக இருக்கும் ஜெயபிரகாஷ்.. இந்தக் கார் வந்தவுடன் அநியாயத்திற்கு நல்லவராக உருவெடுக்கிறார்.

ஊரில் நடக்கும் அனைத்து நல்ல, கெட்ட விஷயங்களுக்கும் காரை கொடுத்து உதவுகிறார். காரில் பயணம் செய்யாத ஊர்க்காரர்களே இல்லை என்ற நிலைமை வருகிறது.. ஜெயபிரகாஷுக்கு காரின் மீதான பாசம் கூடிக் கொண்டே போகிறது.. கொஞ்ச நேரம்கூட பிரிந்திருக்க முடியாத சூழல்.. ஊரையே அழைத்துப் போகும்போது கட்டின மனைவி காரில் ஏற மறுப்பது ஜெயபிரகாஷுக்கு வருத்தத்தைத் தருகிறது. என்னிக்கு நீங்க கார் ஓட்டுறீங்களோ அன்னிக்குத்தான் நான் அந்த கார்ல ஏறுவேன் என்று துளசி உறுதியாகச் சொல்லிவிட தானே தனியாக கார் ஓட்டக் கற்றுக் கொள்ள முயல்கிறார் ஜெயபிரகாஷ்.. அவர்களது கல்யாண நாளன்று கோவிலுக்கு மனைவியை இதே காரில் தானே ஓட்டி அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறார் ஜெயபிரகாஷ்..

கிட்டத்தட்ட தனித்து ஓட்ட முடிந்த நிலையில் ஜெயபிரகாஷின் மகள் நீலிமாராணி தனக்கு கார் வேண்டும் என்று அடம்பிடித்து எடுத்துச் சென்று விடுகிறார். கல்யாண நாளன்று கார் கிடைத்ததா..? பண்ணையார் என்ன ஆனார்..? என்பதற்கான விடை தியேட்டரில் கிடைக்கும்..!
ஒரு புதிய இயக்குநர்கள் எப்படியொரு கதையை தேர்வு செய்ய வேண்டும்..? அதனை எப்படி திரைக்கதையாக்க வேண்டும்..? கதைகளுக்கேற்ற நடிகர்களை தேடிப் பிடிப்பது எப்படி..? வியாபார நுணுக்கத்திற்கேற்ப ஒரு படத்திற்கு இயக்குநர் தனது பங்களிப்பைத் தருவது எப்படி..? இயக்குதல் என்பது எப்படி என்கிற அனைத்து கேள்விகளுக்கும் இந்த ஒரு படத்தில் விடை கிடைத்திருக்கிறது..!

சிறுவயதில் காரில் அமரக்கூட வாய்ப்பில்லாத சூழலில் வளர்ந்து வந்தவன்.. தானே சுயமாக கார் வாங்கும் அளவுக்கு வந்த பின்பு அந்தக் காரை ஓட்டிப் பார்க்கும் அனுபவமும்.. தன்னை அதற்குத் தூண்டியவர்களை பார்க்கத் துடிக்கும் ஆசையையும் காட்டித்தான் இந்தப் படம் துவங்குகிறது..! சுருக்கமாகச் சொன்னால் மூன்றாம் நபரின் கண் பார்வையில்தான் படத்தின் துவக்கமும், முடிவும்.. அந்தச் சின்னப் பையன் கேரக்டரை படு சஸ்பென்ஸாக வைத்திருந்து கடைசியில் பட்டென்று போட்டுடைக்கும்போது நமக்குள் இதுபோல இருந்த நிராசையான ஆசைகளும், கனவுகளும் பட்டென்று வெடித்தாற்போன்று இதயக்கூட்டில் பலமான சிதறல்.. ஹாட்ஸ் அப் டைரக்டர்..!

கேரக்டர் ஸ்கெட்ச்சில் மிக கவனமாக இருந்திருக்கிறார் இயக்குநர். அவ்வளவு பெரிய வீட்டில் கணவன், மனைவியைத் தவிர வேறு யாருமில்லை.. மகளைக் கட்டிக் கொடுத்தாகிவிட்டது. மகள் மீது பெரிய அளவுக்கு பாசமில்லை.. மகளின் குணம் அவர்களுடையது இல்லை.. வீடு வெறிச்சோடி கிடக்கிறது.. பாசத்தைக் கொட்ட ஆளில்லை. வாங்க ஆள் இருந்தும் கொடுக்கவும் ஆளில்லை. வேலைக்காரப் பெண்கள் தோட்டத்து, வயலு வேலைகளை பார்த்துக் கொள்ள.. அடிமைத்தனம் நடத்த பண்ணையாருக்கு குணமில்லை.. அவர் வேறு என்னதான் செய்வார்..? அவருடைய பாசத்தை, இயல்பை, குணத்தை, நேசத்தை, அன்பை காட்டுவதற்கும், பகிர்வதற்கும் ஏதாவது ஒரு பிடிப்பு அவருக்கு இப்போது தேவைப்படுகிறது.. அதுதான் கார் மீதான பாசமாகவும், பற்றாகவும் மாறுகிறது..! வெல்டன் டைரக்டர்..!

படத்தின் ஹீரோ விஜய்சேதுபதி இல்லை. ஜெயபிரகாஷ்தான்.. அந்த அளவுக்கு சேதுபதியை டாமினேட் செய்திருக்கிறார்.. இவருக்கு சற்றும் சளைத்தவரில்லை துளசி. ஆதலால் காதல் செய்வீர் படத்திலேயே இவரது நடிப்பைப் பார்த்து அசந்துதான் போனோம்.. இப்போது இன்னொரு முறை.. ஒவ்வொரு முறையும் தனது கணவரை ஏமாற்றும் பேச்சைத் தொடர்வதும்.. அதற்கான ஜெயபிரகாஷின் ஏமாற்றத்தை பார்த்து மனதுக்குள் ரசிப்பதும், அதற்காக அவர் காட்டுகின்ற முகபாவனைகள்.. எக்ஸலண்ட்..!

இரவில் படுத்திருக்கும்போது இவர் முழித்திருக்கிறார் என்று அவரும், அவர் முழித்திருக்கிறார் என்று இவரும் நினைத்து பேசிவிட்டு.. பின்பு தூங்கிவிட்டார்கள் என்று ஏமாறுவதும்.. ஒருத்தருக்கொருத்தர் மீது வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டும் காட்சிகளும் ஒரு அழகான காதல் கவிதையை படித்தது போல இருக்கிறது.. நடுத்தர வயது காதலர்களின் அன்னியோன்யத்தை இதைவிட அழகாக யாரும் காட்டிவிட முடியாது.. அந்தக் கிராமத்தினருக்கே உரித்தான பேச்சு, தொனி, பழக்க வழக்கம் இவற்றோடு பெண்மையையும், ஆண்மையையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார் இயக்குநர்..!

மகள் மீதான பாசத்தில் ஒரு நிமிடம் நிலை தடுமாறி யாரை எங்கே வைக்கணுமோ அங்கதான் வைக்கணும். நான்தான் தப்பு பண்ணிட்டேன் என்று சொல்லும் ஜெயபிரகாஷ் கடைசியில், “ஐயா சாமி.. என்னை மன்னிச்சிருடா.. உள்ள வாடா..” என்று தலைக்கு மேல் கையைத் தூக்கி மன்னிப்பு கேட்கும் காட்சியிலும் இரு வேறு நடிப்பு.. ஆனால் கைதட்டல்களை அள்ளியது.. மகள் வீட்டிற்குச் சென்ற பிறகும் கவுரவத்திற்காக காரை கேட்காமலேயே வந்துவிட்டு பின்னர் கார் ஒரு நாளைக்கு கொடுன்னு கேட்டிருக்கலாம். நிச்சயம் கொடுத்திருப்பால்லே என்று அப்பா பாசத்தில் பேசி மருகுவதும் வெகு இயல்பு..!

சினேகா வீடு தேடி வந்து தனது அப்பா கொடுத்தவைகளை கேட்கும்போது தவிக்கின்ற தவிப்பு இருக்கிறதே ரசிகனை சீட்டு நுனிக்கே கொண்டு வரச் செய்துவிட்டார். எங்கே துளசி சொல்லிவிடுவாரோ என்கிற பதை, பதைப்புடன் அது எனக்கே தெரியும்.. இங்கயே இருக்கட்டும் என்று சினேகா சொன்னவுடன் ஜெயபிரகாஷைவிட நமக்குத்தான் பரம திருப்தி.. ச்சே.. என்னவொரு திரைக்கதை..!

பெற்ற மகள் என்றாலும் வரும்போதெல்லாம் எதையாவது தூக்கிக் கொண்டு போகும் கெட்ட பழக்கத்தினாலேயே வெறுப்படையும் அளவுக்கு பாசம் வைத்திருக்கும் துளசி.. அதே இயல்பில் கிளைமாக்ஸில் “போனா போறா.. விடுங்க..” என்று அலட்சியப்படுத்தி தனது கணவரின் சந்தோஷத்தையே பெரிதாக எண்ணுவதாகக் காட்டி முடித்திருப்பது முத்திரையான காட்சி..!

விஜய் சேதுபதிக்கு இது மீண்டும் ஒரு வெற்றி படம்தான்.. இந்த மாதிரியான கேரக்டருக்கு இவரைவிட்டால் வேறு ஆளில்லை என்று சொல்ல வைக்குமளவுக்கு இயல்பாகவே நடித்திருக்கிறார்.. ஜெயபிரகாஷ் மீதான மரியாதை, பாசத்தைவிட.. அந்தக் காரின் மீதான பாசம் அவருக்குள் அதிகமாகிக் கொண்டே போவதை பல காட்சிகளில் கொஞ்சம், கொஞ்சமாக காண்பித்திருக்கிறார் இயக்குநர்.. ஜெயபிரகாஷ் தனக்கு டிரைவிங் கற்றுக் கொடுக்கும்படி சொல்வதையே தன்னை கழட்டிவிட்டுவிடுவாரோ என்றெண்ணி முதலில் மறுத்து.. பின்னர் கல்யாண நாளுடா.. அவளை ஒரு நாளாவது சந்தோஷப்படுத்தணும்டா என்ற ஜெயபிரகாஷின் கள்ளம்கபடமில்லாத பாசத்தைப் பார்த்து உருகிப் போய் காதலி அழைத்திருக்கும் நாளில் வாங்க டிரைவிங் கத்துக்கலாம் என்று இழுத்துப் போகும் அவரது இயல்பான நடிப்பு சூப்பர்..


காருக்குள் டிரைவிங் சொல்லித் தரும்போது டயலாக் டெலிவரியில் பின்னியிருக்கிறார்கள் விஜய்யும், ஜெயபிரகாஷும்.. நேரா பாருங்க.. கீழ பாருங்க.. கிளட்ச், பிரேக், ஆக்சிலேட்டர் என்று மூன்றையும் மாறி மாறி சொல்லித் தரும் அந்தக் காட்சி மிகச் சிறந்த இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு.. இந்தப் படத்தின் மிகச் சிறப்பான காட்சிகளில் இதுவும் ஒன்று..!

நான்காவதாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ‘பீடை’ என்று சுருக்கமாகவும், ‘பெருச்சாளி’ என்று பெயராகவும் நடித்திருக்கும் பாலசரவணன். நல்ல அழுத்தமான நடிப்பு. எந்த இடத்திலும் சோடை போகவில்லை. இவரை வைத்து நடத்தியிருக்கும் காமெடி தர்பார் உச்சக்கட்டத்திற்கு போனது மாட்டு வண்டியை அழைக்கப் போன இடத்தில் அச்சாணி முறிந்து உடைந்து போயிருக்க.. அதற்கடுத்து வண்டிக்காரனுக்கும், பெருச்சாளிக்கும் இடையே நடக்கும் வாய்த் தகராறுதான்.. சிரித்து, சிரித்து சட்டென்று வயித்து வலியே வந்திருச்சு.. செம டயலாக்குகள்.. செம டைரக்சன்.. வாவ்.. வாவ்.. ஒரு ரவுண்டு வாப்பா..!

‘ரம்மி’ ஐஸ்வர்யா இதிலும் ஹீரோயின். நல்ல அழுத்தமான கிராமத்துப் பெண் கேரக்டர்.. இவருக்கு பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும், ரசிக்க வைக்கிறார் காதலையும், அவரையும்.. ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பாருன்னு நினைக்கிறேன். ஏனெனில் கிராமத்து வெட்ட வெளியில் எப்போது லைட் வரும்..? எப்போது போகும்ன்னு யாருக்கும் தெரியாது.. சீரான ஒளியும் கிடைக்காது.. அப்படியிருந்தும் மிக அழகாக படம் பிடித்திருக்கிறார்.. வெறுமனே காட்சிப் படிம்மே சோகத்தைத் தருகிறது எனில், நீலிமா காரை எடுத்துச் சென்ற பிறகு வெறுமையாக இருக்கும் அந்த இடத்தை கேமிரா படம் பிடித்திருக்கும்விதத்தைச் சொல்லலாம்.. வெல்டன் ஸார்..

ஜஸ்டின் பிரபாகரன் தனது முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்திருக்கிறார். ‘நம்ம வண்டி’ பாடல், ‘பேசுறேன்.. பேசுறேன்’ பாடல்.. ‘எனக்காக பொறந்தாயே’ பாடல்களில் இசையைத் தாண்டியும் குரல்கள் ஒலிக்கின்றன.. ரசிக்க வைத்திருக்கின்றன.. மெல்லிய பின்னணி இசை படத்தின் எந்த இடத்திலும் எதையும் குலைக்கவில்லை. மாறாக ரசிப்புக்கு இடையூறும் செய்யவில்லை. இறுதி காட்சியில் அட்டக்கத்தி தினேஷ் குடுகுடுவென்று ஓடி வந்து பத்மினியில் ஏறும் காட்சியின் இசையை கொஞ்சம் கேட்டுப் பாருங்கள். நம்மையும் கூடவே தூக்கிக் கொண்டு போனதுபோல இருந்தது..!

எல்லாவற்றுக்கும் காரணம் இயக்குநரின் திறமைதான்.. மிகச் சிறந்த இயக்குநர் ஒருவர் நமக்குக் கிடைத்திருக்கிறார். கோடம்பாக்கம் அவரை பத்திரமாகக் காப்பாற்றி அவருடைய திறமையைத் தொடரச் செய்தால் அதற்கும் நல்லது..! ரசிகர்களுக்கும் நல்லது..!

பண்ணையாரும், பத்மினியும் ஒரு புதுமையான அனுபவம்.. அவசியம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.. மிஸ் பண்ணிராதீங்க..!

Our Score