ஸ்ரீஅய்யனாரப்பா பிலிம்ஸ் வழங்கும் ரமேஷ்பிரியா கணேசன், ரேவதி பழநிவேலன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘பண்ணாடி.’
இந்தப் படத்தில் ரிஷி ரித்விக், சுப்ரஜா, வேல. ராமமூர்த்தி, ஆர்.வி.உதயகுமார். மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர்.
பார்த்தசாரதி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் ராமலிங்கம் இசையமைத்துள்ளார். படத் தொகுப்பு – ஜான் ஆப்ரகாம், சண்டைப் பயிற்சி – KNIFE நரேன், தயாரிப்பு – க.ரமேஷ் பிரியா கணேசன், ரேவதி பழநிவேலன், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – டி.ஆர்.பழனிவேலன்.
மிகப் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் ‘பண்ணாடி’ படத்தில் ‘இசைக் குயில்’ எஸ்.ஜானகி இரண்டு பாடல்களை பாடியுள்ளார்.
இது பற்றி படத்தின் தயாரிப்பாளரான க.ரமேஷ்பிரியா கணேசன் பேசும்போது, “இந்தப் படம் முழுக்க, முழுக்க கிராமப்புற மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டது. நேர்மை, உண்மை, பாசம், காதல், பண்பு கலாச்சாரம், விவசாயம் இவை அனைத்தும் ‘பண்ணாடி’ குடும்பத்தில் வாழ்ந்த முன்னோடிகளின் வாழ்வியல்தான் கதை.
இப்போதைய சூழலில் அக்குடும்பத்தில் வந்த நாயகன் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினையையும் எவ்வாறு நம் கலாச்சாரத்திற்கு ஏற்ப எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை.
இந்த படத்தின் சிறப்பம்சமே எஸ்.ஜானகி அம்மா பாடிய இரண்டு பாடல்கள்தான். இரண்டு பாடல்களும் மிக அற்புதமாக வந்துள்ளன.
‘ஒன் உசிரு காத்துல காத்தாடியா பறக்குறேன். ஒன் முகத்த முகத்த வியந்து பார்க்குறேன். என் உசுர உனக்கு எழுதிக் கொடுக்குறேன்’ என்று நாயகன் பாட… நாயகியோ ‘நீ பேசும் பேச்சுல புதுசா நான் பொறக்குறேன். என் மனசு முழுக்க ஒண்ண நெனக்கிறேன். அந்த நெனப்பில் ஒறஞ்சி உறங்க மறுக்கிறேன்’ என்று பாடுகிறாள்.
இதில் ஆண் குரலுக்கு இசையமைப்பாளர் ராஜேஷ் ராமலிங்கம் பாட பெண் குரலுக்கு எஸ்.ஜானகி பாடியுள்ளார். இந்தப் பாடலை இயக்குநர் டி.ஆர்.பழனிவேலன் எழுதியுள்ளார். அந்தப் பாடல் இப்போது லிரிகல் வீடியோவாக வெளியாகி ஹிட்டுகளை அள்ளி வருகிறது. படத்தின் பாடல்களை விரைவில் வெளியிட உள்ளோம்..” என்றார்.












