‘சதுரங்க வேட்டை’ படத்திற்கு பின்பு தனது அடுத்த தயாரிப்பை துவக்கியுள்ளார் நடிகர் மனோபாலா. இந்த முறை தானே தனியாக களமிறங்காமல் R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். படத்தின் பெயர் ‘பாம்பு சட்டை’.
நடிப்பில் தனக்கென ஒரு தனி பாணியை கையாண்டு வரும் பாபி சிம்ஹா இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பல தமிழ் படங்களில் நடித்து வரும் வளர்ந்து வரும் நடிகையான கீர்த்தி சுரேஷ் இதில் கதாநாயகியாக நடிக்கிறார். திரையுலகில் பரப்பரப்பாக பேசப்படும் இந்த இருவரின் ஜோடி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘பாம்பு சட்டை’ படத்தை புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்குகிறார், இவர் இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். K.G. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியின் வெற்றியாளரான அஜீஷ் அசோக் இசையமைப்பளாராக அறிமுகமாகிறார். கவிபேரரசு வைரமுத்து, யுகபாரதி, விவேகா, கார்க்கி வரிகளில் பாடல்கள் உருவாகின்றன. படத்தொகுப்பை ராஜா சேதுபதி மேற்கொள்கிறார். பாண்டியராஜ் கலையமைப்பில் பிருந்தா நடனம் அமைக்கிறார். பில்லா ஜகன் சண்டை பயிற்சி அமைக்கிறார்.
படம் தயாரிப்பாளர் மனோபாலா கூறும்பொழுது, “எனது முதல் தயாரிப்பான ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்திற்கு மக்கள் தந்த வெற்றியை மதிக்கின்றேன். ரசிகர்களை கவரும் வண்ணம் எனது அடுத்த தயாரிப்பு இருக்க வேண்டும், நல்ல படங்களை தயாரிப்பது ஒரு பழக்கமாக மாற வேண்டும் என்றும் எண்ணினேன். ஆடம் தாசன் இந்த கதையை கூறிய உடனே இப்படத்தை தயாரிப்பது என முடிவு செய்தேன்…” என பெருமிதத்துடன் கூறினார்.
“தன் திறமைக்கு ஈடு கொடுக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளை தேர்ந்தெடுத்து, தனது வித்தியாசமான நடிப்பால் மக்களை கவர்ந்துள்ள ‘ஜிகர்தண்டா’ நாயகன் பாபி சிம்ஹா இப்படத்திற்கு பெரும்பலம். ‘பாம்பு சட்டை’ திரைப்படம் சிம்ஹாவின் ஆற்றல் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் அபிமானத்தின் உண்மையான அடையாளத்தையும் வெளிபடுத்தும்.
கதாநாயகி கீர்த்தி சுரேஷ் ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்த முன்னாள் கதாநாயகி மேனகாவின் மகள். கீர்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. மேலும் ‘தாமிரபரணி’ புகழ் பானுவும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். கதையில் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரம் என்பதால் பானுவின் நடிப்பு பெரிதும் பேசப்படும்.
வெவ்வேறு திறமைகளின் கூட்டணி தயாரிப்பான இந்த ‘பாம்பு சட்டை’ பலரது நம்பிக்கையை பெற்றுள்ளது. இந்த கூட்டணி ரசிகர்களுக்கு நல்ல படத்தை கொடுக்கும்..” என்கிறார் தயாரிப்பாளர் மனோபாலா.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது.