‘பாம்பு சட்டை’ படத்தின் தயாரிப்பு கை மாறி மீண்டும் துவங்குகிறதாம்..!

‘பாம்பு சட்டை’ படத்தின் தயாரிப்பு கை மாறி மீண்டும் துவங்குகிறதாம்..!

வெற்றிகரமான இயக்குநராக, நடிகராக தமிழ் திரையுலகில் மின்னிக் கொண்டிருந்த மனோபாலா, ‘சதுரங்க வேட்டை’ திரைப்படம் மூலம் தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்து, அதிலும் வெற்றிகரமான தயாரிப்பாளராக உருவெடுத்தார்.

அந்தப் படத்தை தொடர்ந்து அவர் தன்னுடைய இரண்டாவது படமான ‘பாம்பு சட்டை’ படத்தை நடிகை ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வந்தார். இதில் பாபி சிம்ஹா – கீர்த்தி சுரேஷ்  ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

paambu sattai movie stills

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின்போது நடிகர் மனோபாலா ராதிகா-சரத்குமாருக்கு எதிர் கோஷ்டியான நடிகர் விஷால் டீமுக்கு ஆதரவு கொடுப்பதாக நினைத்த ராதிகா இந்தப் படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். மனோபாலாவுடனான ராதிகாவின் மோதல் வலுவாகி அவருடன் பேசுவதையே நிறுத்திவிட்டார் ராதிகா. இதனால் படத்தின் வேலைகளும்ம் நிறுத்தப்பட்டிருந்தன.

இதன் பின்பு பல பஞ்சாயத்துகள் நடந்து முடிந்து இப்போதுதான் இதற்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. தற்போது  பாம்பு சட்டை படத்தின் உரிமையை  பிரபல விநியோகஸ்தரான  ‘சினிமா சிட்டி’  கே.கங்காதரன் வாங்கியிருக்கிறாராம். இதனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மீண்டும் முழு வீச்சில் தொடங்க இருக்கிறது. 

“இந்தப் படத்தில் இதுநாள்வரையிலும் எடுக்கப்பட்ட சில காட்சிகளை நான் பார்த்தேன். அத்தனையும் என்னை வெகுவாக  கவர்ந்துவிட்டன. காலதாமதம் இந்த படத்தின் தரத்தை சற்றும் குறைக்காது. அறிமுக இயக்குநரான ஆடம்ஸ் இந்த படத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து இருக்கிறார்.

paambu sattai movie stills

ரசிகர்களின் ரசனைகளை நன்கு அறிந்தவர் தயாரிப்பாளர் மனோ பாலா சார். நிச்சயமாக அவர் தேர்வு செய்திருக்கும் இந்த திரைப்படம் வர்த்தக ரீதியாக அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

இந்த ‘பாம்பு சட்டை’ படத்தை நாங்கள் அபி & அபி நிறுவனத்தின் நிறுவனர் திரு. அபினேஷ் இளங்கோவனுடன் இணைந்து வெளியிட இருக்கிறோம். தயாரிப்பு துறையில் நாங்கள் அடியெடுத்து வைப்பதற்கு ‘பாம்பு சட்டை’ திரைப்படம் சிறந்ததொரு அஸ்திவாரமாக அமையும் என பெரிதும் நம்புகிறோம்…” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ‘சினிமா சிட்டி’ கே.கங்காதரன்.

எப்படியோ பாம்பு சட்டையை உரிச்சு புது சட்டையைப் போட்டா எல்லாருக்கும் சந்தோஷம்தான்..!

Our Score