மும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் ‘லென்ஸ்’ திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.
7-வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில் இந்தாண்டு தயாரிக்கப்பட்ட இந்திய திரைப்படங்கள் பலவும் போட்டியிட்டன.
இந்த விழாவின் போட்டிப் பிரிவில் ‘மாரிகொண்டவரு’, ‘வெய்ட்டிங்’, ‘இறுதிச் சுற்று’, ‘பஹாதா ரா லுஹா’, ‘வைசாகி லிஸ்ட்’, ‘சர்ப்ஜித்’, ‘சோலை’, ‘தல்வார்’, ‘ஏர்லிப்ட்’, ‘மோர் மண் கி பாரம்’, ‘நில் பட்டே சன்னாட்டா’, ‘பல்லா@ஹல்லா.காம்’, ‘மிதிலா மகான்’, ‘சதுரம்’, ‘அர்ஷிநகர்’, ‘நட்சாம்ராட்’ மற்றும் ‘நீரஜா’ போன்ற படங்கள் பங்கேற்றன.
இந்தியாவின் பிரபலமான படங்கள் பிரிவில், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய ‘லென்ஸ்’, ஹன்ஸ்லால் மேத்தாவின் ‘அலிகர்’, அபர்ணா சென்னின் ‘அர்ஷிநகர்’, மேக்னா குல்ஸாரின் ‘தல்வார்’, கேடி சத்யம் இயக்கிய ‘பாலிவுட் டைரிஸ்’, பவுத்தாயன் முகர்ஜியின் ‘தி வயலின் ப்ளேயர்’ போன்றவை திரையிடப்பட்டன.
இவற்றில் ‘லென்ஸ்’ படத்துக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்தது. படத்தின் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இந்த விருதினை நேரில் சென்று பெற்றுக் கொண்டார்.
ஏற்கெனவே ஸ்பெயின், மும்பை, சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளைக் குவித்துள்ள ‘லென்ஸ்’, திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.