‘அய்யன்’, ‘சேது பூமி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரான ஏஆர்.கேந்திரன் முனியசாமியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஓங்காரம்’.
இந்தப் படத்தை யெல்லோ சினிமாஸ் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஈ.கௌசல்யா பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார். ரேகா மற்றும் கார்த்திகா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றி இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் இயக்குநரான ஏஆர்.கேந்திரன் முனியசாமி கதையின் நாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடிகை வர்ஷா விஸ்வநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஸ்ரீதர், மதன் துரைசாமி, ஜிந்தா, முருகன், ஏழுமலையான், சிவக்குமார், டெல்டா வீரா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
சாம்.கே.ரொனால்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு வி.டி.பாரதி மற்றும் வி.டி.மோனிஷ் என்ற இரட்டையர்கள் இசையமைத்திருக்கிறார்கள். பல வெற்றிப் படங்களுக்கு பாடல்கள் எழதிய பாடலாசிரியரான ஞானகரவேல் இப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழதி இருக்கிறார். கலை இயக்கத்தை ஜெயசீலன் கவனிக்க, படத் தொகுப்பு பணிகளை வி.எஸ்.விஷால் மேற்கொண்டிருக்கிறார்.
இந்த ‘ஓங்காரம்’ படம் பற்றி இயக்குநர் கேந்திரன் முனியசாமி பேசுகையில், “மதுரை மாநகரை பின்னணியாக கொண்டு இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. மதுரையில் பிரபலமான தனியார் கல்லூரி ஒன்றில் உயர் கல்வி கற்கும் நாயகிக்கு, அக்கல்லூரியின் நிர்வாகத்தின் சார்பில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அவரின் குரல், பண பலம், அதிகார பலத்தால் நசுக்கப்படுகிறது. இந்நிலையில் சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளரான ‘புலி’யிடம் தன்னுடைய மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார் நாயகி.
அந்தப் பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ‘புலி’ என்னும் கதாபாத்திரம் மேற்கொள்ளும் தொடர் போராட்டங்களும், அதிகாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளும்தான் இந்தப் படத்தின் திரைக்கதை…” என்றார்.
இந்த ‘ஓங்காரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது.