full screen background image

படப்பிடிப்பின்போது உட்காரக் கூட முடியாத நிலையில் இருந்த நடிகர் அஜீத்..!

படப்பிடிப்பின்போது உட்காரக் கூட முடியாத நிலையில் இருந்த நடிகர் அஜீத்..!

“தமிழ் சினிமாவில் ‘தல’ என்று அழைக்கப்படும் நடிகர் அஜீத்குமார் ஒரு காலக்கட்டத்தில் சினிமா படப்பிடிப்புக்களில் உட்காரக்கூட முடியாத நிலையிலும் நடித்துக் கொடுத்தார்” என்கிறார் நடிகர் மனோபாலா.

இன்றைக்கு நடிகர் அஜீத்தின் 50-வது பிறந்த நாளையொட்டி அவரைப் பற்றி தன்னுடைய ‘வேஸ்ட் பேப்பர்’ யுடியூப் சேனலில் பேசிய மனோபாலா, “விசாகப்பட்டிணத்தில் ‘கிரீடம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது அங்கே செல்வதற்கு நேரடியாக விமான சேவையில்லாமல் இருந்தது. அந்த நேரத்தில் நாங்களெல்லாம் முன்கூட்டியே போய்விட்டோம். அஜீத் ஒரு படப்பிடிப்பில் இருந்தவர், அதை முடித்துக் கொண்டு பைக்கிலேயே விசாகப்பட்டிணத்திற்கு வந்து சேர்ந்தார்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஒரு சண்டைக் காட்சியில் அவர் நடித்தார். நின்று கொண்டிருக்கும் கார்களின் மீது ஏறியபடியே ஓடி வர வேண்டும். அவர் அப்படி ஓடி வரும்போது ஒரு அம்பாசிடர் காரில் ஏற முடியாமல் கீழே விழுந்தார். அந்தச் சப்தம் தூரத்தில் நின்று கொண்டிருந்த எங்களுக்கே நன்கு கேட்டது.

நாங்கள் விழுந்தடித்து ஓடி வந்து அவரைத் தூக்க நினைத்தபோது அவர் யாரும் தன்னைத் தொடக் கூடாது என்று சொல்லிவிட்டு.. அவரே தானாகவே கஷ்டப்பட்டு எழுந்தார். உடனேயே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

அங்கேயிருந்த மருத்துவர்கள் அஜீத்திற்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றார்கள். ஆனால் அஜீத்தோ அதற்கு மறுத்துவிட்டார். “இன்னும் ஒரு ஏழு நாள்தான் ஷூட்டிங் இருக்கு. அதை முடிச்சிட்டுப் பண்ணிக்கிறேன்…” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். அந்த மருத்துவர்கள் இயக்குநர் விஜய்யையும், தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜியையும் திட்டித் தீர்த்துவிட்டார்கள்.

ஆனாலும் அஜீத்தின் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு பேச முடியாமல் நாங்கள் திரும்பி வந்தோம். அந்தப் படத்தின் படப்பிடிப்பும் தொடர்ந்தது. மறுநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜீத் ஒரு தென்னை மரத்தைக் கட்டிப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்.

நான் போய் “சேர் போட்டு உக்காரலாமே..?” என்றேன். உடனேயே இரண்டு சேர்களைக் கொண்டு வரச் சொல்லி அதில் என்னை அமரச் சொன்னார். பின்பு என்னிடம் மெதுவாக ரகசியமாக, “என்னால இப்போ உக்காரவோ, எழுந்திருக்கவோ முடியாது.. நிக்கவோ, படுக்கவோதான் முடியும். இப்போதைக்கு என் உடம்போட கண்டிஷன் இதுதான். இதை யார்கிட்டேயும் சொல்லிராதீங்க. இந்த ஷூட்டிங்கை முடிச்சிட்டு நான் நேரா ஆஸ்பத்திரிக்குப் போறேன்..” என்றார்.

எனக்கும் என்ன சொல்றதுன்னே தெரியலை. மனதைக் கல்லாக்கிக் கொண்டு அந்த நாட்களைக் கழித்தேன். சரியாக அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் ஒரு ஸ்ட்ரெச்சரில் அஜீத்தை படுக்க வைத்து விமானத்தில் அவரை அழைத்து வந்து சென்னையில் மருத்துவமனையில் சேர்த்தோம். அதன் பின்புதான் அவருக்கு முதுகில் மேஜர் ஆபரேஷன் நடந்தது…” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் மனோபாலா.

 
Our Score