Featuring: Bala Hasan, Pavithra Janani, Vinodhini Vaidyanathan
Created, Written & Directed by – M. Dhinakaran Producer – S. Singaravelan Production – SS Group Music Director – RS Rajpratap Cinematography (DOP) – Mahendra M. Hendry Editor – Dorai Background Score – R.S.Rajpratap.
கிரைம் கதை வண்ணன் ராஜேஷ்குமாரின் கதையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
குற்றாலம் போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கிறார் பாலா ஹாசன். அதே குற்றாலத்தில் ஒரு கல்லூரியின் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த ஒரு இளைஞன் மர்மமான முறையில் குளியல் அறையில் இறந்து கிடக்கிறான்.
இறந்து போனவன் சப் இன்ஸ்பெக்டர் பாலா ஹாசனுக்கு மிகவும் தெரிந்தவன். அந்த வகையில் இந்த கேசை விசாரிக்க ஆரம்பிக்கும் பாலாவுக்கு “இது தற்கொலை அல்ல.. தற்செயலாக நடந்ததும் அல்ல.. நிச்சயம் இது ஒரு கொலையாகத்தான் இருக்கும்” என்று தோன்றுகிறது.
இதனாலேயே இந்த வழக்கை மேலும், மேலும் விசாரிக்க துவங்குகிறார். அவருடைய இன்ஸ்பெக்டரும் “கேசை முடிவிட்டு போகலாமே” என்று சொன்னாலும் பால ஹாசன் கேட்கவில்லை. இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று சொல்லி விசாரிக்க துவங்குகிறார்.
அந்த குளியல் அறையில் கிடைக்கும் கைரேகைகளை சோதித்துப் பார்த்ததில், மேலும் ஒரு நான்கு பேரின் கை ரேகைகள், இந்த ரேகையுடன் ஒத்துப் போகிறது என்பது தெரிய வருகிறது.
உலகில் எந்த ஒரு மனிதனின் கைரேகை இன்னொருவனுக்கு ஒத்துப் போகாது என்பது உலகளாவிய உண்மை. “அதெப்படி நான்கு பேரின் கைரேகை ஒன்றாக இருக்கும்” என்று பாலா சந்தேகப்பட்டு மீதம் இருக்கும் மூவரை பற்றி விசாரிக்கிறார்.
அப்படி அவர் விசாரிக்க போகும்பொழுதெல்லாம் அந்த மூன்று பேரும் இப்போதுதான் மரணம் அடைந்தார்கள். இப்போதுதான் செத்தார்கள்… என்ற செய்தி வர மேலும் அதிர்ச்சியாகிறார் பாலா ஹாசன்.
இந்த நால்வருக்கும் இடையில் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது. அதனால்தான் இவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு வித்தியாசமான முறையில் சாகடிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டுபிடிக்கிறார் பாலா ஹாசன்.
அவருடைய தேடுதல் வேட்டை வேக வேகமாக வளர கொஞ்சம், கொஞ்சமாக இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்தின் கதையும், திரைக்கதையும் விரிந்து கொண்டே போகிறது. இந்த பின்னணியில் ஒரு மருத்துவ மோசடி இருப்பதையும் கண்டுபிடிக்கிறார் பாலா ஹாசன்.
அந்த மோசடி என்ன..? யார் இந்த கொலைகளை செய்தது? இதையெல்லாம் பாலா ஹாசன் கண்டுபிடித்தாரா… இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் பாலா ஹாசன் சப் இன்ஸ்பெக்டர் வேடத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறார். போலீஸுக்கே உரித்தான உடல் அமைப்பு, அழகான ஒரு முகத்தோற்றம், எதார்த்தமான நடிப்பு, என்று தன்னை ஹீரோவாக நடிக்க வைத்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் சிறப்பு செய்திருக்கிறார் பாலா ஹாசன்.
பவித்ரா ஜனனி உடனான காதல் பேச்சுக்களால் முதல் 5 நிமிடங்களில் ஒரு அழகான காதல் கதையாக இந்தப் படம் மாறிவிடுமா என்ற பயத்தை நமக்குள் கொடுத்திருக்கிறார். பவித்ரா ஜன்னியுடன் நடக்கும் மோதல் உண்மையாகவே சுவாரசியமாக இருந்தது.
நாயகி பவித்ரா ஜனனி ஒரு அழகான நடிப்பையே காண்பித்திருக்கிறார். அழகாவும் இருக்கிறார். ஒரு பெண் கான்ஸ்டபிள் எப்படி இருப்பாரோ.. என்ன செய்வாரோ.. அதைத்தான் இந்தப் படத்திலும் இவரும் செய்திருக்கிறார். தன்னுடைய நிச்சயதார்த்தம் முடிந்த உடனேயே தன்னுடைய முன்னாள் காதலனுடன் ஜீப்பில் ஏறி “நானும் ஸ்பாட்டுக்கு விசாரிக்க போகிறேன்” என்று சொல்லாமலேயே அவர் காட்டியிருக்கும் நடிப்பை சூப்பர் என்றே சொல்லலாம்.
அரசு மருத்துவராக நடித்திருக்கும் வினோதினி கடமையை செய்யும் மருத்துவராக நமக்கு அறிமுகம் ஆகி கடைசியில் மிகப் பெரிய வில்லியாக உருமாற்றம் பெற்று “அடிப்பாவி” என்ற நம்முடைய வசவுகளையும் எதிர்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.
மேலும் படத்தில் நடித்திருக்கும் மற்றைய நடிகர், நடிகைகளுக்கும் இதுதான் முதல் படம். பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தி அவர்களை அழகாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
கிரைம், சஸ்பென்ஸ், திரில்லர் படங்களுக்கு பின்னணி இசை ரொம்ப, ரொம்ப முக்கியம். அந்த ரொம்ப ரொம்ப முக்கியத்தை இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ் பிரதாப் உணர்ந்து இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையாலும் சில இடங்களில் படத்தைக் கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு செய்திருக்கும் மகேந்திரா படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்துக்கு ஏற்ற வகையில் பல்வேறு வெவ்வேறு கோணங்களில் படப்பதிவு செய்து இயக்குநருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.
இது வெப் சீரிஸ் என்பதால் ஒவ்வொரு எபிசோடின் துவக்கமும், முடிவும் எதிர்பாராத சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்தப் படத்தை முதல் எபிசோடில் இருந்து கடைசி எபிசோடுவரையிலும் விடாமல் பார்க்க வைக்கும் அளவுக்கு படத் தொகுப்பு செய்திருக்கிறார் தொகுப்பாளர் துரை பிரகாஷ்.
ராஜேஷ்குமாரின் கதைகளில் அனைத்துமே சஸ்பென்ஸ், திரில்லராகத்தான் இருக்கும் அவருடைய கதையில் முதல் அத்தியாயத்தை தொடங்கிவிட்டால் கடைசி வரையில் அந்த முழு புத்தகத்தை படித்து கீழே வைத்தால்தான் படிப்பவர் மனசு ஆறும். அந்த அளவுக்கு நம்மை புத்தகத்தின் கதைக்கு உள்ளாக இழுத்து விடுவார் ராஜேஷ்குமார்.
அது போலவே இந்த தொடரின் திரைக்கதையையும் சினிமாவுக்காக மாற்றி அமைத்து அதையும் அழகாக எடுத்தும் காண்பித்திருக்கிறார் இயக்குநர் எம் தினகரன்.
ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு புது கதை கிரியேட் செய்யப்பட்டு அந்த கதைக்கான விளக்கமும் முடியும் அதே கதையின் இறுதியிலேயே முடிந்து அடுத்த டிவிஸ்ட் ஆரம்பிக்கிறது. இப்படியே ஒவ்வொரு எபிசோடையும் சஸ்பென்ஸ் திரில்லராகவே கொண்டு சென்று கொஞ்சம் கூட போர் அடிக்க விடாமல் அதே சமயம் ஒரு மெடிக்கல் கிரைமில் குற்றவாளிகள் எந்த அளவுக்கு எல்லாம் போவார்கள் என்பதை நமக்கும் உணர்த்தி இருக்கிறார் இயக்குநர்.
தொடர் கொலைகள்தான் என்றாலும் அந்தக் கொலைகளை அதிகமான ரத்தம் சிந்தாமல் ஒரு புதுவிதமான ஒரு டெக்னிகால் கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை நமக்கு காட்டி இருக்கிறார் இயக்குநர். அதேபோல் இதுவரையிலான சஸ்பென்ஸ், திரில்லர் கதைகளில் இந்த படம் ஒரு மிக வித்தியாசமான ஒரு கதையில் திரைக்கதையையும் கொடுத்திருக்கிறது.
இந்த வெப் சீரியஸ் சினிமாவாக எடுக்கப்பட்டிருந்தாலும் நிச்சயமாக பெரும் புகழை அடைந்திருக்கும். ஆனால் வெப் சீரியஸ் ஆக அமைந்துவிட்டது ஜீ-5 ஓடிடி தளத்திற்கு லாபம். திரைப்பட ரசிகர்களுக்கு நஷ்டம்!
RATING : 3.5 / 5









