full screen background image

ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ் – சினிமா விமர்சனம்

ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ஃப்ரைடே ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தமிழ் சினிமாவில் பத்திரிக்கை தொடர்பாளராகப் பணியாற்றும் கேப்டன் டிவி எம்.ஆனந்த் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் பரத், அபிராமி, தலைவாசல் விஜய், ராஜாஜி, கனிகா, ஷான், கல்கி, பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர், பி.ஜி.எஸ்.அருள் டிவி சங்கர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

எழுத்து இயக்கம் – பிரசாத் முருகன், ஒளிப்பதிவு – கே.எஸ்.காளிதாஸ், ஆர்.கண்ணா, இசை – ஜோஸ் பிராங்கிளின், படத் தொகுப்பு – ஷான் லோகேஷ், – கலை இயக்குநர் வி.கே.நடராஜன், வசனம், பாடல்கள் – எம்.ஜெகன் கவிராஜ், சண்டை இயக்கம் – சுகன், நடன இயக்கம் – ஷாம், பத்திரிகை தொடர்பு – கே.எஸ்.கே.செல்வக்குமார், மணி மதன்.

நான்கு வெவ்வேறு கதைகள். நான்கு வெவ்வேறு திரைக்கதைகள். வெவ்வேறு கதை மாந்தர்கள். இவர்களை ஒன்றிணைக்கும் ஒரு விஷயம். இந்த விஷயத்தினால் நடக்கும் நிகழ்வுகள்.. இந்த நிகழ்வுகள் இறுதியாக ஒரு புள்ளியில் ஒன்றாய் சந்திக்கின்றன. அதுதான் இந்த படம்.

நான்கு பல்வேறு சமூகச் சூழல் கொண்ட குடும்பத்தினர் ஒவ்வொருவிதமான துன்பவியல் பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர். இந்த நேரத்தில் அவர்களுடைய கைகளில் ஒரு துப்பாக்கி சிக்குகிறது. அந்தத் துப்பாக்கியினால் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களும், பிணைப்புகளும்தான் இந்த ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’ என்ற திரைப்படம்.

சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தன் வீட்டுக்குள் இருக்கும் மரத்தில் காய் பறிக்க வந்த ஒரு சிறுவனை தன் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார். வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக அந்தத் துப்பாக்கியை கூவம் ஆற்றில் வீசுகிறார் ராணுவ அதிகாரி. அப்படி அந்தக் கூவம் ஆற்றில் வீசப்பட்ட அந்தக் துப்பாக்கி ஒரு நாள் கரை ஒதுங்க, தற்செயலாக ஓருவரால் கண்டுபிடிக்கப்படுகிறது.

தொடர்ந்து அந்த துப்பாக்கியின் சகவாசமும், சாகசமும் நான்கு வெவ்வேறு கதைகள் மற்றும் அந்தக் கதை மாந்தர்களின் வாழ்க்கை நிகழ்வுகளில் சங்கிலித் தொடராகச் செல்கிறது. அந்தத் துப்பாக்கியின் பயணம்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.

அபிராமி ஒரு சாதாரண தெருக் கூட்டும் மாநகராட்சி ஊழியர். கணவர் இல்லை. அவருக்கு ஒரே ஒரு மகன். ஆனால், அந்த மகன் இப்போது திருநங்கையாக மாறிவிட்டார். தன்னுடைய சக்திக்கு மீறி தன் மகனை எப்படியாவது மருத்துவம் படிக்க வைத்து டாக்டர் ஆக்கிவிட வேண்டும் என்பது அபிராமியின் கனவு. அவர் நினைத்தது போலவே, அந்த திருநங்கை மகளை இப்பொழுது மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வைக்கிறார் அபிராமி.

இதற்காக பல்வேறு நபர்களிடமும் பணம் கடனாக வாங்கியிருக்கிறார். அப்படி கடனாக வாங்கிய ஒருவரிடம், பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் அல்லாடுகிறார் அபிராமி. கடன் கொடுத்த அந்த ரவுடி ஒரு நாள் வீடு புகுந்து அவருடைய திருநங்கை மகளிடம் அத்துமீறி நடந்து கொள்ள… இப்பொழுது அபிராமிக்கு கொலை வெறி வருகிறது. இந்த கொலைவெறி அவருக்குள் வந்த நேரத்தில் மிகச் சரியாக அவருடைய கையில் ஒரு துப்பாக்கி கிடைக்கிறது.

அந்தத் துப்பாக்கியை வைத்து அபிராமி என்ன செய்தார்..?

பரத் காதல் திருமணம் செய்தவர். அவருடைய மனைவி தன்னுடைய வீட்டை எதிர்த்து பரத்தை திருமணம் செய்திருக்கிறார். இந்த நேரத்தில் மனைவிக்கு இரண்டு கிட்னியும் பெயிலியர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதற்காக அவருக்கு இப்போது ஐம்பது லட்ச ரூபாய் பணம் தேவை.

பரத் அடிதடி, கொலை மாதிரியான சம்பவங்களில் ஈடுபட்டவர். கூலிப் படையாக இருந்தவர். இந்த நேரத்தில் அவருக்கு ஒரு கூலிப் படையாக செயல்பட வேண்டிய ஒரு வேலை வருகிறது. அதைத் திறம்பட செய்து முடித்தால் பணம் கிடைக்கும் என்ற நிலை. அந்தப் பணம் கிடைத்தால் தன் காதல் மனைவியை மீட்கலாம் என்ற ஒரு ஆவேசம் அவருக்குள் இருக்கிறது. இதற்காக அத்திட்டத்திற்கு ஒத்துக் கொண்டு கூலிப்படையாக மாறி செல்கிறார்.

அஸைன்மெண்ட்டை மிகச் சரியாகச் செய்து முடித்த பின்பு உடன் வந்த நண்பர்களுடன் பணத்தைப் பிரிப்பதில் குழப்பமும், சண்டையும் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் பரத்தின் கையில் ஒரு துப்பாக்கி சிக்க..

அந்தத் துப்பாக்கியை வைத்து பரத் என்ன செய்கிறார்..?

ஐ.டி.நிறுவனத்தில் வேலை செய்யும் பவித்ரா லட்சுமி மாற்று ஜாதியைச் சேர்ந்த தனக்குப் பிடித்த ஒருவரை காதலிக்கிறார். அவரையே திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார். ஆனால், பவித்ராவின் அப்பாவான தலைவாசல் விஜய் ஒரு தீவிரமான ஜாதி வெறியர். ஜாதி அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார். அவர் பவித்ராவின் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். எதிர்க்கிறார்.

ஆனால் பவித்ரா தன்னுடைய காதலில் உறுதியோடு இருந்து பதிவுத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து கொள்கிறார். இதுவும் தலைவாசல் விஜய்க்கு தெரிய வர அவர் கடும் கோபத்தில் தன் மகளை சந்திக்க கிளம்பி வருகிறார். வரும் வழியில் அவர் கையில் ஒரு துப்பாக்கி கிடைக்கிறது.

அந்தத் துப்பாக்கியை வைத்து தலைவாசல் விஜய் என்ன செய்தார்..?

அஞ்சலி நாயர் தன் அப்பா பார்த்து வைத்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு வருகிறார். அவருடைய மாமியார், மாமனார், வீட்டில் வேலை செய்யும் ஒரு இளைஞன் என்றிருக்கும் அந்த வீட்டில் தன் கணவனுடன் தன்னுடைய இல்லற வாழ்க்கையைத் துவக்குகிறார் அஞ்சலி நாயர்.

ஆனால் வந்த சில நாட்களில் அந்த வீட்டில் அவர் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்பது மட்டும் அஞ்சலிக்குத் தெளிவாக தெரிகிறது. அவருடைய கணவர் இல்வாழ்க்கையில் ஈடுபட விருப்பமில்லாதவராக இருப்பதும் பவித்ரா லட்சுமிக்கு கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது.

இந்த நேரத்தில் அவர் திடீரென்று கர்ப்பமாகிறார். ஆனால் அந்த கர்ப்பத்திற்கு தன் கணவர் காரணம் இல்லை என்பதை அவர் அறியும்போது அதிர்ச்சியடைகிறார். அந்த வீட்டில் இருக்கும் அனைவரின் மீதும் கொலை வெறி ஆகிறார் அஞ்சலி நாயர். அந்தக் கொலை வெறி நேரத்தில் அவருடைய கையிலும் ஒரு துப்பாக்கி கிடைக்கிறது.

அந்தத் துப்பாக்கியை வைத்து அஞ்சலி நாயர் என்ன செய்தார்..?

இவைகள்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.

இதுவரையிலும் தனி ஹீரோ, இரண்டு ஹீரோக்களில் ஒருவர் என்றெல்லாம் தன்னுடைய கேரக்டரில்  கவனம் செலுத்தி நடித்து வந்த பரத், இந்தப் படத்தில் நான்கு கதைகளில் ஒரு கதையில் மட்டும் நடிப்பதற்கு சம்மதித்து இந்தக் கதையைத் தேர்வு செய்ததற்காக அவருக்கு நமது பாராட்டுக்கள்.

உண்மையில் பரத் மிகச் சிறப்பாகவே இந்த படத்தில் நடித்திருக்கிறார். ஒரு முரட்டுத்தனமான தோற்றம். அத்தோற்றத்திற்கு மிக கச்சிதமாக அவருடைய உடல் வாகும், முகமும் அமைந்திருக்கிறது. தன் காதல் மனைவியை காப்பாற்றுவதற்காக எந்த எல்லைக்கும் போவதற்கு தயார் என்பதை அவர் நடிப்பில் காட்டியிருக்கிறார்.

அந்தப் பணம் மொத்தமும் வேண்டும் என்று வில்லனிடம் அவர் சொல்லுகின்ற பாணியும், முடிவில் பரத் செய்கின்ற செயலும் அவருடைய செயலை அப்போதைய கட்டத்தில் பார்வையாளர்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பாற்றலை கொடுத்திருக்கிறார் பரத்.

அவருடைய மனைவியாக நடித்தவரும் மருத்துவமனையில் படுத்த படுக்கையாய் இருக்கும் நேரத்திலும் னக்காக இவ்வளவு கஷ்டப்பட வேண்டாம் என்ற தனது  மன வேதனையை சொல்லும்போது நம்மையும் உருக வைத்திருக்கிறார். அவருடைய நண்பர்களாக நடித்த கல்கியும், ஷானும்கூட சிறப்பாக வசனம் பேசி நடித்துள்ளனர்.

ந்தப் படத்தின் ஒரு மிகப் பெரிய மனப் பாரத்தை இந்தக் கதையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு அந்த கதையில் நடித்தவர்களும் மிகச் சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.

அபிராமியின் சமீபத்திய படங்களில் அவர் காட்டியிருக்கும் நடிப்பினை பார்க்கும்போது இதுவரையிலும் தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் அபிராமியிடமிருந்து நடிப்பை வரவழைக்கவில்லையே என்று முந்தைய இயக்குநர்கள் மீது கோபம்தான் வருகிறது. அப்படி ஒரு அட்டகாசமான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார் அபிராமி.

இவ்வளவு அடித்தட்டு நிலையில் இருக்கும் அபிராமி, திருநங்கையாக மாறிய அந்த மகனை சட்டென்று ஏற்றுக் கொண்டு என் மகளை நான் டாக்டருக்குப் படிக்க வைப்பேன் என்று உறுதியாகச் சொல்லும் தனது கேரக்டர் ஸ்கெட்ச்சில் அசத்தியிருக்கிறார்.

மகளுக்காக அவர் படுகின்ற கஷ்டமும், பணத்துக்காக அவர் ஒவ்வொருவரிடமும் போய் கையேந்தி நிற்கும் அந்த அவலமும், அவமானப்படுத்துவதைத் தாங்கிக் கொள்ளும் விதமும் அபிராமியின் நடிப்பில் மின்னியிருக்கிறார்.

தன் மகளை என்ன செய்தார்கள் என்பது தெரியாமலேயே ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்று நினைத்து அவர் படுகின்ற துயரமும்… எது நடந்தாலும் பரவாயில்லை.. அதை மறந்துவிட்டு அடுத்த வேலையை பார்ப்போம் என்று அடுத்த கட்ட வேலைக்காக அவர் தன் மகளை தயார்படுத்தி தைரியம் கொடுக்கும் அந்த அற்புதமான அம்மா நடிப்பு, மிக சிறப்பு.

இவருடைய கையிலும் அந்தத் துப்பாக்கி வந்தவுடன் அந்த ட்ரிக்கரை அழுத்தும்போது முகத்தில் காட்டுகின்ற வெறி நிச்சயமாக ஒவ்வொரு அம்மாவின் முகத்திலும் இருக்கும்தான்..! இந்தக் கொலையை நியாயப்படுத்தும் அளவுக்கு தன் நடிப்பினால் நம்மை நம்ப வைத்துவிட்டார் அபிராமி.

அதேபோல் திருநங்கையாக நடித்தவரும் மிகச் சிறப்பாகவே தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தான் திருநங்கையாக மாறியதையும் அதை அம்மா அவ்வளவு எளிதாக தன்னை ஏற்றுக் கொண்டதை அவள் சொல்லுகின்றவிதமும் சிம்ப்ளி சூப்பர் என்று சொல்லலாம்.

தன்னிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் என்ன சொன்னார்கள், என்ன செய்தார்கள்.. என்பதை சொல்லாமல் அம்மாவிடம் அழுகின்ற அழுகையும், “இனி ஒவ்வொரு தடவையும் என்னை இப்படித்தானே செய்வார்கள்…” என்று அவர் கேட்கின்ற ஒரு கேள்வியும்தான் அம்மா அபிராமியை துப்பாக்கியை ஏந்த வைக்கிறது. அந்த கேள்விக்கான நடிப்பை மிகச் சிறப்பாக கொடுத்து இருக்கிறார்கள் திருநங்கையாக நடித்தவர். அவருக்கும் நமது பாராட்டுக்கள். இந்தக் கதையில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் ராஜாஜியும் சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

மூன்றாவதாக பவித்ரா லட்சுமியின் கதை ரொம்ப சிம்பிளானது. இதில் தலைவாசல் விஜய்யின் நடிப்புதான் பிரதானம். ஒரு அட்டகாசமான, ஆக்ரோஷமான ஜாதி வெறியரை அப்படியே நம் கண்முன்னே காட்டி இருக்கிறார் தலைவாசல் விஜய்.

அவர் பேசுகின்ற ஜாதிப் பித்துப் பிடித்த வசனங்களும், காரை ஓட்டி வருபவனிடம் அவர் பேசுகின்ற பேச்சும், தெனாவெட்டும், தைரியமும், கோபமும், ஆத்திரமும் எல்லாம் ஒன்று சேர்ந்து நம்மையே “அந்தாளைப் போட்டு தள்ளுடா” என்று சொல்ல வைக்கிறது. அந்த அளவுக்கு தன்னுடைய தீவிரமான நடிப்பை காண்பித்திருக்கிறார் தலைவாசல் விஜய்.

மகளின் திருமணத்தை தடுத்து நிறுத்த வந்தவர் அங்கே நடந்த குழப்பங்களை பார்த்துவிட்டு கதறி அழுவது கொடுமைதான். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அவர் படும் துயரமும் சோதனையானதுதான் என்றாலும், ஒரு ஜாதி வெறி பிடித்தவருக்கு இந்த தண்டனை நிச்சயம் தேவைதான் என்று நமக்குள்ளேயே சொல்ல வைத்திருக்கிறார் இயக்குநர்.

அதோடு பவித்ரா லட்சுமியின் அடக்கமான அழகான நடிப்பும் நம்மைக் கவர்கிறது. காரை ஓட்டி வரும் காதலனாக நடித்தவரின் கவுண்ட்டர் அட்டாக்கான பதிலும், நடிப்பும் அட்டகாசம்..!

நான்காவது கதையில் அஞ்சலி நாயரின் நடிப்பும் பிரமாதம்தான். ஒரு புரியாத ஒரு எதிர்பார்ப்புடன் அந்த வீட்டுக்குள் ஒரு மணப்பெண்ணாக உள்ளே வந்தவர் கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தினரை அட்ஜஸ்ட் செய்து போக வேண்டிய சூழலில் ஏற்படும் குழப்பத்தைத் தெளிவாகக் காண்பித்திருக்கிறார்.

கணவன் ஏன் தன்னை புறக்கணிக்கிறான் என்பது தெரியாமல் தவிக்கின்ற தவிப்பிலும், தன் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பதை அறிந்தவுடன் அவர் காட்டும் அதிர்ச்சியும் வேற லெவல்.

மாமியார் பொற்கொடியை அவர் சமாளிக்கின்ற விதமும், துப்பாக்கி அவர் கைக்கு வந்தவுடன் அவர் செய்கின்ற செயல் எல்லாமே “போட்டுத் தள்ளும்மா..” அப்படின்னு நம்மையும் சேர்ந்து சொல்ல வைக்கிறது.

இந்த கதையில் மாமியாராக நடித்த பொற்கொடியும், மாமனாராக நடித்தவரும்கூட மிக சிறப்பாக ஒரு அழுத்தமான நடிப்பை காண்பித்திருக்கிறார்கள். கணவராக நடித்தவர் தன் உடல் சார்ந்த பிரச்சனையை வெளியில் சொல்ல முடியாமல் தவித்துவிட்டு கடைசியாக அம்மா, அப்பாவிடம் அடிவாங்கிக் கொண்டு தன் மனைவிக்காக பரிந்து பேசுகிறார்.

இவருடைய பிரச்சினை குறித்த புரிதல் அப்பா, அம்மா, மனைவி மூவருக்குமே இல்லை என்பதை இன்னும் அழுத்தமான வசனங்களாக வைத்திருக்க வேண்டும். இயக்குநர் இதை மட்டும் கோட்டை விட்டுவிட்டார் என்று சொல்லலாம்.

ஒளிப்பதிவாளர்கள் காளிதாசன், கண்ணா இருவரும் ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு வித்தியாசமான கலர் டோனை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதுவே இந்தப் படத்திற்குக் கூடுதல் அழகைக் கொடுத்திருக்கிறது.

அஞ்சலி நாயர் கதை, அபிராமி கதை.. இரண்டுமே வேறு வேறு பேட்டர்னாக இருந்தாலும், அந்தக் கதைகளோடு ஒன்றி போகின்ற அளவுக்கான ஒரு மூடை கிரியேட் செய்திருக்கிறது ஒளிப்பதிவு.

பாடல்களைத் தவிர பின்னணி இசையிலும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து சில காட்சிகளை கூர்ந்து கவனிக்கவும் வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளின். பாடல்களில் மூன்று பாடல்களுமே ஒரு சிறப்பு என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பாடல் வரிகளும் மிக எளிதாக நம்முடைய காதுகளில் நுழைந்து இருக்கிறது.

ஷான் லோகேஷின் படத் தொகுப்பு படத்துக்கு மிகப் பெரிய பக்க பலமாக இருக்கிறது. இதுபோன்ற நான்கு அத்தாலஜி கதைகளை எல்லாம் ஒன்றாக கோர்ப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதையும் படம் பார்ப்பவர்கள் மனதில் உட்காரும்படியாக செய்வது என்பது இன்னும் அதிகமான ஒரு வேலை. அந்த வேலையை இந்தப் படத்தில் கச்சிதமாக செய்திருக்கிறார் படத் தொகுப்பாளர் ஷான் லோகேஷ்.

ஏனெனில் நான்கு கதைகளும் மாறி, மாறி வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு கதையின் காட்சிகள் முடிந்தவுடன் அடுத்தக் கதைக்கு திரைக்கதை மாறி.. அதுவும் முடிந்து இன்னொரு கதை வருகிறது. இப்படி மாறி, மாறி கதைகள் சொல்லப்பட்டாலும் நமக்கு போரடிக்காமல் இருக்கின்ற வகையில் திரைக்கதையை மிக சரியாக கணித்து இணைத்திருக்கிறார். படத் தொகுப்பாளருக்கு நம்முடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

படத்தில் இயக்குநருக்கு  பெரிய அளவுக்கு கை கொடுத்திருப்பது படத்திற்கு வசனகர்த்தாவான ஜெகன் கவிராஜின் அற்புதமான வசனங்கள்தான். ஒவ்வொரு கதையின் மாந்தர்களும் துப்பாக்கியை வைத்து செய்வது சட்ட விரோத செயல்தான். சட்டத்தை மீறிய செயல்தான். ஆனால் அதைச் செய்ய வைப்பது அவர்களை சூழ்ந்திருக்கும் சந்தர்ப்பமும், சூழ்நிலையும்தான்.

இதனை தன்னுடைய அழுத்தமான வசனங்களினால் பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். படத்தில் இடம் பெறும் பல  வசனங்கள் பாராட்டுக்குரியவை. காரில் வரும்போது பரத்தும், அவரது நண்பர்களும், மதம், கடவுள் பற்றிய வசனங்களும், ராஜாஜியும், அபிராமியும் பேசும் காட்சிகளிலும், அம்மா மகள் பேச்சுக்களும், தலைவாசல் விஜய் தன் சாதிப் பெருமையைப் பேசும் பேச்சுக்களும் எல்லாமே மிக சிறப்பு. ஜெகன் கவிராஜூக்கு நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..!

படத்தின் இயக்குநர் பிரசாத் முருகனுக்கு, இது அவருடைய முதல் படம் முதல் படம் என்று தெரியாத அளவுக்கு மிக அழகாக படத்தை இயக்கி தந்திருக்கிறார். படத்தில் எந்த ஒரு கேரக்டரும் நடிப்பில் சோடை போகவில்லை. அந்த அளவுக்கு மிக அழுத்தமாக அவர்களை நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த நடிப்புக்கு இயக்குநர்தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மிக சிறப்பான இயக்கத்தையும் அவர் கொடுத்திருக்கிறார்.

போரடிக்காத வண்ணம் ஒரு திரைக்கதையை எழுதுவது என்பது சாதாரண வேலை அல்ல. அது ஒரு சிறந்த படைப்பாளிக்கு மட்டுமே கை வந்த கலை. அந்தக் கலை பிரசாத் முருகனுக்கும் இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

கதையின் மாந்தர்களை அவர் தொடர்புபடுத்தியிருக்கும்விதமும், துப்பாக்கி கை மாறி, கை மாறி செல்வதை எந்தவொரு லாஜிக் எல்லை மீறலும் இல்லாமல் உண்மையாக நம்பும்படி செய்திருக்கிறார். அதேபோல் பரத்துக்கும், கனிகாவுக்கும் இடையிலான தொடர்பினை கடைசியாக சொல்லும்போது “அட!” என்று நம்மை பாராட்டவும், திகைக்கவும் வைத்திருக்கிறார்.

இயக்குநர் இன்னும் பல திரைப்படங்களை இயக்கக் கூடிய ஒரு ஆற்றல் உள்ளவராக இருக்கிறார். அந்த ஆற்றலை அவர் இன்னும் பல படங்களில் வெளிக்காட்டுவார் என்று நம்புகிறோம்.

ஒட்டுமொத்தமாக பார்க்க போனால் இத்திரைப்படம் ஒரு சுவையான கமர்சியல் கலந்த திரைப்படம் என்று சொல்லலாம். படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்பொழுது, “இப்படி ஒரு சூழல் நமக்கு வந்தால், நாம் என்ன செய்வோம்?” என்ற கேள்வியை நமக்குள் இத்திரைப்படம் விதைக்கிறது. இதுதான் இத்திரைப்படம் நமக்கு கொடுக்கின்ற பாடம்.

சரியோ, தவறோ… சட்டத்துக்கு புறம்பானதோ.. சட்டத்துக்கு விரோதமானதோ… சந்தர்ப்பமும், சூழலும்தான் ஒரு மனிதரை குற்றவாளியாக்குகிறது என்பதை இத்திரைப்படத்தின் மூலமாக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பிரசாத் முருகன்.

இந்த மாதிரியான அத்தாலஜி திரைப்படங்கள் தமிழில் இதற்கு முன் நிறையவே வந்திருக்கின்றன. மாநகரம்’ திரைப்படத்தைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அதுபோலவே அதே பார்வையில் வந்திருக்கும் இந்தப் படமும், நிச்சயமாக தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ் – அவசியம் பார்க்க வேண்டிய படம். மிஸ் பண்ணிராதீங்க..!

RATING : 4.5 / 5

Our Score