full screen background image

ஓம் சாந்தி ஓம் – சினிமா விமர்சனம்

ஓம்  சாந்தி ஓம் – சினிமா விமர்சனம்

‘தி கோஸ்ட்’ என்ற பெயரில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படத்தின் மையக் கருவினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்தப் படத்தின் கதை.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்த ‘மாசு என்கிற மாசிலாமணி’ படத்தின் கதையும் இதுவும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

இந்தப் படம் ‘மாசு’ படத்திற்கு முன்பேயே தயாராகி சில, பல உள்ளடி வேலைகளினால் ஓரம்கட்டப்பட்டு இப்போதுதான் திரைக்கு வந்திருக்கிறது.

ஹீரோ ஸ்ரீகாந்த் கார் விற்பனை நிறுவனத்தில் மேனேஜராக இருக்கிறார். ஹீரோயின் நீலத்தை பார்த்தவுடன் படக்கென்று லவ்வில் விழுந்து காதலிக்கத் துவங்குகிறார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கி உயிர் பிழைத்திருக்கிறார் ஸ்ரீகாந்த். இப்போது அவரது கண்களுக்கு மட்டும் அந்த விபத்தில் அவருடன் பயணித்து மரணமடைந்தவர்கள் 5 பேர் தெரிகிறார்கள்.

ஆளுக்கொரு பிரச்சினையைச் சொல்கிறார்கள். அதைத் தீர்த்து வைக்கும்படி கேட்கிறார்கள். முதலில் மறுக்கும் ஸ்ரீகாந்த், பின்பு அவர்களின் உதவியில் இருக்கும் நல்ல விஷயத்தை கருத்தில் கொண்டு ஒத்துக் கொள்கிறார்.

ஜூனியர் பாலையா தன் பேத்தியின் திருமணச் செலவுக்காக நான் கடவுள் ராஜேந்திரனிடம் கொடுத்து வைத்திருக்கும் 10 லட்சம் ரூபாய் பணத்தை மீட்டுத் தரச் சொல்கிறார். ராஜேந்திரனை ஏமாற்றி அந்தப் பணத்தை மீட்டுத் தருகிறார் ஸ்ரீகாந்த்.

அடுத்து வினோதினி தனது மகன் காலாவதியாகிப் போன மருந்தினை சாப்பிட்டுத்தான் இறந்து போனான். அதனால் தன் கணவரே தன்னை தவறாக நினைத்துவிட்டார். இதனால் அந்த மருந்து கடைக்காரனை பழி வாங்க வேண்டும் என்கிறார்.

அந்த மருந்து கடைக்காரன் மற்றும் காலாவதியான மருந்துகள் விற்பனை பற்றி மீடியாக்களிடம் செய்தி பரப்பி அந்த மருந்து கடைகள் மற்றும் மருந்து கம்பெனியின் ஹோல்சேல்ஸ் குடோன்களை சீல் வைக்க ஏற்பாடு செய்கிறார் ஸ்ரீகாந்த்.

தனக்கு ஐஸ்கிரீம் சாப்பிட ஆசை. அதை நிறைவேற்றித் தரும்படி ஒரு சின்னப் பையன் கேட்கிறான். அவனைத் தனக்குள் ஏற்றி வைத்துக் கொண்டு வயிறு வலிக்கும் அளவுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டு அவனது ஆசையையும் தீர்த்து வைக்கிறார் ஸ்ரீகாந்த்.

தான் காதலித்த பல் மருத்துவரையே தனது தோழியும் காதலித்திருக்கிறாள். ஆனால் அது தன்னைக் காதலித்தவனுக்குத் தெரியாது. எப்படியாவது அவர்கள் இருவரையும் சேர்த்து வையுங்கள் என்கிறாள் இளம் பெண்ணா ஆவி. இதையும் மிக எளிதாக தீர்த்து வைக்கிறார் ஸ்ரீகாந்த்.

கடைசியாக ஒரு கோவில் குருக்கள்.. தனது மகளின் டாக்டர் படிப்புக்காக 50 லட்சம் ரூபாயை கட்டியும் சீட் தராமல் ஏமாற்றிவிட்டதாகச் சொல்லி புலம்புகிறார். தனது மகளுக்கு சீட் வாங்கித் தரும்படி கேட்கிறார்.

இவரை ஏமாற்றிய ‘ஆடுகளம்’ நரேனுடனும், அவரது அடியாட்களுடனும் போராடி சண்டையிட்டு இதையும் மீடியாக்களின் துணையுடன் வெளிப்படுத்தி சீட் வாங்கித் தருகிறார் ஸ்ரீகாந்த்.

இப்படி இவர்கள் ஒவ்வொருவரின் ஆசையையும் நிறைவேற்றும் நேரங்களில் இவர் நடந்து கொள்ளும் முறையைப் பார்த்து இவரது காதலி நீலம், காந்த் ஒரு பைத்தியமோ என்றெண்ணுகிறார். அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சைக்காக ஏற்பாடு செய்கிறார். இது ஸ்ரீகாந்துக்கு கவுரவப் பிரச்சினையாக கடைசியில் காதலர்களுக்குள் பிரிவு ஏற்படுகிறது.

“எங்களால்தானே உங்களுடைய காதல் பணாலானது. நாங்களே அதனை சேர்த்து வைக்கிறோம்…” என்று சொல்லி 5 பேய்களும் ஒன்று சேர்ந்து நீலத்திடம் உண்மையைச் சொல்லி காதலர்களை சேர்த்து வைக்கிறார்கள். இவ்வளவுதான் படமே..!

ஸ்ரீகாந்தின் நடிப்புக்கு எப்படி பெரிய எதிர்பார்ப்பு இல்லையோ.. அது போலத்தான் படத்திலும் பெரிய ஸ்கோப் இல்லை. ஆனால் விபத்தை படமாக்கியவிதமும், அந்தக் காட்சியில் ஸ்ரீகாந்தின்  நடிப்பும் ஒரு பரிதாபத்தை வரவழைத்துவிட்டது. ராஜேந்திரனின் ‘டாடி’ வசனமும், ஆடுகளம் நரேனின் பண்பட்ட நடிப்பும் காந்தையும் கொஞ்சம் காப்பாற்றியிருக்கிறது.

நீலம் உபோத்யாயா. அழகி. பேரழகி. எங்கேயிருந்து பிடித்தார்களென்று தெரியவில்லை. இன்னும் நான்கைந்து படங்களிலாவது நடித்தால் நன்றாக இருக்கும். வசன உச்சரிப்புகூட பல படங்களில் நடித்த அனுபவமுள்ளவர்போல இருக்கிறது. இயக்குநரின் திறமைக்கு ஒரு சான்று இது.

ஸ்ரீகாந்தை தனது ‘டாடி’ என்றெண்ணி காமெடி செய்யும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்.. அழுத்தமான வில்லன் வேடத்தில் ‘ஆடுகளம்’ நரேன்.. ஜீனியர் பாலையா, வினோதினி, அவரது கணவர், அத்தனை அடி வாங்கியும் தெம்பாக பேசும் அந்த மருந்து கடைக்காரர், என்று அனைவருமே அவரவர் கேரக்டர்களில் நன்கு நடித்துள்ளனர்.

இன்னொரு பக்கம் பாராட்ட வேண்டியது ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கரனை. பல காட்சிகள் பகலாக இருந்தும் திருச்சி மாநகரை அடையாளம் காட்டி அசத்தலாகப் படம் பிடித்திருக்கிறார். மருந்து கடைக்கார்ரை ஸ்ரீகாந்த் அடித்து விரட்டும் காட்சியில் கேமிராவின் இயக்கமும், இயக்குநரின் இயக்கமும் அருமை.

பாடல் காட்சிகள்தான் இந்தப் படத்தை அதிகம் சோதித்துவிட்டன. பாடல்களே இல்லாமல் இருந்திருந்தால் படம் இன்னமும் கொஞ்சம் கிரிப்பாக இருந்திருக்கும். ஆனாலும் பாடல் காட்சிகளை கம்போடியாவில் ரசனையாக படமாக்கியிருக்கிறார்கள். சூப்பர் லொகேஷன். கம்போடிய அரண்மனை, கோவில்கள் என்று அனைத்தையும் படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். நன்றி.

விஜய் எபிநேசரின் இசையில் பாடல்கள் ஒரு முறை மட்டுமே கேட்கும் ரகமாக இருக்கிறது. பாடல் காட்சிகளை ஒளிப்பதிவாளர் தயவால் பார்க்கும்படி படமாக்கியிருப்பதால் குறையொன்றுமில்லை.

டி.சூர்ய பிரபாகரின் இயக்கத்தில் குறைவில்லை. ஆனால் கதை சுட்டது என்பதால் அந்தப் பாராட்டு ஒரிஜினல் கதாசிரியருக்கு போய்ச் சேரட்டும். இயக்கத்தில் குறைவில்லாமல் இயக்கியிருக்கிறார். ஏற்கெனவே பார்த்த படம் போலவே கதை இருப்பதால் ரசிகர்களுக்கு அடியோடு எதிர்பார்ப்பு இல்லாமல் போனது இந்தப் படத்திற்குக் கிடைத்த துரதிருஷ்டம். ‘மாசு’ படத்திற்கு முன்பே இது வந்திருந்தால் நிச்சயம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றிருக்கும்..!

எடுத்தவரைக்கும் இப்போதும் குறையில்லைதான். ஒரு முறை பார்க்கலாம்தான்..!

Our Score