full screen background image

ஆத்யன் – சினிமா விமர்சனம்

ஆத்யன் – சினிமா விமர்சனம்

ஒரு சின்னக் கதையை சுவாரசியமான திரைக்கதை மற்றும் அழுத்தமான இயக்கத்தின் மூலம் இரண்டு மணி நேரமும் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் ராம் மனோஜ் குமார்.

ஹீரோ அபிமன்யூ ஜப்பானில் வசிப்பவர். தமிழர். அங்கேயே வளர்ந்தவராக இருந்தாலும் அவருடைய தந்தையின் பழக்கத்தினால் தமிழ் மொழியை நன்கு கற்று தேர்ந்திருக்கிறார். கட்டினால் தமிழ்ப் பெண்ணைத்தான் கட்ட வேண்டும் என்கிற ஆசையையும் உடையவர்.

ஹீரோயின் சாக்ஷி அகர்வால் சென்னையில் இருப்பவர். இவர்கள் இருவரும் முகநூலில் பழக்கம் கொண்டு நாளடைவில் காதல் கொண்டுள்ளனர். அபிமன்யூ, சாக்சியை பார்க்க சென்னைக்கு வருகிறார். இதில்தான் படமே துவங்குகிறது.

அடையாரில் தனக்குத் தெரிந்த நண்பரொருவரின் வீட்டுக்கு தங்குவதற்காக வருகிறார். அந்த வீட்டில் ஏற்கெனவே ஒரு பெண் தற்கொலை செய்து இறந்து போயுள்ளதால் அது பேய் வீடு என்று அந்த குடியிருப்பின் வாட்ச்மேனும் பயமுறுத்துகிறான்.

கால்டாக்சியில் வீட்டிற்கு வரும் வழியிலேயே அபிமன்யூவிற்கு அடிக்கடி தலை சுற்றல் வருகிறது. தூக்கம் வருகிறது. வீட்டிற்கு வந்தும் ஷவரில் குளிக்கும்போதே தலை சுற்றும் அளவுக்கு சோர்வாகிறார்.

காதலி சாக்சி மதியம் 1 மணிக்கு மாயாஜாலுக்கு வரச் சொல்கிறார். வருகிறேன் என்று சொன்னவர் சட்டென்று மயங்கி விழுந்து தூங்கிவிடுகிறார். ! மணி 20-வது நிமிடத்தில் கண் முழித்தவர் அரக்கப் பரக்க மாயாஜாலுக்கு கிளம்புகிறார். அங்கே மிக தாமதமானதால் சாக்சியை கண்டுபிடிக்க முடியவில்லை.

போதை மருந்து கடத்தல் தொழிலை செய்யும் ஜெனீஷும், அபிமன்யூ வந்த கால் டாக்சியின் டிரைவர் மகேஸ்வரனும், இந்தப் பகுதியின் போலீஸ் இன்ஸ்பெக்டரான ஜெய்சந்திரனும் பால்ய வயதில் இருந்தே நண்பர்கள். இப்போது மூவரும் கூட்டணி அமைத்து போதை மருந்துகளை கடத்தி வருகிறார்கள். விற்பனை செய்கிறார்கள். காசை அள்ளுகிறார்கள்.  

இந்த நேரத்தில் இந்த ஜெனீஷின் ரவுடி கும்பலால் கடத்தப்படுகிறார் அபிமன்யூ. அவர் ஏன் கடத்தப்பட்டார்..? கடைசியில் என்ன ஆனார்..? என்பதெல்லாம் நிச்சயமாக சஸ்பென்ஸான விஷயங்கள்.

படத்தில் முதல் காட்சியில் இருந்தே இயக்குநரின் இயக்கத் திறமை பளிச்சிடுகிறது. ஏதோ ஒன்று படத்தில் இருக்கிறது என்று சொல்ல வைக்கிறது. படத்தின் இறுதிவரையிலும் அந்த மாயத்தை இயக்குநர் செய்திருப்பதால் கடைசிவரையிலும் சுவாரஸ்யமாக பார்க்க முடிகிறது.

கதைக் கருவை பிரதானமாக வைத்து திரைக்கதை அமைக்காமல் பல்வேறு அனுமானங்களுக்கு இடம் கொடுத்து அதாக இருக்குமோ.. இதாக இருக்குமோ என்றெல்லாம் சஸ்பென்ஸை கொடுத்துவிட்டு இடைவேளைக்கு பின்புதான் முடிச்சை அவிழ்த்திருக்கிறார் இயக்குநர். அந்த இடம் ரசிப்பானது..!

ஹீரோ அபிமன்யூ ஏற்கெனவே ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் சிபிராஜூடன் நடித்தவர்தான். இந்தப் படத்தில் சென்னைக்கு புதிது என்பதால், சரளமாக தமிழ் பேசுபவரிடம் அதிகமாக தமிழ் பேசாதவர் எப்படி பேசுவாரோ அப்படி பேச வைத்திருக்கிறார் இயக்குநர். இந்த அளவுக்கு துல்லியமாக கேரக்டர் ஸ்கெட்ச்சை வடிவமைத்திருக்கிறார். பாராட்டுக்கள்.

கிளைமாக்ஸில் வைத்திருக்கும் ஒரு டிவிஸ்ட்.. அதைத் தொடர்ந்து வரும் சண்டை காட்சிகள் அழகு. மிரட்டல் செல்வாவின் சண்டை காட்சிகள் இந்தப் படத்திற்கு இன்னொரு சிறப்பு என்று தைரியமாகவே சொல்லலாம்.

ஒரு காட்சி.. ஒரு ஷாட்டில்கூட தேவையில்லாமல் எந்தவொரு ஆளையும் காட்டாமல், வசனத்தையும் கூட்டாமல் மிக எளிமையாக அமைத்திருக்கிறார். இதனாலேயே படத்தை அதிகம் ரசிக்க முடிந்திருக்கிறது.

ஹீரோயின் சாக்சியின் இரண்டு நண்பிகளும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு காதலை ஒருவர் ஆதரித்தும், இன்னொருவர் எதிர்த்துமாக குழப்புகிறார்கள். இந்தக் காட்சிகளைகூட யதார்த்தமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். சாக்சியின் தமிழ் உச்சரிப்பும், பாடல் காட்சிகளின் பாடல்களின் உச்சரிப்பு நடிப்பும் திறனாகவே வந்திருக்கிறது. வரவழைத்திருக்கிறார் இயக்குநர்.

ரவுடி கும்பல் தலைவனாக இருக்கும் ஜெனீஷ், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜெயச்சந்திரன், கால் டாக்சி டிரைவரான மகேஸ்வரன் மூவருமே வில்லன்களாக ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். டிரைவர் மகேஸ்வரனின் ஓவர் பேச்சு எதையோ உணர்த்துவதுபோல முதலில் காட்டினாலும் பின்பு உண்மை தெரியும்போது அதிர்ச்சியாகிறது. அபிமன்யூவை கடத்தி வந்தவுடன் அவருடன் பேசும்பேச்சில் இருக்கும் டிரைவர் மகேஸ்வரனின் எகத்தாள நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது.

படத்தின் துவக்கத்தில் இருந்து முடிவுவரையிலும் இயக்குநருக்கு இன்னொரு மிகப் பெரிய பலமாக இருந்திருப்பவர் ஒளிப்பதிவாளர் எம்.சீனிவாசன். பலே கூட்டணி. மெரீனா கடற்கரையில் மாலை நேர காட்சிகளில் இதுவரைக்கும் இப்படியொரு அழகினை கண்டதில்லை. அவ்வளவு அழகாக படமாக்கியிருக்கிறார். வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

பாடல் காட்சிகளை ரம்மியமாக எடுத்திருந்தாலும் பாடல்கள் எடுபடாமல் போயிருக்கின்றன. ‘உயிரைத் தேடி ஓடுகிறேன்’ பாடல் மட்டுமே கேட்க வைத்திருக்கிறது. ஆனாலும் பின்னணி இசையில் ஜொலித்திருக்கிறார் இசையமைப்பாளர். பல காட்சிகளை ரசிக்க வைத்தமைக்கு பின்னணி இசையும் ஒரு காரணம்..!

மிகக் குறைந்த பட்ஜெட்டில் 30 நாட்கள் படப்பிடிப்பில் ஒரு நிறைவான படத்தினை எடுத்துக் காண்பித்திருக்கிறார் இயக்குநர் ராம் மனோஜ் குமார். ‘நாய்கள் ஜாக்கிரதை’ திரைப்படத்தில் மட்டுமே உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவத்தோடு இவர் இயக்கியிருக்கும் இந்தப் படம் புதிய இயக்குநர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருக்கிறது.

Our Score