ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டில்லி பாபு மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் அபிநயா செல்வம்-அசோக் செல்வன் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் இருவரும் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். வாணி போஜன் மற்றும் ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, விஜய் சேதுபதி, ராம் திலக்குடன் இணைந்து ஒரு கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.
எழுத்து, இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து, இசை – லியான் ஜேம்ஸ், ஒளிப்பதிவு – விது அயன்னா, படத் தொகுப்பு – பூபதி செல்வராஜ், கலை இயக்கம் – இராமலிங்கம், உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன், உடைகள் – முகம்மது சுபையர், சண்டை இயக்கம் – ராம்குமார், பாடல்கள் – கோ சேஷா, புகைப்படம் – ராஜா, தயாரிப்பு மேற்பார்வை – சேது ராமலிங்கம், பூர்னேஷ், நிர்வாக தயாரிப்பு – நோவா. நேரம் : 2 மணி 34 நிமிடங்கள்.
இப்படத்தை Sakthi Film Factory நிறுவனத்தின் சார்பில் பிரபல விநியோகஸ்தர் சக்திவேலன் தமிழகமெங்கும் வெளியிட்டுள்ளார்.
இன்றைய நவநாகரீக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்லியிருக்கிறது இந்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம். இது வெறும் ரொமான்ஸ் படம் மட்டுமே இல்லை. உறவுகளின் வலிமையை, நட்பின் பெருமையை பேசும் படமாகவும் இருக்கிறது.
‘அர்ஜூன் மாரிமுத்து’ என்னும் அசோக்செல்வனும், ‘அனு’ என்னும் ரித்திகா சிங்கும் சிறு வயதில் இருந்தே ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்து வந்தவர்கள். இவர்களுடன் ‘மணி’ என்னும் ஷாராவும் அடக்கம்.
இப்போது அசோக்செல்வனும், ரித்திகாவும் ஒரே கல்லூரியில் பொறியியல் பட்டப் படிப்பையும் படித்து முடித்திருக்கிறார்கள். ஆனால் அசோக்செல்வன் மட்டும் அரியர்ஸ் வைத்து பின்புதான் தேர்வாகியிருக்கிறார்.
வேலைக்குச் செல்வதைவிடவும் சினிமாவில் நடிப்பதை பெரிதும் விரும்புகிறார் அசோக் செல்வன். இதற்காக தனது அப்பாவிடம் “இந்த ஒரேயொரு வருடம் மட்டும் நான் சினிமாவில் நடிக்க முயல்கிறேன். முடியவில்லையென்றால் உங்கள் விருப்பப்படியே பொறியியல் வேலைக்கே செல்கிறேன்” என்கிறார் அசோக் செல்வன். அவரது தந்தை இதற்கு ஒத்துக் கொள்ள.. சினிமாவில் நடிக்க முயன்று வருகிறார் அசோக்.
இந்த நேரத்தில் ரித்திகாவிற்கு கல்யாண ஏற்பாடுகளை அவரது அப்பா செய்து வருகிறார். இது பிடிக்காத ரித்திகா தெரியாத ஒரு ஆளுக்கு கழுத்தை நீட்டுவதைவிடவும், தெரிந்த ஆளைக் கட்டிக் கொள்வது நல்லது என்னும் பாணியில் அசோக் செல்வனிடம் “நாம் இருவரும் கல்யாணம் செஞ்சுக்கலாமா..?” என்று கேட்கிறார்.
முதலில் மறுக்கும் அசோக் செல்வன் பின்பு குடிபோதையில் இந்தத் திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார். திருமணமும் முடிகிறது. ஆனால் முதல் இரவில் தனது மனைவியைத் தொட முடியாமல் தவிக்கிறார் அசோக். அவருக்கு ரித்திகாவை மனைவியாய் பார்ப்பதில் உளவியல் ரீதியாக சிக்கல் ஏற்படுகிறது.
ஹனிமூன் முடிந்த கையோடு மாமனாரின் டாய்லெட் பாக்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் குவாலிட்டி கண்ட்ரோலராக வேலை செய்யத் துவங்குகிறார் அசோக். ஆனால் இந்த வேலை அவருக்குப் பிடிக்கவில்லை. இன்னொரு பக்கம் தன்னை நெருங்காமலும், அவருடன் பிடிக்காமலும் இருக்கும் அசோக்கை நினைத்து ரித்திகா கோபப்படுகிறார். இருவரும் வீட்டில் டாம் அண்ட் ஜெர்ரியாக வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.
இந்த நேரத்தில் பள்ளிக்கூட வாழ்க்கையின்போது அசோக்கின் சீனியராக இருந்த வாணி போஜன் அசோக்கை சந்திக்கிறார். தான் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக இருப்பதாகவும் அவருடைய பட ஷூட்டிங்கிற்காக அசோக்கின் அலுவலகம் கிடைக்குமா என்று வினவுகிறார் வாணி.
சினிமா ஷூட்டிங் என்றவுடன் யாரையும் கேட்காமல் அசோக் ஓகே சொல்கிறார். ஆனால் இதனை ரித்திகா கேள்வி மேல் கேள்வி கேட்டு ரத்து செய்கிறார். இது விஷயமாக தம்பதிகளுக்குள் மோதல் ஏற்படுகிறது. கூடவே வாணி போஜனின் நட்பு பற்றியும் கேள்வி எழ பிரச்சினை பெரிதாகி டைவர்ஸ்வரையிலும் கொண்டுபோய்விடுகிறது.
இப்போது கோர்ட்டில் பிரச்சினை இருக்க.. காலையில் நடந்த விசாரணையின்போது ரித்திகா சிங் மயங்கி விழுந்துவிட்டதால் மாலை 4 மணிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது.
இந்த இடைப்பட்ட நேரத்தில் அசோக்கை நிஜ கடவுளான விஜய் சேதுபதியும், அவரது உதவியாளரான ரமேஷ் திலக்கும் சந்திக்கின்றனர். தன்னுடைய வாழ்க்கைக் கதையை கடவுளிடம் சொல்லிப் புலம்புகிறார் அசோக். கடவுள் அவருக்கு இன்னொரு வாய்ப்பினைத் தருகிறார்.
இந்த வாய்ப்பு ரித்திகா “நாம கல்யாணம் செஞ்சுக்கலாமா” என்று அசோக் செல்வனிடம் கேட்பதில் இருந்து மீண்டும் துவங்குகிறது. “இந்த முறை தப்பு செய்யாமல் பார்த்துக்க…” என்று கடவுளார் சொல்லியனுப்ப படம் மீண்டும் அந்தப் பகுதியில் இருந்து துவங்குகிறது..
இறுதியில் என்னாகிறது என்பதுதான் இந்தச் சுவாரஸ்யமான திரைப்படத்தின் திரைக்கதை.
மனித வாழ்க்கையில் கடந்து போன நிமிடங்களை திரும்பவும் சந்தித்து அந்த நிமிடங்களில் இருந்து மீண்டும் ஒரு வாழ்க்கையைத் துவக்கினால் எப்படியிருக்கும் என்பது பற்றிய கோணத்தில் பல திரைப்படங்கள் இதுவரையிலும் தமிழ்ச் சினிமாவில் வந்திருக்கின்றன.
‘12-பி’ படத்தில் நாயகன் ஷாம் பஸ்ஸில் ஏறியதால் என்ன நடந்தது.. ஏறாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதைக் காட்டினார்கள். இதேபோல் ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ படத்தில் 5 நிமிட இடைவெளியில் ஒரு பிரச்சினை துவங்கினால் என்னென்ன புதிய சம்பவங்கள் நடக்கும் என்பதைக் காட்டியிருந்தார்கள்.
இதேபோல் ‘நேற்று நாளை இன்று’ படத்திலும் டைம் மெஷினை பின்னோக்கித் தள்ளினால் என்னவாகியிருக்கும் என்பதை எடுத்துக் காட்டியிருந்தார்கள். அந்த வரிசையில் இந்தப் படமும் ஒன்றாக இடம் பிடித்திருக்கிறது.
ஒரு காதல் திரைப்படத்தின் வழக்கமான அபத்தங்கள் நிறையவே இருந்தாலும் காதலில் இருக்கும் சுவாரஸ்யத்தையும், காதலர்களின் அவஸ்தைகளையும் ரசிகர்கள் விரும்பும்வகையில் அளித்திருக்கிறார் இயக்குநர் அஷ்வத் மாரித்து.
மிக அழுத்தமான இயக்கம் செய்யப்பட்டிருப்பதால் நடிகர், நடிகைகள் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நாயகன் அசோக்செல்வனின் கேரியரில் நிச்சயமாக இத்திரைப்படம் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துவிட்டது.
கல்யாணம்வரையிலும் ஓகே.. அதன் பின்பு முதலிரவில் முத்தம் கொடுக்க முயன்று தோற்பது.. மாமனார் எம்.எஸ்.பாஸ்கரை சமாளிக்க முடியாமல் தடுமாறுவது.. உட்கார்ந்து போஸ் கொடுக்க அவர் படும்பாடு.. ரித்திகாவுடன் ஏற்படும் சண்டையில் நிலை தடுமாறுவது.. விவாகரத்துக்கு போய் நிற்பதுவரையிலும் மிக, மிக இயல்பாக நடித்திருக்கிறார் அசோக் செல்வன்.
ரித்திகாவை ‘நூடுல்ஸ் மண்டை’ என்று செல்லமாக அழைப்பது.. கல்ப் அடித்துக் கொண்டே “பிரெண்ட்டை கல்யாணம் செய்றது முடியாதுடி” என்று மறுப்பது.. பின்பு மாட்டிக் கொண்டு முழிப்பதான காட்சிகளிலும் அசோக் செல்வன் இல்லாமல் அர்ஜூனே தெரிகிறார்.
கடவுளர்களுடன் பேசும்போது அவர் பேசும்விதமும், உடல் மொழியும் ஒரு புதிய சுவாரஸ்யமான உரையாடலை பார்க்க வைக்கிறது. அசோக் செல்வன், விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் மூவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிக, மிக ரசனையோடு படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
வெற்று வசனமாகவே இருந்தாலும் அதனை உச்சரித்தவிதத்திலும், அதற்கேற்ப தனது உடல் மொழியைக் காட்டியும் கடவுளான விஜய் சேதுபதி தனி கவனத்தை ஈர்த்திருக்கிறார். இதேபோல் இவருக்குத் துணையாக இருக்கும் ரமேஷ் திலக்கும் கவுண்ட்டர் ஸ்டைல் வசனங்களை விஜய் சேதுபதி மீது வீசி அந்தக் காட்சிகளை கலகலப்பாக்கியிருக்கிறார்.
ரித்திகா சிங் குழப்பத்தில் மாட்டிக் கொண்டு முழிக்கும் பெண்ணாக தன்னுடைய அந்த வயதுக்கேற்ற கேரக்டரை கச்சிதமாகச் செய்திருக்கிறார். காதலியாகவே இருந்தாலும் கல்யாணத்திற்குப் பின்பு முன்பிருந்ததுபோலவே இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.. எதிர்பார்க்கவும் கூடாது என்பதற்கேற்ப பல காட்சிகளில் இந்த இளம் ஜோடிகள் கடும் சண்டையிடுகிறார்கள். இதில் ரித்திகாவின் பங்களிப்புதான் மிக அதிகம். இடையிடையே வாணி போஜன் பற்றிய பேச்சை ரித்திகா பேசும்போதெல்லாம் கலகலப்புதான்.
தமிழ்ச் சினிமாவுக்கு இன்னொரு நல்ல வரவு வாணி போஜன். குளோஸப் காட்சிகளிலும், சில, பல காட்சிகளிலும் பல்வேறு நடிப்பு பரிமாணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகு என்பார்களே அதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் வாணி போஜன். நிச்சயம் இவர் முயன்றால் தமிழ்ச் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம். இது இவருடைய கைகளில்தான் உள்ளது.
இவர்களின் நண்பராக நடித்திருக்கும் ஷா ரா, சிற்சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். பல இடங்களில் அதுவும் இல்லை. ரித்திகாவின் அப்பாவாக எம்.எஸ்.பாஸ்கர் தான் இருக்கும் காட்சிகளில் தானே முதல்வன் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார். ”இந்தத் தொழிலை ஏன் தேர்ந்தெடுத்தேன்..?” என்று அவர் கதை சொல்லும் காட்சிதான் படத்தின் டர்னிங் பாயிண்ட். இதற்கு எம்.எஸ்.பாஸ்கரின் அழகான நடிப்பு பெரிதும் உதவியிருக்கிறது.
ஒளிப்பதிவாளர் விது அய்யன்னாவின் ஒளிப்பதிவில் பப்பும், செராமிக்ஸ் தொழிற்சாலையும், தம்பதியினரின் வீடும் அழகாகக் காட்டப்பட்டிருக்கிறது. கூடுதல் அழகாக வாணி போஜனும், அசோக் செல்வனும் தெரிகிறார்கள். நன்று..!
லியோன்ஸ் ஜேம்ஸின் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. இருந்தாலும் பின்னணி இசை கதைக்கு இடைஞ்சல் செய்யாமல் இருப்பதால் அதற்காக அவருக்கு ஒரு பாராட்டு. முக்கியமான பாராட்டு படத்தின் தொகுப்பாளருக்கு. படத்தின் இரண்டாம் பாதியில் கச்சிதமாக.. நச் என்று கத்திரி போட்டிருக்கிறார். இருந்தும் சில நேரங்களில் படம் மெதுவாக நகர்வதைப் போன்ற பீலிங் வருகிறது.
இன்னமும் காதலர்களுக்கே விளங்காமல் இருக்கும் “காதல் என்றால் என்ன..?” என்பதையும், திருமணத்திற்குப் பின் காதலர்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வு.. இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அதீத காதல், நம்பிக்கை.. சின்னச் சின்ன கோபத்தையெல்லாம் வெளியில் கொட்டி பெரிதாக்குவது.. பிரச்சினைகளை தீர்க்க முயலாமல்.. பெரியவர்களிடம் கொண்டு போகாமல் தாங்களே தீர்க்க நினைப்பது.. இறுதியாக விவாகரத்து என்று அவசரத்தனமாக முடிவெடுப்பது.. என்று இப்போதைய இளம் காதலர்கள், இளம் தம்பதியினரின் பிரச்சினையைத்தான் வெளிப்படையாக்கி படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநரான அஷ்வத் மாரிமுத்து.
முடிந்து போன பிரச்சினையை பேசித் தீர்க்க இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் மனிதர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்ற உண்மையான பார்முலாவைச் சொல்வதற்காக கடவுளை நாடியிருக்கிறார் இயக்குநர். அந்தக் கடவுள் கான்செப்ட் செமத்தியாகவே இதில் ஒர்க் அவுட்டாகியிருக்கிறது.
முதல் பாதியில் ரித்திகாவை நண்பி என்பதால் ஒதுக்கும் அசோக், இரண்டாம் பாதியில் அவர் மீது காதல் கொள்வதற்கான காரணத்தை அழுத்தமாக சொல்லியிருக்க வேண்டாமா..? எம்.எஸ்.பாஸ்கரின் கதையைக் கேட்டவுடன் மனம் மாறுவது என்பது அந்த வேலைக்காக காதல் பிறக்கிறது என்பதாகவே சுட்டுகிறது.
இது போன்ற சில, பல லாஜிக் எல்லை மீறல்கள் இருந்தாலும்.. திரைக்கதையில் சுவாரஸ்யமான நகைச்சுவையை ஆங்காங்கே தூவி காட்சிகளை நகர்த்தியிருப்பதால் முழுமையாக ரசிக்க முடிந்திருக்கிறது.
ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையில் இந்த ‘ரீவைண்ட் பட்டன்’ என்ற ஒன்று இருந்தால் எப்படியிருக்கும் என்பது அவரவர் கனவாகவே இருந்து வருகிறது.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வரும் ரசிகர்கள் அனைவருமே கேட்கும் கேள்வி.. “அந்தக் கடவுளர்கள் எங்கேயிருக்கிறார்கள்…?” “அந்த ரீவைண்ட் டிக்கெட் எங்கே கிடைக்கும்..?” என்பதைத்தான்.
இப்படியொரு கேள்வியைக் கேட்க வைத்திருப்பதே இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி..!
இந்தாண்டின் காதலர் தினத்துக்கு ஏற்ற காதல் திரைப்படம் இதுதான்..! இது சத்தியமாக சொன்னால் புரியாது.. படம் பார்த்தால்தான் தெரியும்..! பார்த்து மகிழுங்கள்..!