‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..!

‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..!

கே புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.என்.ராஜராஜன் தான் தயாரித்த ‘1945’ என்ற படத்தின் தயாரிப்புச் செலவுக்காக பைனான்சியர் சுரபி மோகனிடம் 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்ததாகவும், அந்தக் கடனுக்காக கொடுத்திருந்த வெற்று பேப்பரில் தான் தயாரித்த ‘1945’ படத்தின் ஹிந்தி உரிமையை அவர்களுக்கு தான் வாங்கிய கடனை கட்ட முடியாததால் விட்டுக் கொடுத்துவிட்டதாக போலியாக எழுதி தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் கூறியிருந்தார்.

இந்தச் செய்தியை நமது தளத்தில் இந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.

இப்போது இந்தச் செய்திக்கு தனது தரப்பு செய்தியாக சில விளக்கங்களை ராஜராஜனால் குற்றம்சாட்டப்பட்டிருந்த சுரபி மோகன் நம்மிடம் தொலைபேசியில் விளக்கினார்.

அவருடைய விளக்கம் இதுதான் :

“நான் கடந்த 35 வருடங்களாக இந்தத் துறையில் இருக்கிறேன். என்னுடைய அப்பா சுந்தரம் ஐயர் தமிழ்ச் சினிமாத் துறையில் மிக மூத்த விநி்யோகஸ்தர். தென்னாற்காடு, வட ஆற்காடு பகுதி விநியோகஸ்தர்கள் சங்கத்தில் 30 வருடங்களுக்கும் மேலாக செயலாளராகப் பணியாற்றியவர். நானும் இப்போது அதே சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன்.

நான் மிகவும் நேர்மையாக தொழில் செய்து வருகிறேன். இதுநாள்வரையிலும் யாரையும் நான் ஏமாற்றியதோ.. நஷ்டப்படுத்தியதோ இல்லை. இது இந்தச் சினிமா துறையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்.

surabhi mohan-1

ராஜராஜன் என்னிடமோ, சுனிலிடமோ எந்தவிதமான கடனையும் வாங்கவில்லை. அவருக்குக் கடன் கொடுக்கும் அளவுக்கு நாங்கள் பெரிய பைனான்ஸியர்களும் இல்லை. நாங்கள் வெறும் தயாரிப்பாளர்கள்தான். நானே வெளியில் கடன் வாங்கித்தான் படம் தயாரித்திருக்கிறேன்.

அதோடு சில படங்களின் ரீமேக் உரிமைகளை பல்வேறு மொழிகளுக்காக வாங்கி விற்பனை செய்யும் தொழிலையும் செய்து வருகிறேன். அப்படித்தான் இந்த ராஜராஜன் தன்னுடைய ‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை என்னிடத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக 1 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தார். நான் அதை 1 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கு வேறொரு ஹிந்தி தயாரிப்பாளரிடம் விற்பனை செய்திருக்கிறேன்.

அதன் பின்பு இதே படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான விநியோகஸ்தர் சிங்காரவேலனிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்திருக்கிறார் தயாரிப்பாளர் ராஜராஜன். சிங்காரவேலன் அதனை மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு இன்னும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்திருக்கிறார்.

என்னிடம் ‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை விற்று பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்பு, அதே படத்தின் அதே ஹிந்தி ரீமேக் உரிமையை முறைகேடாக விநியோகஸ்தர் சிங்காரவேலனிடமும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்திருக்கிறார் தயாரிப்பாளர் ராஜராஜன். இது சட்டப்படி தவறான செயல். இதற்காக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.

என் மீதும், சுனில் மீதும் இப்போது புகார் சொல்லும் கூடுதலான அந்த 4 தயாரிப்பாளர்களும் இதேபோல் என்னிடம் ஒரு விலைக்கு ஹிந்தி ரீமேக்கிற்கான உரிமையை விற்பனை செய்தவர்கள்தான். இப்போது அவர்களுடைய படம் கூடுதலான விலைக்குப் போகிறதே என்பதால் என்னிடம் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு என்னிடம் இருக்கும் ரீமேக் உரிமையை ரத்து செய்துவிட்டு தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

இதுதான் நடந்த உண்மை. நடக்கும் உண்மை. நாங்கள் ராஜராஜனுக்கு பணம் பைனான்ஸ் செய்யவே இல்லை. இது மறுக்க முடியாத உண்மை. இப்போது அவர்தான் பொய் சொல்கிறார். இது அத்தனையையும் தூண்டிவிடுவது விநியோகஸ்தர் சிங்காரவேலன்தான். அவருக்கு லாபம் கிடைத்திருக்கிறது என்பதாலேயே எங்களது ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைக்க அவர் மிகவும் போராடுகிறார். இதை நாங்கள் சட்டப்படியாகவே சந்திப்போம்..” என்றார்.

சுரபி மோகனின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான விநியோகஸ்தர் சிங்காரவேலனை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம்.

அவர் நம்மிடம் பேசுகையில், “நான் யாரையும் தூண்டிவிடவில்லை. எனக்கு அந்த அவசியமும் இல்லை. நான் ஒரு சினிமா வியாபாரி. பல்வேறு மொழிகளுக்கான திரைப்பட ரீமேக் உரிமைகளை வாங்கி விற்பனை செய்து வருகிறேன். அப்படித்தான் ராஜராஜனிடமும் அந்த ‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கி, எனக்குத் தெரிந்த இன்னொரு ஹிந்தி தயாரிப்பாளரிடம் அதனை விற்பனை செய்தேன்.

singaravelan-1

இதன் பின்புதான் சுரபி மோகனும், சுனிலும் இந்தப் பிரச்சினைக்குள் வந்தார்கள். நாங்கள் தயாரிப்பாளர் கவுன்சிலில் இது பற்றி புகார் கொடுத்தபோது சுனிலின் தந்தையான பிரபல பைனான்ஸியர் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பேச்சுவார்த்தைக்காக வந்தார்.

அப்போது நானும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளில் ஒருவரான ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரும் அவரிடம் நேரில் பேசினோம். அப்போது சந்திரபிரகாஷ் ஜெயின் சொன்னது.. ‘ஆமாம்.. ராஜராஜன் எங்களிடம் 20 லட்சம் ரூபாய் கடன்தான் வாங்கியிருக்கிறார். அது வட்டிமேல் வட்டி போட்டு இப்போது ஒரு கோடிக்கும் மேலாகிவிட்டது. அந்தப் பணத்தைக் கொடுக்கச் சொல்லுங்கள். நாங்கள் அனுப்பிய வக்கீல் நோட்டிஸை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்’ என்றார்.

அப்போது தயாரிப்பாளர் ராஜராஜன் 20 லட்சம் ரூபாய்க்கு வட்டியாக கூடுதலாக 40 லட்சம் ரூபாய்வரையிலும் கொடுப்பதாகச் சொன்னார். அதுதான் நேர்மையான வட்டியாகவும் இருந்தது. ஆனால் சந்திரபிரகாஷ் ஜெயினோ ஒரேயடியாக ‘ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாயை கொடுத்தால்தான் உண்டு’ என்று அடித்துப் பேசிவிட்டுப் போனார்.

அப்போதுதான் தயாரிப்பாளர் கவுன்சிலில் இருந்தவர்கள், ராஜராஜன் வட்டிக்குப் பணம் வாங்கும்போது கொடுத்த வெற்றுப் பேப்பரில் பைனான்ஸியர்தான் மோசடி செய்து ‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை விற்பனை செய்துவிட்டதாக இப்படி எழுதியிருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டார்கள்.

இதனால் ‘ராஜராஜன் எனக்கு கொடுத்த ஹிந்தி ரீமேக் உரிமைதான் செல்லும்’ என்று சொல்லி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் எனக்கு ஒப்புதல் கடிதமும் கொடுத்துவிட்டார்கள்.

இதனை எதிர்த்து சுனிலும், சுரபி மோகனும் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். ஆனால் அங்கேயும் எனக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வந்தது. இப்போது அந்தத் தீர்ப்பையும் எதிர்த்து சுரபி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கேயும் என் பக்கம்தான் தீர்ப்பு வரும் என்று நான் உறுதியாய் நம்புகிறேன். ஏனெனில் அந்த அளவுக்கு ஆதாரங்களை நாங்கள் சமர்ப்பித்திருக்கிறோம்.

ராஜராஜனை மட்டுமில்லை. கூடுதலாக ‘வா டீல்’, ‘ஐங்கரன்’, ‘காவியன்’ ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்களையும் இதேபோல் ஹிந்தி ரீமேக் உரிமையை தங்களிடத்தில் விற்பனை செய்துவிட்டதாதச் சொல்லி சுனிலும், சுரபி மோகனும் கூட்டணி வைத்து அவர்களை ஏமாற்றியிருக்கிறார்கள். இப்போது லேட்டஸ்ட்டாக ‘நாடோடிகள்-2’ படத்தின் தயாரிப்பாளரான நந்தகோபால் செட்டியாரும் இதே போன்ற ஒரு புகாரோடு வந்திருக்கிறார். இந்தப் பாதிக்கப்பட்ட அப்பாவி தயாரிப்பாளர்களும், இப்போது தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் இது குறித்து புகார் செய்திருக்கிறார்கள்.

சுனில் மற்றும் சுரபி மோகனின் பித்தலாட்டங்களையும், மோசடிகளையும் நிரூபித்து அவர்களை சிறைக்கு அனுப்பாமல் நாங்கள் ஓயப் போவதில்லை..” என்று காட்டமாகச் சொல்லி முடித்தார் விநியோகஸ்தர் சிங்காரவேலன்.

இனி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்ல வேண்டியது காவல்துறையும், நீதிமன்றமும்தான்..!

‘அறம்’ என்னும் வார்த்தையை தமிழ்ச் சினிமா துறைக்குள் சல்லடை போட்டுத் தேட வேண்டும் போலிருக்கிறது..!

Our Score