சமீபத்தில் வெளியான அமேசான் ஒரிஜினல் படமான ‘ஓ மை டாக்’ படத்தின் டிரெயிலர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, குழந்தைகளைக் கவர்ந்தும், செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அர்ஜூன் என்ற சிறுவனுக்கும்(ஆர்ணவ் விஜய்), அவனது செல்லப் பிராணியான சிம்பாவிற்கு இடையில் உள்ள பந்தம் மற்றும் அன்பை பற்றிய படம்தான் இந்த ‘ஓ மை டாக்’.
தயாரிப்பு – ஜோதிகா-சூர்யா, இணை தயாரிப்பு – ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் RB Talkies – S.R.ரமேஷ் பாபு, இசை – நிவாஸ் பிரசன்னா, ஒளிப்பதிவு- கோபிநாத், எழுத்து, இயக்கம் – சரோவ் சண்மூகம்.
“நாம் டிரைலரில் பார்த்தது போல், ஒவ்வொரு நாய் பிரியர்களும் சந்தோஷப்படும் அளவிற்கு, இந்தப் படம் இருக்கும். இந்தப் படத்திற்காக 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு பயிற்சி கொடுத்து பணியாற்றியுள்ளோம்…” என்று இந்தப் படத்தின் இயக்குநரான சரோவ் சண்முகமும், நடிகர் அருண் விஜய்யும் கூறினார்கள்.
இது குறித்து நடிகர் அருண் விஜய் பேசும்போது, “100-க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளன. இவ்வளவு நாய்களுடன் ஒரே நேரத்தில் வேலை செய்வது சவாலான விஷயமாக இருந்தது. இதற்காக நாய்களின் ட்ரெயர்னர் ராஜவிற்கு ஒரு மிகப் பெரிய நன்றி.
மேலும் இயக்குநர் சரவ், எல்லா விஷயங்களிலும், சிக்கலில்லாமல் செல்ல அதிக கவனம் செலுத்தினார். இந்த அழகான கதையில் இணைந்து பணியாற்றியதில் எங்கள் அனைவருக்கும் பெரிய மகிழ்ச்சி.” என்றார்.
இயக்குநர் சரோவ் சண்முகம் பேசும்போது, “இந்த ‘ஓ மை டாக்’ திரைப்படம், அர்ஜூன் மற்றும் அவனது நாய் குட்டியான சிம்பாவிற்கும் இடையே இருக்கும் காதல் மற்றும் அரவணைப்பை கூறும் ஒரு உணர்வுபூர்வமான கதையாகும்.
அர்ஜூன், சிம்பாவை சந்திக்கிறான். அது அவனை காப்பாற்றுகிறது, அவன் அதை அவன் சொந்த நாய் போல் வளர்க்கிறான். பின்னர் அர்ஜூன் மற்றும் சிம்பா அவர்கள் பாதையில் வரும் தடங்கல்களை கடந்து, வெற்றிப் பாதையை அடைகிறார்கள். இதுதான் படத்தின் திரைக்கதை.
படத்தில் நாய்களுக்கு டிரெயினிங் கொடுக்கத்தான் நாங்கள் நிறைய கஷ்டப்பட்டோம். முதலில் ஒரே மாதிரி இருக்கும் மூன்று நாய்களை வாங்கி அதற்கு பயிற்சி கொடுத்தோம். படப்பிடிப்பிற்கு முன்னர், 5-6 வயதுடைய நாய் குட்டியை அதே கலரில் கொண்டு வந்தோம்.
ஆனால், இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் 10 நாட்களுக்கு ஒரு முறை நாய்களின் உயரத்தில் மாற்றம் ஏற்படும். அதற்கு நாங்கள் பிளான் B வைத்திருந்தோம். இந்தக் கணிப்புகளையும், நேரத்தையும் கவனிப்பதில் நாங்கள் பெரும் கஷ்டத்தை அனுபவித்தோம்.
ட்ரெயர்னர் ராஜா, நாய் ஹாஸ்டல் வைத்திருந்தார். அங்குதான் பயிற்சிகள் கொடுத்தார். படத்தில் விளையாட்டு போட்டி ஒரு பிரதானமான விஷயம். நான் அவரை ஊக்குவித்து, நாய்கள் எப்படி விளையாட வேண்டும் என்ற பயிற்சியை கொடுக்க சொன்னேன். இது உலகம் முழுக்க நடக்கும் சாம்பியன்ஷிப் போட்டியைப் போன்றது. அந்தப் போட்டியை இந்தப் படத்திலும் காண்பித்திருக்கிறோம். இதுதான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று நினைக்கிறோம்…” என்றார்.
இந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில், ப்ரைம் வீடியோவில், இந்தியா உட்பட 240 நாடுகளின் பகுதிகளில் வரும் ஏப்ரல் 21-ம் தேதி வெளியாகவுள்ளது.