full screen background image

“படத்தில் கிளாமர் சீன்ஸ் இல்லாததால் படத்தை யாரும் வாங்கலை” – அமலாபாலின் வருத்தம்..!

“படத்தில் கிளாமர் சீன்ஸ் இல்லாததால் படத்தை யாரும் வாங்கலை” – அமலாபாலின் வருத்தம்..!

அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து, முதன்முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடாவர்’.

அறிமுக இயக்குநர் அனூப்.எஸ்.பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகிறது.

இதையொட்டி இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை லீ மேஜிக் பிரேம் தியேட்டரில் நடைபெற்றது. இதில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளரும், கதையின் நாயகியுமான நடிகை அமலா பால் பேசுகையில், ”கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பிறகு இப்போதுதான் முதல்முறையாக இந்தப் பட விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். ரசிகர்களையும், பார்வையாளர்களையும் நேரில் காணும்போது உற்சாகம் பிறக்கிறது.

அபிலாஷ் பிள்ளையும், இயக்குநர் பணிக்கரும் என்னை சந்தித்து இந்தக் ‘கடாவர்’ படத்தின் கதையை கூறியதும், என்னுடைய கதாபாத்திரம் புதுமையானதாகவும், வலிமையானதாகவும் இருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

பிறகு அவர்கள் தயாரிப்பாளர்கள் இல்லாமல் கஷ்டப்பட்டதை கண்டு, தயாரிப்பாளராகவும் பணியாற்ற சம்மதம் தெரிவித்தேன். இத்தருணத்தில் எனக்கு உற்ற துணையாக திகழ்ந்த என்னுடைய தாயார் மற்றும் சகோதரருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான்காண்டு காலம் கடினமாக உழைத்து பல போராட்டங்களுக்கு இடையே இந்த திரைப்படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டபோது பல வடிவங்களில் தடைகள் உருவானது.

இந்தப் படத்தை வெளியிட கூடாது என சிலர் மறைமுகமாக உழைத்தனர். நானும் இந்தப் படத்தில் நடித்திருந்ததால் படத்தில் கிளாமர் இருக்குமோ என்று சிலர் எதிர்பார்த்தனர். அப்படி எதுவும் இல்லையென்றவுடன் படம் பற்றிப் பேசக் கூட யாரும் முன் வரவில்லை.

ஆனாலும் கடவுளின் ஆசியாலும், மறைந்த என்னுடைய தந்தையாரின் ஆசீர்வாதத்தினாலும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் எங்களின் இந்தக் கடாவர்’ படத்தினை ஐந்து மொழிகளில் வெளியிட ஒப்புக் கொண்டது.

பல மெடிக்கல் கிரைம் திரைப்படங்கள் வெளியானாலும், தடயவியல் துறையில் இதுவரை படைப்புகள் அதிகமாக வெளியானதில்லை. காவல் துறையில் பணியாற்றும் தடயவியல் நிபுணர் வேடத்தில் நான் நடித்திருக்கிறேன்.

ஒளிப்பதிவு, படத் தொகுப்பு, பின்னணி இசை என அனைத்து விசயங்களும் நேர்த்தியாக இருக்கும். ரசிகர்கள் வழக்கம்போல் இந்த ‘கடாவர்’ படத்திற்கும் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்..” என்றார்.

ஆகஸ்ட் 12-ம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓ.டி.டி.யில் ‘கடாவர்’ வெளியாகிறது.‌

Our Score