பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் டி.ஜி.விஷ்வபிரசாத் மற்றும் கோனா பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் கோனா வெங்கட் ஆகியோர் தயாரித்துள்ள திரைப்படம் ‘நிசப்தம்’.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இப்படத்தில் நாயகனாக மாதவன் நடிக்க, நாயகியாக அனுஷ்கா ஷெட்டி நடித்திருக்கிறார். மேலும் அஞ்சலி, மைக்கேல் மேட்சன், ஷாலினி பாண்டே, சுப்பராஜூ, ஸ்ரீநிவாஸ் அவசரளா மற்றும் ஹன்டர் ஓ ’ஹேரோ ஆகியோரும் நடித்துள்ளனர்.
தயாரிப்பு நிறுவனங்கள் – பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி, கோனா பிலிம் கார்ப்பரேஷன், தயாரிப்பாளர்கள் – டி.ஜி.விஷ்வபிரசாத், கோனா வெங்கட், இணை தயாரிப்பு – விவேக் குச்சிபோட்லா, ஒளிப்பதிவு – ஷானில் தியோ, படத் தொகுப்பு – பிரவீன் புடி, இசை – கோபி சுந்தர், பின்னணி இசை – கிரீஷ் கோவிந்தன், பாடல்கள் – கருணாகரன், கலை இயக்கம் – சாட் ராப்டர், சண்டை இயக்கம் – அலெக்ஸ் டெர்சிஃப், ஸ்டைலிஸ்ட் – நீரஜா கோனா, திரைக்கதை, வசனம் – மணி சியான், கதை, இயக்கம் – ஹேமந்த் மதுக்கர், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.
‘ஏ ஃபிளாட்’, ‘வஸ்தாடா நா ராஜு’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் ஹேமந்த் மதுக்கர், இப்படத்தை கதை எழுதி இயக்கியிருக்கிறார்.
இப்படம் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாழ்வை மையமாகக் கொண்டிருக்கிறது. அங்கு நடைபெறும் ஒரு குற்ற சம்பவம், ஒவ்வொருவரின் வாழ்வையும் எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே படத்தின் கதைக் களமாக அமைந்துள்ளது.
இப்படத்தில் ஒரு வாய் பேச முடியாத ஊமைப் பெண்ணாக, காது கேளாத செவிட்டுப் பெண்ணாக, பலரது மனதையும் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் துணிச்சலுடன் நடித்திருக்கிறார் அனுஷ்கா.
இப்படத்தை முழுக்க முழுக்க அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வித்தியாசமாக படமாக்கியிருக்கிறார்கள். இதுவரை பார்த்திராத புதிய கோணத்தில் எதிர்பாராத சம்பவங்கள், திருப்பங்கள் என விறுவிறுப்பான திகிலுடன் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
இத்திரைப்படத்தை வரும் ஏப்ரல் 2-ம் தேதியன்று டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் உலகமெங்கும் வெளியிடுகிறது.