“ஓ மை கடவுளே’- ரசிகர்களுக்கான காதலர் தின பரிசு” – ரித்திகா சிங் பேட்டி…! 

“ஓ மை கடவுளே’- ரசிகர்களுக்கான காதலர் தின பரிசு” – ரித்திகா சிங் பேட்டி…! 

ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டில்லி பாபு மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் அபிநயா செல்வம்-அசோக் செல்வன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஓ மை கடவுளே.’

இந்தப் படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் இருவரும் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். வாணி போஜன் மற்றும் ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, விஜய் சேதுபதி, ராம் திலக்குடன் இணைந்து ஒரு கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

எழுத்து, இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து, இசை – லியான் ஜேம்ஸ், ஒளிப்பதிவு – விது அயன்னா, படத் தொகுப்பு – பூபதி செல்வராஜ், கலை இயக்கம் – இராமலிங்கம், உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன், உடைகள் – முகம்மது சுபையர், சண்டை இயக்கம் – ராம்குமார், பாடல்கள் – கோ சேஷா, புகைப்படம் – ராஜா, தயாரிப்பு மேற்பார்வை – சேது ராமலிங்கம், பூர்னேஷ், நிர்வாக தயாரிப்பு – நோவா.

இந்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் இன்றைய நவநாகரீக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்கிறது. இப்படத்தின் டீஸர், புரமோ பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது.

ஏற்கனவே விஜய்சேதுபதி இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்கிற நிலையில்,  இப்போது அடுத்த ஆச்சர்யமாக, இயக்குநர் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் எனும் செய்தி, ரசிகர்களை உற்சாகம் கொள்ளச் செய்துள்ளது.

முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகையான ரித்திகா சிங் இந்தப் படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார்.

மிகக் கவனமுடன் தன் மனதிற்கு நெருங்கிய கதாப்பாத்திரங்களை மட்டுமே செய்து வருகிறார் ரித்திகா சிங். சிறு இடைவெளிக்கு பிறகு தமிழில், அவர் நடிப்பில்,  பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாக இருக்கும் ‘ஓ மை கடவுளே’ படம் ரசிகர்களிடம் பலத்த  வரவேற்பு பெற்றிருப்பதில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.

இந்தப் படம் குறித்து நாயகி ரித்திகா சிங் பேசும்போது, “இந்த ‘ஓ மை கடவுளே’ படம் என் வாழ்வில் ஸ்பெஷலான படம். மூன்று வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலமாக நான் தமிழுக்கு வந்திருக்கிறேன்.

மனதிற்கு பிடித்த நல்ல கதாப்பாத்திரங்கள் மட்டுமே செய்வது என்கிற முடிவில் இருந்தேன். இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது இது எனக்கு கிடைத்த தங்க வாய்ப்பாக எனக்குத் தோன்றியது.

இந்தப் படத்தின் கதையில் முதலில் என்னை ஈர்த்த விசயம், நாயகி ஒரு கிறிஸ்துவ மணப்பெண்ணாக வருவதுதான். என் நெடுநாளைய சிறு வயது கனவு அது. மேலும் படத்தின் திரைக்கதையும் அற்புதமாக இருந்தது. படம் முழுக்க நீங்கள்  புன்னகை தவழும் முகத்துடன் இருப்பீர்கள்.

நாயகன் அசோக் செல்வன் மிகத் திறமை வாய்ந்த நடிகர், இப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் குவியும். என்னுடன் நடித்திருக்கும் இன்னொரு நாயகியான வாணி போஜன் ஒரு அற்புதமான நடிகை. அவரைச் சுற்றி இருப்பவர்களிடம் எப்பொதும் புன்னகை தவழும்.  நேர்மறை தன்மை மிக்க பண்பாளர். இப்படம் மூலம் அவர் என் சகோதாரியாக எனக்கு மிக நெருக்கமான உறவாகிவிட்டார்.

இந்த ‘ஓ மை கடவுளே’ படம் வெறும் ரொமான்ஸ் படம் மட்டுமே இல்லை. உறவுகளின் வலிமையை, நட்பின் பெருமையை பேசும் படமாகவும் இருக்கும். டிரெய்லரில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் படத்தில் பெரும் பங்கு வகிக்கும். இப்படம் உங்கள் மனதில் பல காலம்  நீங்காது நிற்கும்…” என்றார்.

வரும் 2020 பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படத்தை Sakthi Film Factory நிறுவனத்தின் சார்பில் பிரபல விநியோகஸ்தர் சக்திவேலன் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

Our Score