இளையராஜாவின் இசையில் உருவாகும் ‘நினைவெல்லாம் நீயடா’ திரைப்படம்

இளையராஜாவின் இசையில் உருவாகும் ‘நினைவெல்லாம் நீயடா’ திரைப்படம்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராட்டி, ஆங்கிலம் என பன்மொழி படங்களுக்கு இசையமைத்து, உலகத் திரைப்பட வரலாற்றிலேயே மிக அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற சாதனையை தக்க வைத்திருக்கும் ‘இசை ஞானி’ இளையராஜா இசையில் உருவாகும் படம் ‘நினைவெல்லாம் நீயடா’.

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராயல் பாபு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக ஒரு முன்னணி நடிகை நடிக்க இருக்கிறார். மற்றொரு  நாயகியாக புதுமுகம் சினாமிகா அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் ‘பிக்பாஸ்’ புகழ் கேப்ரில்லா நடிக்கிறார். மற்றும் மனோபாலா, காளி வெங்கட், மயில்சாமி, ‘செல்’ முருகன், மதுமிதா, ரஞ்சன் குமார் உட்பட பலர் நடிக்கின்றனர்.

படத் தொகுப்பை பிரபாகர் கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை தளபதி தினேஷ் அமைக்கிறார். பாடல்களை  பழநிபாரதி, சினேகன் ஆகியோர்  எழுதுகின்றனர். நடன கட்சிகளை பிருந்தா, தீனா அமைக்கின்றனர். தயாரிப்பு நிர்வாகம் – இளங்கோ.  மக்கள் தொடர்பு ஏ. ஜான்.

‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’(கன்னடம்), ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரான ஆதிராஜன் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

இந்த நினைவெல்லாம் நீயடா’ படத்தின் தொடக்க விழா பூஜை கோடம்பாக்கத்தில் உள்ள இசைஞானி இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவில் நடைபெற்றது.

இந்தப் படம் குறித்து இயக்குநர் ஆதிராஜன் பேசும்போது, “இந்தியத் திரையிசையின் அடையாளமாகத் திகழும் இசை ஞானி’ இளையராஜாவின் இசையில் ஒரு படம் இயக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு.

இந்த வாய்ப்பு என் தவத்திற்கு கிடைத்த வரம்.  ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் மண்ணுக்குள் போகும்வரை மறக்க முடியாதது அவர்களின் முதல் காதல். அதுவும் மீசை அரும்பும் முன்பே… ஆசை அரும்பும் பள்ளிக்கூட காதல் நினைக்கும் போதெல்லாம் சிலிர்க்க வைக்கும்.

முதல் காதலை மறக்க முடியாமல் தவிக்கும் காதலர்களை பற்றிய இளமை துள்ளும் கதை இது. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் உருகாத இதயங்களையும் உருக வைத்துவிடும். காதலைக் கொண்டாடிய அழகி’, ‘ஆட்டோகிராப்’, ‘பள்ளிக்கூடம்’, ‘96’ பட வரிசையில் இந்தப் படமும் ரசிகர்களின் நினைவெல்லாம் நிலைத்து நிற்கும்…” என்றார்.

தற்போது இந்தப் படத்தின் பாடல் பதிவு நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கி சென்னை, பாண்டிச்சேரி, மதுரை, கூர்க், இடுக்கி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.

Our Score