full screen background image

நினைவெல்லாம்  நீயடா’ – திரைப்பட விமர்சனம்

நினைவெல்லாம்  நீயடா’ – திரைப்பட விமர்சனம்

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராயல் பாபு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக பிரஜன் நடித்திருக்கிறார். கதாநாயகியாக மனீஷா யாதவ் நடிக்க, மற்றொரு  நாயகியாக புதுமுகம் சினாமிகா அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் ‘பிக்பாஸ்’ புகழ் கேப்ரில்லா நடிக்கிறார். மற்றும் மனோபாலா, காளி வெங்கட், மயில்சாமி, ‘செல்’ முருகன், மதுமிதா, ரஞ்சன் குமார் உட்பட பலர் நடிக்கின்றனர்.

படத் தொகுப்பை பிரபாகர் கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை தளபதி தினேஷ் அமைக்கிறார். பாடல்களை  பழநிபாரதி, சினேகன் ஆகியோர்  எழுதுகின்றனர். நடன கட்சிகளை பிருந்தா, தீனா அமைக்கின்றனர். தயாரிப்பு நிர்வாகம் – இளங்கோ.  பத்திரிக்கை தொடர்பு ஏ. ஜான்.

‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’(கன்னடம்), ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரான ஆதிராஜன் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

தமிழ்த் திரையுலகத்தில் சாகா வரம் பெற்ற திரைப்படங்கள் காதல் திரைப்படங்கள்தான். காதல் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைமைதான் இப்போதும் இருக்கிறது.

அதிலும் பள்ளிக்கூட காதலை முன் வைத்து வரும் படங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பும் பெரிதாக இருக்கும். அந்த எதிர்பார்ப்பை முன் வைத்து வந்திருக்கும் படம்தான் இந்த  ‘நினைவெல்லாம் நீயடா’ திரைப்படம்.

நாயகன் கெளதம் என்ற பிரஜினும், மலர்விழி என்ற பிரியங்காவும் பள்ளியில் ஒன்றாகப் படிக்கிறார்கள். வகுப்பிலேயே அழகாகவும், தைரியமானவளாகவும் இருக்கும் மலரைப் பார்த்துவுடன் காதலாகிறது பிரஜினுக்கு.

தன் மனதுக்குள் ஊற்றாய் பெருகியிருக்கும் காதலை வெளிப்படுத்தாமல் நல்ல நட்புடன் பழகி வரும் கெளதம் ஒரு கட்டத்தில் காதலைச் சொல்ல முற்படுகிறான். அப்போது மலர்விழி ஊரைவிட்டே போய்விடுகிறாள்.

மலர்விழி ஊரைவிட்டும், கெளதமின் கண் பார்வையிலிருந்தும் மறைந்து போனாலும் இப்போது கல்லூரிப் படிப்பையும் முடித்துவிட்டு ஒரு மியூஸிக் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் விற்கும் கடையை நடத்தி வரும் நிலையில் இருக்கும் கெளதமால், மலர்விழியை மறக்க முடியவில்லை. இப்போதும் அவளது பிறந்த நாளைக்கு கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்யவும் மறப்பதில்லை.

இந்த முட்டாள்தனமான காதல் கெளதமின் பெற்றோருக்கும், கெளதமையே சுற்றிச் சுற்றி வரும் அவனது அத்தை பெண்ணான மனீஷா யாதவ்வுக்கும் பெரும் பிரச்சினையாகிறது.

தன் காதல் கைகூடாத நிலையில் விரக்தியடையும்  மனீஷா தற்கொலைக்கு முயல.. கடைசியாக கெளதம் மனீஷாவைத் திருமணம் செய்து கொள்கிறான். ஆனால் அவளுடன் இல்வாழ்க்கையில் ஈடுபடாமல் தவிர்த்து வரும் கெளதமால் மனநலம் பாதிக்கப்பட்டு மன நல மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் மனீஷா.

இந்த நேரத்தில் வெளிநாட்டில் இருந்து கெளதமை பார்க்க திரும்பி வருகிறார் மலர்விழி. எதிர்பாராதவிதமான சந்திப்பில் தனது இதய தெய்வம் உயிருடன் இருப்பதை அறியும் கெளதம் இன்ப அதிர்ச்சியாகிறான்.

கடைசியில் இந்த முக்கோணக் காதல் என்னவாகிறது.. யார், யாரை திருமணம் செய்து கொண்டார்கள்.. யார் பிரிந்தார்கள்.. என்பதுதான் இந்த ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தின் சுவையான திரைக்கதை.

ஏற்கெனவே சில படங்களில் நாயகனாக நடித்து இன்னமும் லைம் லைட்டுக்கு வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நடிகர் பிரஜின் தான் ஏற்றிருக்கும் கெளதம் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.

காதலியின் பிரிவினால் ஏற்பட்டிருக்கும் வலி, குடியை நாடும் மன நலம், மனைவிக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கும் அளவுக்கு காரணமாகிவிட்ட குற்றவுணர்வு, பெற்றோர்களிடம் பேச முடியாத நிலைமை.. நண்பர்களே வெறுக்கும் அளவுக்கு தன் நடத்தையை வைத்துக் கொள்வது என்று தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

பிரஜின் தன்னை வெறுத்தாலும் அவர்தான் தனது மானசீக கணவன் என்று மனதால் நினைத்து வாழும் இன்னொரு காதல் பைத்தியமாக நடித்திருக்கும் மனீஷா யாதவ்வும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். வைச்சேன் நான் முரட்டு ஆசை என்ற கனவு பாடலில் இளசுகளை கவர்ந்திழுக்கிறார்.

படத்தின் பிற்பாதியில் தான்தான் அந்தக் காதல் தேவதை மலர்விழி என்று சொல்லிக் கொண்டு வரும் சினாமிகாதான் இந்தப் படத்தில் மிகப் பெரிய குறை. பிரஜினுக்கு அவர் அக்காபோல உள்ளார். இவர் பொய்யானவர் என்றாலும் வேறொருவரை போட்டிருக்கலாம். அதிலும் இவருக்கும் ஒரு டூயட்டை வைத்து ஒரு அழகான பாடலை வேறு கெடுத்திருக்கிறார் இயக்குநர்.

பள்ளிப் பருவத்து கெளதம், மலர்விழியாக நடித்திருக்கும் ரோஹித் – யுவலட்சுமி இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக யுவலட்சுமியின் முகமே அத்தனை அழகு. ஒளிப்பதிவாளர் இவரை மட்டும் கூடுதல் அக்கறையெடுத்து படம் பிடித்திருப்பது தெளிவாகவே தெரிகிறது..! இவரையே பிற்பாதியில் கொண்டு வந்திருக்கலாமே இயக்குநரே..!

பிரஜனின் நண்பரான ரெடின் கிங்ஸ்லி சில இடங்களில் கவுண்ட்டர் டயலாக் அடித்து கொஞ்சம் கலகலப்பாக்கியிருக்கிறார். மேலும் கெமிஸ்ட்ரி ஆசிரியர் மனோபாலா, மலர்விழியின் தோழி மதுமிதா, பள்ளி பருவத்து கெளதமின் நண்பராக வருபவர்கள் என்று பலருமே சிறப்பாக நடித்துள்ளனர். அழகான ்ரீபிரியங்காவை சின்னக் கதாப்பாத்திரத்தில் காட்டியது நியாயமா இயக்குநரே..!?

படத்தின் இன்னொரு நாயகன் நிச்சயமாக இசைஞானி இளையராஜாதான். 1980-களின் மெட்டுக்களை கேட்பதுபோல் இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களுமே சிறப்புதான்.

‘மின்னல் பூக்கும் உந்தன்’, ‘வண்ண வரைகோல்கள்’, ‘வைச்சேன் நான் முரட்டு ஆசை’, ‘அழகான ஆசை ஒன்று’, ‘இதயமே இதயமே’ என்று திரையில் ஒலித்த ஐந்து பாடல்களுமே இசை ரசிகர்களுக்குத் தித்திப்பாய் உள்ளது.

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டசர்ஜீயின் ஒளிப்பதிவும் சிறப்புதான். பள்ளிப் பருவக் காலக்கட்டங்களை மிக அழகான சூழலில் படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளில் ஸ்கிரீன் அழகோ அழகோ..!

நியாயமாக இந்தப் படத்துக்கு ‘நினைவெல்லாம் நீயடி’ என்றுதான் தலைப்பு வைத்திருக்க வேண்டும். ஏனெனில், படம் முழுவதும் நாயகன் கெளதம்தான் நாயகியை நினைத்து ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறார். அப்படி வைத்தால் அது சமூகக் குற்றமாகிவிடுமோ என்று இயக்குநர் பயந்துவிட்டாரோ என்னவோ..!?

பள்ளிப் பருவக் காதல் என்பது வெறும் இனக் கவர்ச்சிதான். இன்பாச்சுவேஷன்தான். அதுவே முழுமையான, உண்மையான காதலாக இருக்காது என்பதுதான் உலகம் தழுவிய உண்மை. இதையே மையமாக வைத்து இப்போதுவரையிலும் நாயகன், நாயகியை நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம் இயக்குநரே?

அதுவும் நாயகி எந்த ஊரில், எந்த நாட்டில் இருக்கிறார் என்பதே தெரியாத நிலையில் நாயகன் அவரை நினைத்து ஏங்கி, ஏங்கித் தவிப்பதெல்லாம் ரொம்பவே டூ மச்சான திரைக்கதை இயக்குநரே..!

காதல் என்ற உணர்வு தரும் வலியையும், ஏமாற்றத்தையும், சோகத்தையும் பதிவு செய்திருப்பதிலும் வழக்கம்போல குடியை முன் வைத்திருப்பது நமக்கு ஏமாற்றமளிக்கிறது. காதலில் தோல்வியுற்றவர்களுக்கு ஊக்கம் அளிப்பதுபோல் இல்லாமல் “காதல் இல்லையேல் வாழ்க்கையே இல்லை..” என்பதுபோல நாயகனின் வாழ்க்கையை கொண்டு போயிருப்பது ஏற்புடையதல்ல..!

இப்படி சில குறைகள் இருந்தாலும் அந்தந்த பருவத்து காதல்களை ஞாபகப்படுத்தி நம்மை ஒரு கணம் நமது பழைய நினைவுகளுக்குள் தள்ளிவிடுகிறது இந்த ‘நினைவெல்லாம் நீயடா’.

RATING : 3.5 / 5

Our Score