full screen background image

பைரி – சினிமா விமர்சனம்

பைரி – சினிமா விமர்சனம்

டி.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் வி.துரைராஜ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் சையது மஜீத், மேக்னா எலன், விஜி சேகர், சரண்யா ரவிச்சந்திரன், கார்த்திக் பிரசன்னா, வசந்த், சதீஷ், மனோபன், சிஜி ரமேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வசந்த், படத் தொகுப்பு – சதீஷ் குமார், இசை – அருண்ராஜ், நடன இயக்குநர் – ஸ்ரீகிரிஷ், DI தொழில் நுட்பம் – ஸ்ரீ, பாடலாசிரியர் மோகன்ராஜா, எழுத்து, இயக்கம் – ஜான் கிளாடி.

இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சக்திவேலன் வெளியிட்டுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட வட்டார வழக்குடன் அந்தப் பகுதி மண் சார்ந்த கதைகளின் அடிப்படையாக வரும் திரைப்படங்களெல்லாம் விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் கவனிக்கப்படும். அந்த வகையில் கவனிக்கத்தக்க வகையில் வெளிவந்திருக்கிறது இந்த பைரி’ திரைப்படம்.

‘பைரி’ என்பது ஒரு வகை கழுகு இனம். புறாக்களை வேட்டையாடும் குணம் கொண்ட கழுகு இனம். புறா வளர்ப்பினை மையக் கதையாகக் கொண்ட படம் என்பதோடு இந்த ‘பைரி’யின் தாக்குதல்தான் படத்தின் உயிர் நாடியாகவும் இருப்பதால், புறாவின் பரம எதிரியான இந்த ‘பைரி’ என்ற கழுகின் பெயரையே படத்திற்கு தலைப்பாக பொருத்தமாக வைத்திருக்கிறார்கள்.

இன்றைய நாகர்கோயில் பகுதியில் கடந்த 100 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் புறா பந்தயத்தை மையமாக வைத்து இன்றைய வாழ்வியலுடன் கலந்து இந்தப் படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் ஜான் கிளாடி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அருகேயிருக்கும் அருகுவிளை என்ற கிராமத்தில் வசிக்கும் நாயகன் லிங்கம்’ என்ற சையத் மஜித் பந்தய புறா வளர்ப்பில் வெறித்தனம் உள்ளவர். ஆனால், இவரது அம்மாவுக்கு மகனின் இந்தப் பந்தயப் புறா பைத்தியம் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

தன் மகன் படித்தால் நல்ல நிலைக்கு வருவான் என்று நினைத்து மிகுந்த கஷ்டப்பட்டு காசு சேர்த்து பொறியியல் கல்லூரியில் படிக்க வைக்கிறார் தாய் விஜி சேகர். ஆனால் வரிசையாக பல அரியர்ஸ்களை வைத்துக் கொண்டு கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார் நாயகன்.

இந்நிலையில் அவரது முறைப் பெண்ணான சரண்யாவும், நாயகன் மீது காதல் கொண்டிருக்கிறார். ஆனால் நாயகனோ கல்லூரியில் தன்னுடன் படித்த மேக்னா மீது காதல் கொண்டு அலைகிறார்.

வருடா வருடம் நடக்கும் புறா பந்தயத்தில் தான் வளர்க்கும் புறாக்களையும் பறக்கவிட ஆசைப்படுகிறார் நாயகன். இதற்காக புறாக்களுக்கு பலவித பயிற்சிகளையும் கொடுத்து வருகிறார். அரியர்ஸ் தேர்வுகளைகூட எழுதாமல் தன் அம்மாவின் எதிர்ப்பையும் மீறி புறா பந்தயத்தில் கலந்து கொள்கிறார் நாயகன் சையத் மஜித்.

அதேசமயம் அதே ஊரில் பிரபல தாதாவாக இருக்கும் வினு லாரன்ஸூம் அந்தப் புறா பந்தயத்தில் கலந்து கொள்கிறார். ஆனால் வினு லாரன்ஸ் பந்தயத்தில் முறைகேடு செய்ய.. அதைத் தட்டிக் கேட்கும் நாயகனுக்கும், வினு லாரன்ஸூக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு ரத்தக் களரியாகிறது.

வினு லாரன்ஸின் ஆட்கள் நாயகனைத் தாக்கி மருத்துவமனையில் படுக்க வைக்க.. நாயகனின் உயிர் நண்பன் வினுவை பதிலுக்குத் தாக்கிவிட ஊரே இரண்டாகிவிடுகிறது. இப்போது நாயகனின் நண்பன் தலைமறைவாகிவிட.. கடைசியில் என்னவாகிறது என்பதுதான் இந்தப் பைரி’ படத்தின் முதல் பாகத்தின் திரைக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் சையத் மஜித் நூறு படங்களில் பேச வேண்டிய வசனங்கள், நடிப்பு,  ஆக்சன் என்று அத்தனையையும் இந்த ஒரே படத்திலேயே காண்பித்திருக்கிறார்.

அவருடைய கோபம் கொண்ட கேரக்டர் ஸ்கெட்ச் சில இடங்களில் கதைக்குப் பொருத்தமாக இருந்தாலும், பல இடங்களில் நமக்கு ரத்த அழுத்தத்தை உயர்ர்த்துகிறது.

நாயகன் சையத் மஜீத்தின் அதீதமான கோபங்கொண்ட நடிப்பினை ஒரு அளவுக்கு மேல் நம்மால் ரசிக்க முடியவில்லை என்பதும் உண்மைதான். தன் அம்மாவை விலைமாது என்று தனது நண்பனே வீடு தேடி வந்து திட்டுவதைக்கூட சாதாரணமாகக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஏற்க முடியாதது இயக்குநரே..!

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் விஜி சேகர்தான் படம் நெடுகிலும் பார்வையாளர்களை படத்துடன் ஒன்ற வைத்திருக்கிறார். இதே புறா பந்தயத்தால் அந்தக் குடும்பத்தில் நடந்த அத்தனை கொலைகளையும் நினைத்து தன் மகன் நல்லாயிருக்க வேண்டும் என்று நினைத்து அவர் படும் வேதனையும், கஷ்டங்களும் பார்த்தால் ஹீரோ நமக்கு கொலை வெறி கோபமே வருகிறது. அந்த அளவுக்கு நம்மை ஈர்த்துவிட்டார் நடிகை விஜி சேகர். அதிலும் மருத்துவமனை வாசலில் “லிங்கத்துக்கிட்ட இதைச் சொல்லிராதீங்கடா..” என்று கெஞ்சும் காட்சியில் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார் விஜி சேகர். ஹாட்ஸ் அப் மேடம்..!

நாயகனின் நண்பனாக இயக்குநர் ஜான் கிளாடியே நடித்திருக்கிறார். நண்பனை குத்திவிட்டார்களே என்ற கோபத்தில் வினுவை கடப்பாறையால் பிளந்துவிட்டு அதன் பின்பு உயிருக்குப் பயந்து நடுங்கி செத்து, கடைசியில் பரிதாபமாக செத்துப் போகும் அந்தக் கதாப்பாத்திரத்திற்கு தனது நடிப்பினால் உயிர் கொடுத்திருக்கிறார் ஜான் கிளாடி.

நாயகிகளாக நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரன், மேக்னா எலன் இருவரில் மேக்னாவுக்குத்தான் அதிகக் காட்சிகளும் நடிப்புக்கேற்ற ஸ்கோப்புகளும் படத்தில் உள்ளது.. அனைவரையும் “மக்களே” என்று அழைத்து உண்மைக்கு மிக நெருக்கமான நபராகப் பேசி நடித்திருக்கும் ரமேஷ் ஆறுமுகம், தனது ஏ கிளாஸ் நடிப்பைக் காண்பித்திருக்கிறார். சுயம்பு என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வினு லாரன்ஸ் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

மேலும் ஜான் கிளாடியின் அப்பாவாக நடித்திருக்கும் மாற்றுத் திறனாளி நடிகர் நடிப்புக்கு ஏதுடா ஊனம் என்று சொல்லி நம்மை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார்.

இவர் மட்டுமில்லாமல் படத்தில் வசனம் பேசி நடித்திருக்கும் அத்தனைக் கதாப்பாத்திரங்களும் தங்களது சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

ஏ.வி.வசந்தகுமாரின் ஒளிப்பதிவு இன்னொரு ஹீரோ போல படத்திற்குக் கிடைத்துள்ளது. புறா பறக்கும் காட்சிகளில் ஊரையே வலம் வரும் கேமிராவை பார்க்கும்போது எப்படி இதனை சாதித்தார் என்று ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

மேலும் அனைத்து சண்டை காட்சிகளிலும் உயிரைக் கொடுத்து அனைவரும் நடித்திருக்க அதனை கேமிராவில் பதிவு செய்திருக்கும் வேகமும், ஈடுபாடும் அந்தக் காட்சிகளையே தத்ரூபமாக நமக்குக் காண்பிக்கிறது.

சண்டை காட்சிகளை வடிவைத்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் விக்கிக்கு ஒரு ஜே போடலாம். வினு லாரன்ஸின் வீட்டு வாசலில் நடக்கும் சண்டை ஒரு மாபெரும் போர்க்களம். மிரட்டலாய் செய்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்.

அருண்ராஜின் இசையில் நீ பார்க்கும் பார்வை’ பாடல் கேட்கும் ரகம். மற்றவையெல்லாம் காட்சிகள் நகர்த்தலில் நம் காதுகளில் விழாமலேயே போய்விட்டது.

படத்தில் 35  நிமிடங்களில் 950 சிஜி ஷாட்களை வடிவமைத்துத் தந்திருக்கும் சிஜி வல்லுநர் குழுவைப் பெரிதும் பாராட்டலாம். மேலும் இப்படியொரு கிராபிக்ஸ் வருகிறது என்பதைக் கற்பனையில் வைத்திருந்து கடைசியில் மொத்தமாய், பிரமாதமாய் காட்சிகளைக் கத்தரித்து தந்திருக்கும் எடிட்டர் சதீஷ்குமாருக்கும் நமது வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

இதுவரையிலும் நாம் அறிந்திருக்காத புறாக்கள் பற்றி முழு விவரங்களுடன், புறாக்களின் வகைகள், அவை பறக்கும் தொலைவு, நேரம், சாப்பிடும் உணவு, வானத்தில் பறக்கும் புறாவை கீழே இறங்காமல் விரட்டுவது.. கீழே வரவழைக்க செய்யும் தந்திரம்.. என்று புறா வளர்ப்பு பற்றி ஒரு பெரிய பாடத்தையே இந்தப் படத்தில் தந்திருக்கிறார் இயக்குநர். இந்தப் பொது அறிவினை தந்தமைக்காக இயக்குநருக்கு மீண்டும் ஒரு பாராட்டு..!

ஆனால் இதை தமிழகத்தின் ஒரு பகுதியான நாகர்கோவில் பகுதி ஸ்லாங்கில் சொல்லியிருப்பதுதான் படத்தில் இருக்கும் மிகப் பெரிய குறை. இந்த வட்டார வழக்குப் பேச்சும் மிக அதிக வேகத்தில் அனைத்துக் கதாப்பாத்திரங்களாலும் பேசப்பட்டிருப்பதால் என்ன பிரச்சினை.. என்ன சண்டை.. எதற்காக சண்டை.. என்பதே புரியாத அளவுக்கு நம்மை தலைசுற்ற வைத்திருக்கிறார் இயக்குநர்.

மேலும் படத்தில் அனைத்துக் கதாப்பாத்திரங்களும் கோப ஆவேசத்தில் கத்திக் கொண்டேயிருப்பதும், வசனங்களை வேகம், வேகமாகப் பேசிவிட்டுச் செல்வதினாலும் அந்த ஆவேசம் நமக்குள் ரொம்பவே பொறுமையை சோதிக்கிறது.

திரைக்கதையில் நம்ப முடியாத சில திருப்பங்களும், கேரக்டர் ஸ்கெட்ச்சில் ஏதோ புறா பந்தயத்துக்காகவே பிறந்து தொலைத்திருக்கும் மனிதர்களாகவும் கதாப்பாத்திரங்ளை அமைத்திருப்பதால் அவர்களுடன் நம்மால் ஒன்ற முடியவில்லை.

நாடு இன்றிருக்கும் நிலைமையில் புறா வளர்ப்புக்காக படிக்கவே மாட்டேன் என்று சொல்லி கொலை செய்யவும் துணியும் இளைஞர்களின் வாழ்க்கைக் கதை இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருப்பது இன்றைய இளைய சமுதாயத்தினரின் மனதை திசை திருப்பும் என்பதால் இந்தக் கதைக் கரு நமக்கு வருத்தத்தையே தருகிறது.

“ஒரு புறாவுக்காய்யா இப்படியொரு அக்கப்போரு…?” என்று பொழுதுபோக்குக்காக சினிமா தியேட்டர்களை நாடி வரும் சாதாரண பொது ஜனங்கள் நினைக்கும் அளவுக்கு இந்தப் ‘பைரி’ படத்தின் கதை, திரைக்கதையை அழுத்தமாக எழுதி இயக்கியும் இருக்கிறார் இயக்குநர்.

இதன் இரண்டாவது பாகமும் கண்டிப்பாக வெளிவரும் என்று இயக்குநர் சொல்லியிருப்பது இப்போதே நம்மைப் பெரிதும் பயமுறுத்துகிறது.

பகவதி அம்மன்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்..!

RATING : 3.5 / 5

 

Our Score