‘நேத்ரா’ படத்திற்காக கனடாவில் 40 நாட்கள் படப்பிடிப்பு

‘நேத்ரா’ படத்திற்காக கனடாவில் 40 நாட்கள் படப்பிடிப்பு

‘செல்வா’, ‘மகாபிரபு’, ‘சாணக்யா’, ‘வல்லக்கோட்டை’, ‘வாத்தியார்’, ‘பகவதி’, ‘நிலாவே வா’, ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘ஏய்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் அடுத்து இயக்கி வரும் படம் ‘நேத்ரா’.

இந்தப் படத்தில் வினய்யும், தமனும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ஹீரோயினாக ‘கடுகு’ படத்தில் நடித்திருக்கும் சுபிஷா நடித்திருக்கிறார். மேலும், ‘ரோபோ’ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜி.கே.ரெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஜெயப்பிரகாஷ், இசை – ஸ்ரீகாந்த் தேவா, படத் தொகுப்பு – என்.கணேஷ்குமார், வசனம் – அஜயன்பாலா, கதை, திரைக்கதை, இயக்கம் – ஏ.வெங்கடேஷ். தயாரிப்பு – பர.ராஜசிங்கம், ஏ.வெங்கடேஷ்.

ஏ.வெங்கடேஷின் படம் என்றாலே அது கமர்ஷியல் ஹிட்டுதான். அதைத் தாண்டி வேறு எதையும் யோசிக்காதவண்ணம் தியேட்டருக்கு வரும் ரசிகர்களை மகிழ்வித்து அனுப்புவது மட்டுமே தனது வேலை என்றெண்ணும் சில இயக்குநர்களில் இவரும் ஒருவர்.

இந்தப் படமும் ஆக்சன், திரில்லர் கலந்த கதைதான். கூடுதலாக காதலும் சேர்ந்து கொள்ள.. இந்தக் காலத்திய இளைஞர்களுக்கு பிடித்தமான திரைக்கதையில், தெரிந்த சம்பவங்களில் மிக அழகான முறையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், வித்தியாசமான நகைச்சுவைக்கு இந்த முறை இமான் அண்ணாச்சியுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் கை கோர்த்திருக்கிறார்.

உள்நாட்டில் படப்பிடிப்பை முடித்த கையோடு இப்போது கனடாவுக்கு கிளம்ப ஆயத்தமாகியிருக்கிறது படக் குழு. கனடாவில் 40 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

Our Score