full screen background image

“அப்பா’ன்னு கூப்பிடுங்க.. ‘தாத்தா’ன்னு கூப்பிட்டிராதீங்க..” – பாரதிராஜாவின் வேண்டுகோள்..!

“அப்பா’ன்னு கூப்பிடுங்க.. ‘தாத்தா’ன்னு கூப்பிட்டிராதீங்க..” – பாரதிராஜாவின் வேண்டுகோள்..!

‘மைனா’ மற்றும் ‘சாட்டை’ போன்ற படங்களைத் தயாரித்த ஜான்மேக்ஸ் தனது ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படம் ‘மொசக்குட்டி.’

இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக ‘சாட்டை’ பட நாயகி மகிமா நடிக்கிறார். இவர்களுடன் பசுபதி, ஜோ மல்லூரி, சென்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர், தங்கஸ்வாமி, மீனாள், யார் கண்ணன், மதுமிதா, சிசர் மனோகர், ரிந்து ரவி, பிரேம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

‘மைனா’, ‘கும்கி’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார், இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரமேஷ் விநாயகம் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் எம்.ஜீவன்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடை பெற்றது. இயக்குனர் பாரதிராஜா தலைமையில் நடந்த இவ்விழாவில் முதல் பாடல் சிடியை இயக்குனர் பிரபு சாலமன் வெளியிட, நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.

பின்னர், இயக்குனர் பாரதிராஜா பேசுகையில், ’’இப்போது சினிமா டிஜிட்டல் உலகமாகி விட்டது. இன்றைய இயக்குனர்களின் படங்களைப் பார்த்து வியக்கிறேன். தொழில் நுட்பம் உங்கள் கைகளில் இருக்கிறது. அன்று, நாடகம், மற்றும் அனுபவங்களை வைத்துக் கொண்டு சினிமாவுக்கு வந்தோம். இன்று பட்டம் பெற்று தொழில் நுட்ப வசதிகளோடு வருகிறீர்கள். விஞ்ஞானம் உங்களுக்கு கை கொடுக்கிறது. உங்களுக்கு தலை வணங்குகிறேன்.

மூத்த கலைஞன் என்பதால் என்னை ‘அப்பா’ என்று அழைப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். ‘தாத்தா’ என்று அழைத்து விடாதீர்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று படைப்புகளோடு நான் வருகிறேன். இந்த ‘மொசக்குட்டி’ படத்தின் இயக்குனர் ஜீவன், என் மதுரை மண்ணில் இருந்து வந்திருக்கிறான். காய்ந்த பூமியிலிருந்து வந்தவன். புகைப்பட கலைஞனாக, ஒளிப்பதிவாளனாக இருந்தவன், இப்போது இயக்குனராக வந்திருக்கிறான்.

மண்வாசனையோடு படங்களை எடுக்க வேண்டும். தாய்ப்பால், தாய்ப்பால்தான். அதற்கு நிசமான மாற்று கிடையாது.. நம் மண்ணின் வாழ்க்கையை நாம்தான் மீட்டெடுக்க வேண்டும். நமது கலாச்சாரம், பண்பாடு, மண் சார்ந்த படங்களை எடுக்க வேண்டும். அந்த மண் சார்ந்த கதைகளில்தான் ஈரம் இருக்கும். என்னதான் பிரமாண்ட படங்கள் எடுத்தாலும் மண் வாசனை, மண் வாசனைதான்.

இயக்குனர் பிரபு சாலமன் இங்க பேசும்போது ‘நான் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிக்கணும்’னு சொன்னாப்புல.. நான் என்னவோ சினிமாவைவிட்டே போயிட்டா மாதிரி பேசிட்டாப்புல. நான் சினிமாவை விட்டு ஒண்ணும் ஒதுங்கிப் போகல. சினிமாக் கலைஞனுக்கு ஒரே இன்னிங்க்ஸ்தான். ரெண்டாவது இன்னிங்க்ஸ் எல்லாம் கெடையாது. இப்போதும் என் பழைய படங்களை பார்க்கின்றபோது அசந்து போகிறேன். உங்களோட நானும் நிச்சயமா போட்டி போடுவேன். இன்னும் ரெண்டு வருஷத்துல, மூணு படங்களைத் தரப் போறேன். வெயிட் பண்ணி அந்தப் படங்கள் எப்படி இருக்கப்  போகுதுன்னு பாருங்க…?!” என்றார் சந்தோஷத்துடன்.

விழாவில் தாயரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஆர்.பி.சவுத்ரி, டி.சிவா, ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ஏ.ஜி.எஸ்.ரங்கராஜன், இயக்குனர்கள் சீமான், பேரரசு, பிரபு சாலமன், பொன்ராம், செல்வன், பாடலாசிரியர் சினேகன், இசையமைப்பாளர்கள் டி.இமான், ரமேஷ் விநாயகம், ராஜ்கபூர், சாட்டை அன்பழகன், ஆர்.வி.உதயகுமார், யுவன், இயக்குனர் ராஜபாண்டி, தயாரிப்பாளர் VVV RECORDS வினோத், ஹரிணி பிக்சர்ஸ் ஸ்ரீகாந்த், இயக்குனர் யு.பி.மருது மன்னன் பிலிம்ஸ் மன்னன், சென்ராயன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் பேசினார்கள்.

விழாவுக்கு வந்தவர்கள் அனைவரையும் தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் வரவேற்றார். இயக்குனர் ஜீவன் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை நடிகர் ஜோ மல்லூரி தொகுத்து வழங்கினார்.

Our Score