full screen background image

நேர் கொண்ட பார்வை – சினிமா விமர்சனம்

நேர் கொண்ட பார்வை – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தில் அஜீத்குமார் நாயகனாக நடித்துள்ளார். மற்றும் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியாங், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அஷ்வின் ராவ், சுஜித் சங்கர், ரங்கராஜ் பாண்டே, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – போனி கபூர், இயக்கம் – ஹெச்.வினோத், இசை – யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு – நீரவ் ஷா, படத் தொகுப்பு – கோகுல் சந்திரன், கலை இயக்கம் – கே.கதிர், சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், பாடல்கள் – பா.விஜய், நாகார்ஜூன், உமாதேவி, யூநோஹூ, நடன இயக்கம் – கல்யாண், பிருந்தா, தயாரிப்பு ஒருங்கிணைப்பு – எஸ்.பி.சொக்கலிங்கம், நிர்வாகத் தயாரிப்பு – ஜெயராஜ் பி.பிச்சையா, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா.

2016-ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த ‘PINK’ என்கிற படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படம்.

ஹிந்தியில் நடிகை டாப்சி செய்த கதாபாத்திரத்தை தமிழில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் செய்திருக்கிறார். ஹிந்தியில் அமிதாப்பச்சன் ஏற்றிருந்த வக்கீல் வேடத்தில் தமிழில் அஜீத்குமார் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட ‘பின்க்’ படத்தின் 90 சதவிகிதத்தை மாற்றாமல் அப்படியே எடுத்திருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத்.

மீரா, பமிலா மற்றும் ஆண்ட்ரியா மூவரும் சென்னையில் ஒரு வீட்டில் ஒன்றாக இருக்கிறார்கள். மீரா ஒரு நடனக் குழுவில் ஆடி வருகிறார். பமீலா ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். ஆண்ட்ரியாவோ அழகுக் கலை நிபுணர். ஆண்ட்ரியா மேகலாயாவில் இருந்து இங்கே வந்திருக்கிறார். மீராவுக்கும், பமீலாவுக்கும் லோக்கலிலேயே குடும்பம் உண்டு என்றாலும், குடும்பத்தைப் பிரிந்து வேலைக்காக சென்னையில் வசிக்கிறார்கள்.

மீரா ஒரு நாள் ஒரு நடன நிகழ்ச்சியில் நடனமாடுகிறார். அந்த நிகழ்ச்சி முடிவடையும்போது இவர்களின் ஆண் நண்பர்களான ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அஷ்வின் ராவ், சுஜித் சங்கர் ஆகிய நால்வரும் இவர்களை சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு அழைக்கிறார்கள். பெண்கள் மூவரும் செல்கிறார்கள்.

சாப்பிடுவதற்கு முன்பு அனைவரும் சேர்ந்து மது அருந்துகிறார்கள். பின்பு சாப்பிடுகிறார்கள். வீட்டுக்குக் கிளம்பும்போது அர்ஜூன் சிதம்பரம் மீராவை செக்ஸுக்கு வற்புறுத்துகிறான். இது பிடிக்காமல் மீரா போராட.. அது முடியாமல் போய் கடைசியாக பீர் பாட்டிலை எடுத்து அர்ஜூனின் தலையை உடைத்து காயப்படுத்துகிறாள் மீரா.

இதன் பின்பு இந்த மூன்று பெண்களும் வீட்டுக்கு வந்து விடுகிறார்கள். காயம்பட்ட அர்ஜூன் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சையெடுக்கிறான். இருந்தாலும் இவர்களுக்கு மீரா மீது கோபமான கோபம். அவளை ஏதாவது செய்ய வேண்டு்ம் என்று துடிக்கிறார்கள்.

அர்ஜூனின் மாமா ஜெயப்பிரகாஷ் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் சகல செல்வாக்குடன் இருக்கிறான். இதனால் முதலில் மீரா தங்கியிருக்கும் வீட்டு ஓனருக்கு போன் செய்து அவர்களை காலி செய்யச் சொல்கிறான். அவர் மறுக்க.. அர்ஜூனின் அடியாட்கள் வீட்டு ஓனரை நடுரோட்டில் மிரட்டி அனுப்பி வைக்கிறார்கள்.

அர்ஜூனின் ஆள் ஒருவன் மீராவுக்கு போன் செய்து மிரட்டுகிறான். ஆனால் மீரா “தைரியம் இருந்தால் நேரில் வந்து பேசு” என்று தைரியமாகச் சொல்ல.. கோபமடையும் அவர்கள் மீரா வாக்கிங் போய்விட்டு வரும்போது காரில் வந்து அவளைக் கடத்துகிறார்கள். காருக்குள் வைத்து அவளை மானபங்கப்படுத்துகிறார்கள். பின்பு மீராவை இறக்கிவிட்டு எச்சரிக்கை செய்துவிட்டுப் போகிறார்கள்.

அர்ஜூனின் நண்பனான ஆதிக் ரவிச்சந்திரன் சமாதானமாகப் போய்விடலாம் என்று நினைத்து இதற்கான முயற்சிகளை எடுக்கிறார். ஆனால் போனில் பேசும்போது வார்த்தைகள் தடித்து சமாதானம் கிடையாது என்று பமீலா, அர்ஜூனிடம் கத்திவிடுகிறாள்.

இதையடுத்து மீரா போலீஸுக்கு போய் சம்பந்தப்பட்ட மூவர் மீதும் புகார் கொடுக்கிறாள். ஆனால் போலீஸ் எஃப்.ஐ.ஆர்.கூட பதிவு செய்யாமல் அவளை மறைமுகமாக மிரட்டி அனுப்பி வைக்கிறது. ஆனால் அடுத்த நாளே மகாபலிபுரம் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் பெண் இன்ஸ்பெக்டர் மீரா மீது ஒரு தாக்குதல் வழக்கினை பதிவு செய்து அவரைக் கைது செய்கிறார்.

இந்த நிகழ்வுகள் அனைத்தையும் மீராவின் பக்கத்து பிளாட்டில் குடியிருக்கும் ‘பரத் சீனிவாசன்’ என்னும் அஜீத்குமார் பார்த்துக்  கொண்டேயிருக்கிறார். புகழ் பெற்ற வக்கீலான அவர், தனது மனைவி பிரசவ நேரத்தில் இறந்து போனதையடுத்து கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சையெடுத்து வருகிறார்.

மீராவுக்கு உண்டான பிரச்சினையில் தானே வக்கீலாக இறங்கி வாதாடுவதாகச் சொல்கிறார். உதவி செய்ய ஆட்களே இல்லாத நிலையில் பமீலாவும், ஆண்ட்ரியாவும் இதனை ஏற்றுக் கொள்ள.. அஜீத் குமார் நீதிமன்றத்தில் மீரா சார்பாக வாதாடுகிறார்.

மீரா அர்ஜூனை தாக்கியதற்கு சாட்சிகளும், ஆதாரங்களும் இருக்கும் அதே நேரத்தில் “இது தற்காப்புக்காக நடைபெற்ற தாக்குதல்.. திட்டமிட்டு முன் விரோதத்துடன் நடைபெற்றதல்ல…” என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் வக்கீல் அஜீத்குமார்.

இதனை எப்படி அவர் நீதிமன்றத்தில் நிறுவி மீராவையும் அவளது நண்பிகளையும் விடுவிக்கிறார் என்பதுதான் இந்த ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் அட்டகாசமான திரைக்கதை.

முதலில் இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகர் அஜீத்குமாருக்கு நமது பாராட்டுக்கள். நன்றிகள். ஹிந்தியில் அமிதாப் ஏற்றிருந்த இந்த கனமான பாத்திரத்தை செய்வதற்கு தமிழில் கமல்ஹாசன், நாசர், பிரகாஷ்ராஜ், சரத்குமார் போன்றவர்களெல்லாம் காத்திருக்கும்போது, வெகுஜன ரசிகர்களின் நாயகனான அஜீத் இந்தக் கேரக்டரை செய்வார் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஒரு கனவு போல இந்த மேஜிக் நடந்துவிட்டது.

தனது வெறி பிடித்த ரசிகர்களை மனதில் கொண்டிருந்தால் இந்தப் படத்தில் அஜீத் நடித்திருக்க மாட்டார். ஆனால் அவருடைய இதயம் கவர்ந்த மறைந்த நாயகி ஸ்ரீதேவியின் விருப்பத்திற்காக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரீதேவியின் விருப்பமும், அஜீத்தின் கடமையும் சேர்ந்து இந்தப் படத்தை அஜீத்தின் கேரியரிலேயே மிக முக்கியமான படமாக மாற்றிவிட்டன.

ஹிந்தி மூலத்தை கொஞ்சமும் சிதைக்காமல் அப்படியே திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். அஜீத்துக்காக மட்டும் சின்ன விட்டுக் கொடுத்தலாக ஒரு சண்டை காட்சியையும், அஜீத்-வித்யா பாலன் காதல் காட்சி, அவர்களது வாழ்க்கை சம்பந்தப்பட்ட சில காட்சிகளையும் இணைத்துள்ளார். இதனால், ஒரிஜினலைவிட இந்தத் தமிழ்ப் பதிப்பு கூடுதலாக 20 நிமிடங்களைப் பிடித்துவிட்டது.

ஹிந்தியில் ஆண்ட்ரியா வேடத்தில் நடித்த அதே பெண்தான் தமிழிலும் நடித்திருக்கிறார். வீட்டு ஓனரான வயதான பெரியவராக ஹிந்தியில் நடித்தவரே தமிழிலும் நடித்திருக்கிறார். கூடுதலாக தமிழில் அஜீத்திற்கு ஒரு உதவியாளராக ஜூனியர் பாலையாவை நடிக்க வைத்திருக்கிறார்கள். ஹிந்தியில் அப்படியொரு கேரக்டரே இல்லை.

ஹிந்தியில் அமிதாப்பின் மனைவி நோயினால் பாதிக்கப்பட்டு இறந்துவிடுவார். இதில் அஜீத்தின் மனைவியான வித்யா பாலன், பிரசவ நேரத்தில் ஏற்பட்ட பிரச்சினையினால் மரணமடைகிறார். இதுதான் பெரும் வித்தியாசம்.

படத்தின் முக்கியக் கதாபாத்திரமான வக்கீல் வேடத்தில் ஹிந்தியில் கிழட்டுச் சிங்கமாய் காட்சியளித்த அமிதாப் தனது கேரக்டரை கச்சிதமாகச் செய்திருந்தார். வயதான தோற்றம். ஆனால் அதிலும் ஒரு கம்பீரம்.. முதியவர்களுக்கேற்ற ஒரு நோய்.. அதனுடன் போராடியபடியே நாலு பேருக்கு நல்லது செய்ய நினைக்கும் அவரது குணம்.. இந்தக் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு பங்கமில்லாமல் நடித்திருந்தார் அமிதாப். இதற்கு துணை நின்றது அவரது கனமான குரலும், வசன உச்சரிப்பும்தான்.

இதையே தமிழிலும் அப்படியே பார்முலா மாறாமல் பின்பற்றியிருக்கிறார் அஜீத். தன்னைத் தாக்கியிருக்கும் மன அழற்சி நோயினால் பாதிக்கப்படும் தருணத்தில் அவர் காட்டும் வித்தியாசமான உடல் மொழி சார்ந்த துயரத்தையும், மாத்திரையில்லாமல் அவரால் இருக்க முடியாது என்கிற சூழலும், அவர் மீதான ஒரு பரிதாப உணர்வை பார்வையாளருக்குப் புகுத்தும் அதே நேரம்… இதே தாக்கத்தை அவர் எடுத்துக் கொண்டு வழக்கின் மீதும் பரவ விட்டிருக்கிறது.

பரத் சுப்பிரமணியம் என்கிற தனது வழக்கறிஞர் கேரக்டரில் தனது சின்னச் சின்ன ஆக்சன்களில் முதலில் ஈர்க்க வைக்கும் அஜீத், பிற்பாடு வழக்கின் வாதாடும் தருணங்களில் தனது ஆளுமையைக் காட்டியிருக்கிறார்.

“என் முகத்துல பயம் தெரியுதா..?” என்று நீதிமன்றத்தில் உக்கிரமாக கேள்வி கேட்பதும், “என்னைப் பயமுறுத்துறவங்களை பயமுறுத்துறதான் எனது பழக்கம்..” என்று சுத்தியல் அடி போல சொல்லும் தோரணையுமே பயமுறுத்துகிறது.

இறுதி விவாதத்தின்போது கேள்விகளை அவர் உச்சரிக்கும்விதம்.. சாட்சிகளிடம் அவர் விசாரிக்கும் தோரணை.. வசன உச்சரிப்பு.. எதிரியின் வாயிலிருந்தே உண்மையை வரவழைக்கும் தந்திரம்.. அந்த மூன்று பெண்களிடமும் தனது கட்சிக்காரர்கள் என்ற பாகுபாடில்லாமல் வெளிப்படையாக பல சங்கடமான கேள்விகளைக் கேட்டு அவர்களை அழ வைப்பது என்றெல்லாம் செய்து இறுதியில் அந்த ஒரேயொரு வார்த்தை ‘No Means No’ என்று இருண்டு போன முகத்துடன் அவர் சொல்லி முடிக்கும்விதம்தான், இந்தப் படத்தை பார்வையாளர்கள் மனதில் ஆழமாகப் பதிய வைத்திருக்கிறது.

அஜித்தின் கூர்மையான கண்களை இதுவரையிலும் எந்தவொரு இயக்குநரும் இந்த அளவுக்குப் பயன்படுத்தியதில்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு கேமிரா அவரது கண் அசைவைக்கூட பதிவாக்கியிருக்கிறது.  

வழக்கில் வெற்றி பெற்ற உடன் தளர்ந்த உடலுடன் அவர் நடந்து வருகையி்ல வழி மறிக்கும் அந்தப் பெண் போலீஸ் கான்ஸ்டபிள், அவரைத் தடுத்து நிறுத்தி கை குலுக்கும் காட்சியில்.. வசனமே இல்லாத அந்தக் காட்சி ஓராயிரம் கவிதைகளைச் சொல்கிறது. வெல்டன் இயக்குநரே..!

‘வீரம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ என்று படு கமர்ஷியல் படங்களையே கொடுத்து தனது ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்தியிருக்கும் அஜீத் முதன்முதலாக சமூக நோக்கில் ஒரு குறிப்பிடத்தக்க படத்தைக் கொடுத்திருக்கிறார். இதற்காக அவருக்கு நமது நன்றிகள்.

‘மீரா’வாக நடித்திருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது கதாபாத்திரத்தின் வலிமையை தனது நடிப்பின் மூலமாக நிரூபித்திருக்கிறார். “நான் எந்தத் தவறும் செய்யவில்லை.. நான் எதற்கு சமாதானம் பேச வேண்டும்…” என்பதில் துவங்கி.. இறுதியில் “நான் பணம் எதுவும் வாங்கவில்லை…” என்று நீதிமன்றத்தில் கையறு நிலையில் கதறி அழும் காட்சியில் ஒட்டு மொத்த அனுதாபத்தையும் தன் பக்கமே ஈர்த்துவிட்டார்.

‘பமீலா’வாக நடித்திருக்கும் அபிராமி படத்தின் துவக்கத்தில் இருந்தே அழுத முகத்துடனேயே காட்சியளிக்கிறார். வக்கீல் ரங்கராஜ் பாண்டேவின் கேள்விக் கணைகளைத் தாங்கிக் கொள்ளாமல் அவர் பணம் வாங்கிய உண்மையைச் சொல்லத் துவங்கும்போது மிகப் பெரிய அதிர்ச்சியை நாம் சந்திக்க நேரிடுகிறது.

ஆனால், அர்ஜூனுடன் போனில் சமாதானம் பேசும் காட்சியில்ல் தனது நண்பிக்கு உண்டான சின்ன மரியாதைக் குறைவைக்கூட தாங்க முடியாமல், அந்தத் திட்டத்தை உடைத்தெறியும் காட்சியில் இவருடைய கேரக்டர் மீது ஒரு மரியாதையும் உண்டாகியது.

மூன்றாவது பெண்ணான மேகலாய பெண் ஆண்டிரியாவும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நீதிமன்றத்தில் அவருடைய கேரக்டரை சிதைக்கும்படியான கேள்விகள் எழும்போதெல்லாம் நீதிபதியிடம் “இப்படியெல்லாம் கேட்கலாமா..?” என்று கேட்குமிடத்தில் பாவமாய் தோன்றுகிறது.. குறையில்லாத நடிப்பு.

‘வக்கீல் சத்யமூர்த்தி’யாக ரங்கராஜ் பாண்டே. அவருக்கே உரித்தான கேலி, கிண்டல், நக்கல் கலந்த பேச்சு.. அவருடைய அலட்சியமான உடல் மொழி.. பெண்களிடம் வெளியில் கேட்க முடியாத கேள்விகளை வக்கீல் என்கிற முறையில் நீதிமன்றத்தில் அவர் விசாரிக்கும் பாங்கு.. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் முதலில் இந்த இந்தியாவில் ஒழித்துக் கட்டப்பட வேண்டியவர்கள்.. இந்தக் கதையில் வில்லனாக இருந்தவர்களில்லை. இவர்களுக்கு வக்காலத்து வாங்கும் வக்கீல் சத்தியமூர்த்தி போன்றவர்கள்தான் என்றே தோன்றுகிறது.

வித்யா பாலனுக்கு இதுதான் முதல் தமிழ்ப் படம். அவருடைய தோற்றத்திற்கேற்ற மனைவி கேரக்டர். அதிகமான காட்சிகள் இல்லாமல் காதலுடனேயே வாழ்ந்து, காதலுடனேயே சட்டென்றும் இறந்தும் போகிறார்.  ஆனால் அவர் வருகின்ற காட்சி முழுவதும் அவருடைய ஸ்கிரீன் பிரெஸ்னஸ் அழகு. ஸ்கிரீனையும் அழகுபடுத்தியிருக்கிறது. இவருடைய உடை வடிவமைப்பாளருக்கும் ஒரு ஷொட்டு.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். நீதிமன்ற விசாரணை காட்சிகள் முழுவதிலும் ஒரு சிறிய டிம் லைட்கூட இல்லாமல் கடைசிக் காட்சிவரையிலும் தெளிவாகத் தெரிகிறது திரை. இரவு நேரக் காட்சிகளைக்கூட சஸ்பென்ஸ், திரில்லர் டைப்பில் படமாக்கியிருக்கிறார். அந்தச் சண்டை காட்சியை பரபரப்பாக படமாக்கியிருக்கிறார் திலீப் சுப்பராயன். இதற்கு பெரிதும் உதவியிருக்கிறார் நீரவ் ஷா.

கோகுல் சந்திரனின் படத் தொகுப்பில் இடைவேளைக்குப் பின்னான காட்சிகள் அத்தனை கோர்வையாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நீதிமன்ற மோதல் காட்சிகளில் அடுத்தடுத்து கேரக்டர்களின் நடிப்பினை ஒன்றுவிடாமல் தொகுத்தளித்திருக்கிறார் படத் தொகுப்பாளர்.

பாடல்களே தேவையில்லாத இந்தப் படத்தில் சோகத்திற்கும், மகிழ்ச்சிக்குமாக சேர்த்து 3 பாடல்களை கொடுத்திருக்கிறார்கள். இதில் ‘அகலாதே’ பாடல் மிகப் பெரிய அளவுக்கு ஹிட் ஆகியிருக்கிறது.

இருந்தும் இந்தப் படத்தைப் பொறுத்தமட்டில் அஜீத்-வித்யா பாலன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி படத்தின் வேகத்தைக் குறைக்கிறது என்பது மட்டும் உண்மை. ஆனால், பாடல் காட்சிகளைப் படமாக்கியிருக்கும்விதம் ரசிக்க வைத்திருக்கிறது என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

ஹிந்தி படத்தின் பெரும்பாலான வசனங்களை இதிலும் அப்படியே மொழி மாற்றம் செய்திருக்கிறார்கள். அதில் தப்பில்லைதான். 

“இப்போவெல்லாம் ஒரு கடிகாரத்தோட முள்ளுதான் ஒரு பொண்ணோட கேரக்டரை முடிவு பண்ணுது. இத்தனை மணிக்குள்ள வீட்டுக்கு வந்தால் அவள் நல்ல பொண்ணு. அந்த நேரத்தைத் தாண்டி வந்தால், அவள் கேரக்டர் சரியில்லாதவள்.. இப்படித்தான் இந்த சமுதாயம் இன்றைக்கு நமது பெண்களைப் பார்க்கிறது..” என்று அழுத்தமாய் நீதிபதியிடம் அஜீத் சொல்லும் இந்த ஒரு வசனமே, வசனகர்த்தாவின் திறமைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்கிறது..!

ஒரு வெகுஜன ரசனையுடன் வலுவான கதையம்சத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் தற்போது தமிழ்ச் சினிமாவுலகத்தில் பெரும் வாதப் பிரதிவாதங்களை உருவாக்கி வைத்திருக்கிறது.

முதற்கண் இத்திரைப்படத்தின் கதை இந்தியாவின் வட நாட்டுப் பகுதிகளுக்குப் பொருத்தமான கதை. ஆனால் தென்னிந்தியாவில் இது போன்ற மேட்டுக்குடித்தனமான பெண்களைப் பற்றிய கதையை ஏற்றுக் கொள்வார்களா என்பதே இதுவரையிலும் புரியாத புதிராக இருந்து வந்திருக்கிறது. இத்திரைப்படம் மீதான அதீத கவனம் அஜீத்தால் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண்களின் நடத்தைகளைக் குறை சொல்லி அதனையே தங்களுக்குச் சாதமாக்கிக் கொண்டு அவர்களை வன்புணர்வு செய்ய நினைக்கும் ஆணாதிக்கத்தனத்தை நோக்கி தனது கேள்வியை எழுப்பியிருக்கிறது இத்திரைப்படம்.

நீதிமன்றத்தில் அஜீத் முன் வைக்கும் பல வாதங்கள் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் பெண்களின் உரிமையாக பேசப்பட்டு வருகிறது.

“ஆர் யூ வெர்ஜின்..?” என்று மீராவை நோக்கிக் கேள்வியெழுப்பி அவருடைய வாயாலேயே அவருடைய அந்தரங்க வாழ்க்கையைப் பற்றிய விஷயத்தை வெளிப்படுத்தும்போது, நடக்கும் விவாதங்கள் மிக, மிக அருமையானவை. இதற்காக மெனக்கெட்டு எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் பல ஆயிரம் கேள்விகளை நமக்குள் எழுப்புகின்றன.

ஒருவரின் விருப்பத்துக்கு எதிராக, அவர் உடல் மீது நிகழ்த்தப்படும் எல்லாமே வன்முறைதான் என்று இறுதித் தீர்ப்பாய் சொல்லப்படுகிறது.  இது உண்மையும்கூட..!

பெண்களை மிரட்டி பயமுறுத்த, அவளை முடக்கிப் போட ஆண் வர்க்கத்தினர் சிலர் இணையம் மூலமாக அந்தப் பெண்களை கேவலப்படுத்துவதுபோல பேஸ் மார்பிங் செய்து வெளியிடும் கேவலமான செயலையும் இத்திரைப்படம் சுட்டிக் காட்டுகிறது.

இதைச் செய்தால் அந்தப் பெண் ஒடுங்கி, நடுங்கி தங்கள் வலையில் வீழ்வார்கள் என்று எண்ணுகிறார்கள் ஆண்கள். இப்படி தங்களை விரும்பாத பெண்ணின் உடலை தங்களுக்குச் சொந்தமாக்க நினைக்கும் ஆண்களின் பொதுப் புத்தியையும் இத்திரைப்படம் கிழித்திருக்கிறது. பெண்கள் தங்களைச் சூழும் இந்தச் சூழ்ச்சிகளை உடைத்தெறிந்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் போவதுதான் அந்த ஆண் திமிரை அடக்கும் செயல்..!

படத்தில் இடம் பெற்றிருக்கும் பல வசனங்கள் இன்றைய இந்தியச் சமூகத்தின் பொதுப் புத்தியில் பெண்கள் பற்றிய எண்ணங்களை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது. “குடிக்கெதிராக டாஸ்மாக் கடைகளின் முன்பாக பெண்கள் போராடி வரும் நம் நாட்டில், உங்களை போன்ற பெண்கள் குடிச்சிட்டு சுத்துறீங்க…”, “உங்களைப் பார்த்தால் இந்த விஷயத்தில் நிறைய அனுபவம் உள்ளவர் மாதிரியே தெரியுதே.. எப்படி இப்படியெல்லாம் ஆண்களை மயக்குறதுக்கு ஐடியா போடுறீங்க..”,  “வீட்ல அம்மாவும், அப்பாவும் காத்திருக்கும்போது இது மாதிரி மது அருந்த… முன் பின் தெரியாத ஆண்கள் கூப்பிட்ட உடனேயே அவர்களுடன் பார்ட்டிக்குப் போகும் நீங்கள் எப்படி நல்ல குணமுள்ள பெண்ணாக இருக்க முடியும்..?” – இப்படியெல்லாம் தெளிவான ஆணாதிக்க வசனங்களை முன் வைக்கிறார் எதிர்த் தரப்பு வக்கீலான ரங்கராஜ் பாண்டே.

நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரும் மீரா வீட்டருகில் இருக்கும் ஒருவர், “அந்தப் பொண்ணுங்க வீட்டுக்கு நிறைய பசங்க நேரங்கெட்ட நேரத்துல வருவாங்க; அதனால் அவங்க மோசமான பொண்ணுங்க…” என்று ஒரு விளக்கத்தை கொடுப்பார்.

“அப்படியென்ன மோசமான பொண்ணுங்க..?” என்று அஜீத் விளக்கம் கேட்கும்போது சாட்சி திருதிருவென முழிப்பார். “அவங்க பெட்ரூமை எட்டிப் பார்த்திருக்கீங்களா…? அந்த பசங்ககூட இந்தப் பொண்ணுங்க படுத்திருந்ததை பாத்தீங்களா?..” என்று கேள்வி கேட்கும்போது “அதெப்படி ஸார்…  நான் போய் அவங்க பெட்ரூமை எப்படி எட்டிப் பார்க்க முடியும்..?” என்பார். “பின்பு எப்படி அந்தப் பெண்களை மோசமான பெண்கள்ன்னு சொல்றீங்க..?” என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் தலையைச் சொறிவார்.

இன்றைக்கு நமது சமூகத்தில் இது போன்ற பதில் இல்லாத கேள்விகள்தான் அதிகம். நமது பொதுப் புத்தியில் பொதுவாகவே இப்படியொரு விஷயத்தைத்தான் நாம் ஏற்றி வைத்திருக்கிறோம். எதை வைத்து ஒரு பெண்ணின் நடத்தையை அடுத்தவர்கள் முடிவு செய்கிறார்கள் என்பதை இந்த ஒரு காட்சியே வெட்டவெளிச்சமாக்குகிறது.

“ஒரு பெண் வெறுமனே சிரித்து, ஆண்களைத் தொட்டுப் பேசினால் அவள் உடனே செக்ஸூக்கு அழைத்தால் வருவாள்..” என்கிற பெருவாரியான ஆண்களின் எண்ணம். “பெண்கள் அணிந்திருக்கும் உடைகள்தான் அவளது கேரக்டரை தீர்மானிக்கின்றன..” என்பதும் படத்தில் எடுத்தாளப்படும் இன்னொரு ஆணாதிக்கத்தனமான கருத்து. “ஆண்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால், பெண்கள் குடிக்கக் கூடாது. அப்படி குடித்தால் அவள் நடத்தை கெட்டவள்..” இப்படிம் சில வசனங்கள் இன்றைய பொதுமக்கள் மத்தியில் பெண்களைப் பற்றியிருக்கும் காழ்ப்புணர்ச்சியான எண்ணத்தை வெளிப்படுத்துகின்றன.

தனது இறுதி வாதத்தில் அஜீத் எடுத்து வைக்கும் “நோ மீன்ஸ் நோ ஸார்..” என்கிற வார்த்தை வெறும் வார்த்தையல்ல.. ஒரு சுதந்திரத்தின் மறுபக்கம். பெண்கள் மீதான அத்துமீறலை எடுத்துச் சொல்லும் உண்மையான கருத்து.

“ஒரு பெண் கவர்ச்சியாக ஆடை உடுத்துபவளாக இருக்கலாம்..  அவள் சிகரெட் புகைக்கலாம்.. மது அருந்தும் பழக்கமும் அவளுக்கு இருக்கலாம்.. ஆண்களுக்குச் சமமாக அடல்ட் காமெடி ஜோக்கை சொல்பவளாகவும், அதை ரசிப்பவளாகவும்கூட இருக்கலாம்.  பல ஆண்களோடு ஊர் சுற்றுபவளாக இருக்கலாம்.. ஆண்களுடன் ஒன்றாக ஒரே அறையில் அவள் இருக்கலாம். ஏன் அவள் ஒரு பாலியல் தொழிலாளியாகவும்கூட இருக்கலாம். ஏன் ஒரு மனைவியாகக்கூட இருக்கலாம்..

ஆனால், இந்தக் கேரக்டர் ஸ்கெட்ச்சில் இருக்கும் ஒரு பெண்ணிடம் அவள் விருப்பத்திற்கு மாறாக எந்த ஆணும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்தி அழைக்கக் கூடாது.. அவள் விருப்பப்பட்டால், மட்டுமே அது நடக்க வேண்டும். இதுதான் ‘நோ மீன்ஸ் நோ’ என்னும் சேப்டர்..” என்கிறது இத்திரைப்படம்.

அதே சமயம் பெண்கள் தங்களுடன் நெருங்கி பழகும் அளவுக்கும், தங்களோடு வெளியூரோ, வெளி இடங்களுக்கோ நம்பிக்கையுடன் உடன் வந்து உறவாடும் அளவுக்கு பெரும்பாலான இந்திய ஆண்கள், இன்னமும் தங்களை பக்குவப்படுத்திக் கொள்ளவில்லை என்பதும் இந்த படம் உணர்த்தும் ஒரு செய்திதான்…!

இத்திரைப்படம் பாலிவுட்டிற்கு ஏற்றதுதான். ஆனால் தமிழகத்தில் இது சொல்லும் செய்தி சாத்தியப்படுமா என்கிற சர்ச்சையும் எழாமல் இல்லை.

மது என்பதே ஒரு கேடு கெட்ட கெட்டப் பழக்கம். அது நாட்டுக்கும், வீட்டுக்கும் பெரும் கேடு.. அதை யார் குடித்தாலும் தவறுதான் என்பதையும்.. கல்யாணத்திற்கு முன்பேயே செக்ஸ் உறவு கொள்வது தனி மனித உரிமையில் சரி என்றாலும், அது சமூகச் சீர்கேட்டை உருவாக்கும் ஒரு காரணி என்பதால் அது மாபெரும் தவறு என்பதையும்.. ஒழுக்கம் என்பது இரு பாலருக்குமே பொருந்தும் என்பதையும்.. ஆண், பெண் நட்புகளுக்கு ஒரு எல்லைக் கோடு நிச்சயமாக உண்டு. அதனை இரு தரப்பினருமே மீறி தாண்டக் கூடாது. தாண்டினால் இது போன்ற பிரச்சினைகள் நிச்சயமாக எழும் என்பதையும் இத்திரைப்படம் சொல்லவே இல்லை.

“நாங்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்போம். ஒருவர் மீது ஆசைப்பட்டால் அவர்கள் மீது கை வைப்போம். பாலியல் உறவுக்கும் அழைப்போம்” என்று ஆண்களும்.. “நாங்களும் எப்படி வேண்டுமானாலும் இருப்போம். ஆனால் எங்களைக் கட்டாயப்படுத்தி செக்ஸுக்கு அழைக்கக் கூடாது” என்று பெண்களும் சொல்வதாக மட்டுமே இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு பாலரின் சுதந்திர எண்ணம்தான் இப்போதைக்கு இந்தியாவின் பல்வேறு சமூகங்களையும் சீரழித்துக் கொண்டிருக்கிறது..!

மது என்னும் அரக்கனை முழுங்கிய கையோடு பல ஆண்களும், பல பெண்களும் எத்தனையோ தவறுகளைச் செய்திருக்கிறார்கள். செய்கிறார்கள். இன்னமும் செய்யத்தான் போகிறார்கள். ஆக, அடிப்படையிலேயே எதைத் தவிர்க்க வேண்டும் என்பதையே சொல்லாமல் “அவர்களெல்லாம் அப்படி, அப்படியேதான் இருப்பார்கள்.. ஆனால் செக்ஸூக்கு மட்டும் அழைப்பு விடுத்தால் ‘நோ’ சொன்னால் விட்டிரணும்…” என்று நயவஞ்சகத்தனமாய் ஒரு கருத்தை இத்திரைப்படம் நம்மிடம் விதைத்திருக்கிறது.

திரைப்படமாய் பார்த்தால் இவர்கள் ஜெயித்திருக்கிறார்கள். படைப்பாக்கமாய் பார்த்தால் நாம் தோற்றுப் போயிருக்கிறோம்.. இதுதான் உண்மை..!

Our Score