இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கேஸண்ட்ரா நடிப்பில் உருவான திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.
இத்திரைப்படம் உருவாகி 5 ஆண்டுகள் கழித்து சென்ற வாரம்தான் வெளியானது. படம் ரசிகர்களிடையே பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ளது. கிளைமாக்ஸ் மட்டுமே ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை என்றார்கள்.
செல்வராகவனின் வழக்கமான கதையம்சம் இல்லாமல் இது பேய்க் கதையாக இருந்தாலும் இயக்கம் சிறப்பாக இருந்ததால் தப்பித்தார் செல்வராகவன்.
ஆனால் படத்தில் நாயகனான எஸ்.ஜே.சூர்யா ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயரை ‘இராமசாமி’ என்று வைத்திருப்பது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.
இந்த ‘இராமசாமி’ என்ற பெயரை சுருக்கி ‘இராம்ஸே’ என்று வைத்துக் கொண்டதாக படத்திலேயே ஒரு வசனம்கூட வருகிறது.
ஆனால் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரப்படி அவர் தன் மகனைப் பார்த்துக் கொள்ள வரும் ரெஜினாவை பாலியல் பலாத்காரம் செய்கிறார். கூடவே அவர் வீட்டில் வேலை செய்யும் 4 வேலையாட்களும் இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். கடைசியாக ரெஜினாவை கொலை செய்து புதைத்தும் விடுகிறார்கள்.
புதைக்கப்பட்ட ரெஜினா பேயாக மீண்டு வந்து எஸ்.ஜே.சூர்யாவை பழி வாங்குகிறார். படத்தின் கதைப்படி ரெஜினா கிறிஸ்தவர். இதனால் இந்த ‘இராமசாமி’ என்ற பெயரும் சர்ச்சையாகியுள்ளது.
திராவிடர் கழகத்தை நிறுவிய தந்தை பெரியாரின் இயற்பெயர் ‘இராமசாமி நாயக்கர்’ என்பது அனைவரும் அறிந்ததே. அந்தப் பெயரை இப்படியொரு கிரிமினலுக்கு வைத்ததுடன்.. கூடவே ஒரு கிறிஸ்தவ பெண்ணால் அவர் கொல்லப்படுவதுபோலவும் காட்சிகள் வைத்திருப்பது செல்வராகவன் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்திருக்கும் உள்ளடி வேலை என்று சமூக வலைத்தளங்களில் பலரும் எழுதி வருகிறார்கள்.
நேற்றுகூட ஒரு வீடியோ பேட்டியில் இது பற்றி செல்வராகவனிடம் கேட்டபோது முதலில் ‘அது உண்மை’ என்று ஒத்துக் கொண்டார் செல்வராகவன். ஆனால் சில மணி நேரங்கள் கழித்து, ‘அந்தப் பேட்டியாளர் கேட்ட கேள்வி புரியாமல் நான் பதில் அளித்துவிட்டதாகச்’ சொல்லியிருக்கிறார் செல்வராகவன்.
ஆனால், இப்போதும் ‘இராமசாமி’ என்ற பெயர்ப் பொருத்தம் ஏன் அமைந்தது என்பதற்கான விளக்கத்தை செல்வராகவன் சொல்லவில்லை.
செல்வராகவனின் அப்பாவான இயக்குநர் கஸ்தூரிராஜா, தற்போது பாரதீய ஜனதா கட்சியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.