நடிகர், நடிகைகள் புதுமுகங்களாக இருந்தபோது நடித்த படங்களைப் பற்றி நன்கு வளர்ந்த பிறகு பேசவே மாட்டார்கள். அப்படியொரு படத்தில் தான் நடிக்கவேயில்லை என்பது போலவே காட்டிக் கொள்வார்கள்.
மிகப் பிரபலமானவர்களாக ஆன பிறகு தங்களுக்கு முதல் படத்தில் வாய்ப்பளித்த தயாரிப்பாளர், இயக்குநர்களை கண்டு கொள்ளவே மாட்டார்கள். இதுவும் தமிழ்ச் சினிமாவில் தொடர்ந்து நடக்கின்ற விஷயம்தான்.
இந்த நன்றி மறந்த நடிகைகள் லிஸ்ட்டில் சமீபத்தில் இடம் பிடித்திருக்கிறார்கள் நடிகைகள் அபர்ணா பாலமுரளியும், லிஜா மோள் ஜோஸூம்.
அபர்ணா பாலமுரளி ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் மூலமாக ஆஸ்கர் லெவலுக்குச் சென்றுவிட்டார். ஆனால், இவர் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானது 2018-ம் ஆண்டு துவக்கப்பட்ட ‘தீதும் நன்றும்’ என்ற திரைப்படத்தில்தான்.

நடிகை லிஜா மோள் ஜோஸ் தமிழில் இதற்கு முன்பு ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடித்திருந்தார். ஆனால், இவர் தமிழில் அறிமுகமான முதல் திரைப்படமும் இதே ‘தீதும் நன்றும்’ திரைப்படத்தில்தான்.
இந்தத் ‘தீதும் நன்றும்’ திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமைதான் வெளியாகவுள்ளது. சில பொருளாதாரப் பிரச்சினைகளினால் மூன்றாண்டு தாமதத்திற்குப் பின்பு இந்தப் படம் இந்த வாரம் வெளியாவதால் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும்படி இந்த நடிகைகளை அழைத்தபோது வரவே மறுத்துவிட்டார்களாம்.
இது பற்றி இந்தப் படத்தின் இயக்குநரான ராசு ரஞ்சித் பேசும்போது, “இந்தப் படத்தில்தான் அபர்ணா பாலமுரளியும், லிஜா மோள் ஜோஸும் அறிமுகமாகியிருக்கிறார்கள். இந்தப் படம் கடும் கஷ்டத்திற்கிடையில் இப்போதுதான் வெளியாகிறது.

உண்மையில் இந்தப் படத்தின் பிரமோஷனுக்கு அந்த நடிகைகள் இருவரும் ஆர்வத்துடன் முன் வந்திருக்க வேண்டும். ஆனால், வரவில்லை. இந்தப் படத்தில் நடித்தது போலவே அவர்கள் காட்டிக் கொள்ள விரும்பாதவர்களாக இருக்கிறார்கள்.
பல முறை தொலைபேசியில் அழைத்தபோது வர மறுத்துவிட்டார்கள். கடைசியில் பேசவே மறுத்துவிட்டார்கள். போனையும் எடுக்கவில்லை. வளர்ந்த பிறகு ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது அவர்களுக்கு அழகா..?
அவர்கள் இப்போது எங்களால் பிடிக்க முடியாத இடத்தில் இருக்கிறார்கள். இருக்கட்டும். அதில் எங்களுக்கும் பெருமைதான். ஏனெனில், எங்களால்தான் அவர்கள் இந்த அளவுவக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும்.
அவர்களே வந்திருந்து இந்தப் படத்தை தங்களால் முடிந்த அளவுக்கு தூக்கிக் கொடுத்திருந்தால் இந்தப் படக் குழுவே அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கும். இந்தப் படம் பற்றி அபர்ணாவிடம் பேசினாலே முகத்தைச் சுழிக்கிறாராம். பேசவே மாட்டேன் என்கிறாராம். இதெல்லாம் வளர்ந்து வரும் நடிகைகளுக்கு அழகல்ல. நல்ல கலைஞர்களுக்கும் அழகல்ல..” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.