full screen background image

விமானத்தில் தயாரிப்பாளரிடம் கதை சொன்ன இயக்குநர்..!

விமானத்தில் தயாரிப்பாளரிடம் கதை சொன்ன இயக்குநர்..!

தலைப்பு மட்டும்தான் வித்தியாசமாக இருக்கிறது என்று நினைத்தால் இயக்குநரே பெரிய வித்தியாசமாக இருக்கிறார்..

‘தெனாவெட்டு’ என்பதற்கு மறுபெயராக இந்தப் படத்தின் இயக்குநரையே சொல்லலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு அவரது வீரபிரதாபங்களை பேசினார்கள் ‘நீயெல்லாம் நல்லா வருவடா’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவுக்கு வந்த பிரபலங்கள்..!

இயக்குநர் நாகேந்திரன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கோடம்பாக்கத்தில் தவம் கிடந்து வலம் வந்தவர். சுசி கணேசன் மற்றும் சீமானிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். இதுவரையிலும் விளையாட்டுப் பிள்ளையாக இருந்தவருக்கு ஒரு பெரிய தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது..!

முதல் நாள் கதை சொல்லிவிட்டு வந்திருக்கிறார். பின்பு இரண்டாவது நாளும் சென்று கதை சொல்லியிருக்கிறார். அப்போது தயாரிப்பாளர் உங்களை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனாலும் உங்க மேல எனக்கு நிறைய நம்பிக்கையிருக்கு. அதுனாலதான் வரச் சொன்னேன்.. என்றவர் அடுத்த நாள் ஏர்போர்ட்டுக்கு வரச் சொன்னாராம்..

ஏர்போர்ட் சென்ற நாகேந்திரனுக்கு இன்ப அதிர்ச்சி. அந்தத் தயாரிப்பாளருக்கு சொந்த விமானமே உள்ளதாம்.. அதில் பயணம் செய்தபடியே மிச்சக் கதையையும் சொல்லி முடித்தாராம். இதில் ஓகேயான தயாரிப்பாளர் செலவைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சொல்லி முழு தொகையையும் முன்பேயே வழங்கிவிட்டாராம்.

இந்தப் படத்தில் விமல் ஹீரோவாகவும், புன்னகை பூ படத்தின் தயாரிப்பாளர் கீதா ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். முக்கியமான வேடத்தில் இயக்குநர் சமுத்திரக்கனியும், எம்.எஸ்.பாஸ்கரும் நடித்திருக்கிறார்கள்.  ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஷூட்டிங் முடியும் தறுவாயில் தயாரிப்பாளர் கொடுத்த பணம் போதாமல் வெளியில் கடன் வாங்க அலைந்திருக்கிறார் நாகேந்திரன். இந்தத் தகவலும் அந்தத் தயாரிப்பாளரின் காதுகளுக்குச் செல்ல.. நாகேந்திரனை நேரில் அழைத்து கடிந்து கொண்ட தயாரிப்பாளர், கேட்ட 40 லட்சத்திற்கு பதிலாக ஒன்றரை கோடியை அள்ளிக் கொடுத்தாராம்..! இவர் போன்று இயக்குநரை நம்புகிற தயாரிப்பாளர்களால்தான் தமிழ்ச் சினிமாவுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறார் என்றார் இயக்குநர் நன்றியுணர்ச்சியுடன்.

இந்த டிரெயிலர் வெளியீட்டு விழாவுக்கு அந்த பெரும் செல்வந்தரான தயாரிப்பாளர் வரவும் இல்லை.. அவர் எங்கேயும் முகத்தைக் காட்டவும் மாட்டாராம்.. இந்தக் கால்ததில் இப்படியும் ஒருவர்..!

படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் இந்த டிரெயிலர் வெளியீட்டு விழாவுக்கு வரவில்லை. ஆனால் டிரெயிலர் புதுமையான முறையில் மேக்கிங் செய்யப்பட்டுள்ளதாக பேசியவர்களெல்லாம் பாராட்டினார்கள்..!

டிரெயிலரை வித்தியாசமான முறையில் உருவாக்கப் போவதாகச் சொன்னவுடனேயே ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் நிறைய கண்டிஷன்களை போட்டாராம்.. நடிப்பவர்களின் தலைமுடிகூட ஆட கூடாது.. சுற்றியிருக்கும் மரம், செடி, கொடிகள்கூட ஆடக் கூடாது.. ஒரு சின்ன சலனம்கூட பிரேமில் பதிவாகக் கூடாது என்றாராம்..

இதனால் 3 டேக் வாங்கிய பின்பும் மனம் தயங்காமல் இறைவனை வேண்டி.. அவன் இருப்பது உறுதியானால் நிச்சயம் இந்த டேக் ஓகேயாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டாராம் இயக்குநர் நாகேந்திரன். அது போலவே ஒரு சின்ன சலனம்கூட இல்லாமல், கச்சிதமாக எடுத்து முடித்தார்களாம்..

டிரெயிலரே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.

படத்தின் டிரெயிலரை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் :

Our Score