நெல்லை சங்கர் பாலிடெக்னிக்கின் முன்னாள் மாணவர்களான 50 பேர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘நெடுநல்வாடை’.
இந்தப் படத்தில் ‘பூ’ ராமு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி, ஐந்து கோவிலான், செந்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ், இயக்குநர் – செல்வக்கண்ணன், இசை- ஜோஸ் ஃபிராங்க்ளின், ஒளிப்பதிவு – வினோத் ரத்தினசாமி, பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, படத் தொகுப்பு – மு.காசி விஸ்வநாதன், கலை இயக்கம் – விஜய் தென்னரசு, சண்டைப் பயிற்சி – ராம்போ விமல், நடன இயக்கம் – தினா, சதீஷ் போஸ், மக்கள் தொடர்பு – மணவை புவன்.
2000-ம் ஆண்டு நெல்லை சங்கர் பாலிடெக்னிக்கில் படித்தவர் இந்தப் படத்தின் இயக்குநரான செல்வக்கண்ணன். இவருடன் படித்த நண்பர்களில் 90 சதவிகிதம் பேர் தற்போது இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெரிய நிறுவனங்களில் பொறியாளர்களாக வேலை செய்கிறார்கள்.
இயக்குநர்கள் காந்தி கிருஷ்ணா, சாமி, ராஜேஷ் எம்.செல்வா ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு, மற்றவர்கள் போலத் தனியாகப் படம் இயக்க தயாரிப்பாளர்களின் அலுவலகப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார் செல்வக்கண்ணன்.
இதை அறிந்த அவரது வகுப்புத் தோழர்களில் இருவர் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு தங்களுடைய நண்பர் செல்வக்கண்ணனின் இயக்குநர் ஆசையை பரிமாற ஆரம்பித்தார்கள்.
உடனே வாட்ஸ் அப்பில் ஒரு குழு உருவாக்கி மொத்த மாணவர்களும் தங்கள் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை செல்வக்கண்ணன் இயக்கும் படத்துக்கு முதலீடு செய்வதாக உறுதி அளித்தார்கள். அவர்களுடைய ஒத்துழைப்புடன் இந்த ‘நெடுநல்வாடை’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.
வழக்கமாக தமிழ்ச் சினிமா துறையில் சின்ன பட்ஜெட் படங்கள் வழக்கமாக சந்திக்கும் சில சங்கடங்களைக் கடந்து ‘நெடுநல்வாடை’ திரைப்படம் வரும் மார்ச் 15-ம் தேதியன்று திரைக்கு வருகிறது.
பிரபல தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் P.மதன் இப்படத்தை ரிலீஸ் செய்ய உதவி புரிந்து வருகிறார்.
இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் படக் குழுவினருடன் தயாரிப்பாளர் மதன், இணை தயாரிப்பாளர் ஜேம்ஸ் மற்றும் திரையுலகத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் படங்களின் தலைப்புக்களை தமிழில் வைக்க வேண்டிய அவசியம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து பேசிய காணொளி ஒன்று திரையிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ‘நெடுநல்வாடை’ படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கும் ஐந்து கோவிலான் பேசியபோது, “ஒரு தயாரிப்பாளருக்காக படம் இயக்கும்போதே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிடுகிற இந்தக் காலத்தில் 50 தயாரிப்பாளர்களுடன் இணைந்து எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ஒரு படத்தை எடுத்து முடித்திருப்பதே மிகப் பெரிய சாதனை…” என்றார்.
அடுத்து 50 தயாரிப்பாளர்களின் சார்பில் பேசிய தயாரிப்பாளர் சுந்தர் கள்ளம் கபடமில்லாமல் படம் குறித்த பல ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
“படம் தயாரிக்க முன் வந்தபோது நாங்கள் நினைத்த பட்ஜெட்டைவிட பல மடங்கு தாண்டிவிட்டது. ஆனாலும் நண்பர் செல்வக்கண்ணன் எவ்வளவு நேர்மையானவர் என்பது எங்களுக்குத் தெரியும் என்பதால் எதையும் பொருட்படுத்தாமல் நாங்கள் தொடர்ந்து செலவு செய்து இப்படத்தை முடித்தோம். இப்போதும்கூட இந்தப் படத்திலிருந்து ஒரு பைசாகூட திரும்பி வராவிட்டாலும்கூட, இயக்குநர் மீது எங்களுக்கு இருக்கும் ப்ரியங்களும், நட்பும் அப்படியே இருக்கும்…” என்றார்.
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஸன் பிக்சர்ஸின் தயாரிப்பாளர் மதன் பேசும்போது, “இன்றைய தேதியில் நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இப்படி ஒரு தயாரிப்பில் இறங்கியிருப்பது வியப்பளிப்பதாக இருக்கிறது. இவ்வளவு பிரச்சினைகளையும் மீறி மிகவும் தரமான படமாக இந்த ‘நெடுநல்வாடை’யை இயக்குநர் செல்வக்கண்ணன் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்த தனது 50 நண்பர்களுக்கும் இயக்குநர் செல்வக்கண்ணன் தன் வாழ்நாள் முழுக்கக் கடன்பட்டிருக்கிறார்…” என்றார்.
நன்றி உரையாற்றிய இயக்குநர் செல்வக்கண்ணன், “படத்தின் நாயகன், நாயகி ஆகிய இருவரும் படம் தொடங்கிய பத்தே நாட்களில் எஸ்கேப் ஆன பிறகும் நண்பர்கள் என் மேல் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையால் இன்று ரிலீஸ் தேதியை நெருங்கி வந்துவிட்டோம்.
இந்தப் படம் எத்தனையோ முறை டிராப் ஆக வேண்டியது. ஆனால் நடந்த உண்மைகள் எதையும் மறைக்காமல் பிரச்சினைகள் அத்தனையையும் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிக் கொண்டே இருந்தேன்.
அவர்களுக்கு பிராக்டிக்கலான சினிமா குறித்து எதுவுமே தெரியாதென்றாலும் நான் பொய் சொல்லவில்லை என்ற ஒரே காரணத்துக்காக தொடர்ந்து உதவிகளை செய்து படத்தை முடிக்க உதவினார்கள்.
நல்ல படங்களை ரசிகர்கள் ஒரு நாளும் கை விட்டதில்லை என்ற நம்பிக்கையில் மிகவும் தரமான ஒரு படத்தை நல்ல டெக்னீஷியன்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறேன்.
மகன் வழிப் பேரன், பேத்திகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமை, அங்கீகாரம் சமூகத்தில் மகள் வழி உறவுகளுக்கு கிடைப்பதில்லை. குறிப்பாக ஈமக் கடன்களில்கூட அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை இந்தப் படத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறேன்.
இன்னொரு பக்கம் காதல் தோல்விகளில் எப்போதும் பெண்கள் மட்டுமே குற்றவாளிகள்போல், துரோகம் இழைத்தவர்கள் போல் சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்கள் தரப்பில் இருக்கும் யதார்த்ததை, நியாயத்தையும் பேசி இருக்கிறேன்.
இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் போல் தோன்றலாம். ஆனால் ‘நெடுநல்வாடை’யில் இவையிரண்டையும் சரிசமமாக கலந்து, இணைக்கோட்டில் பயணித்து பார்க்கிறவர்களைக் கலங்கடிக்கும்.
மொத்தத்தில் இந்த ‘நெடுநல்வாடை’ லோ பட்ஜெட் டெக்னீஷியன்களின் ஹை வோல்டேஜ் படம்…” என்றார்.