பிரபல தயாரிப்பாளர் T.G.தியாகராஜனின் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம், ‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நாயகனாக நடிப்பில் புதிய படத்தை தயாரிக்கிறது.
இது இவர்களது 34-வது தயாரிப்பாகும். ‘தொடரி’ படத்திற்கு பிறகு 2-வது முறையாக தனுஷுடன், சத்யஜோதி ஃபிலிம்ஸ் இணைந்துள்ளனர்.
‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’ ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் R.S.துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குகிறார். ‘கொடி’ படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக, தனுஷுடன் இணைகிறார் துரை செந்தில்குமார்.
நடிகை சினேகா 2006-ம் ஆண்டு வெளிவந்த ‘புதுப்பேட்டை’ படத்தில் தனுஷுடன் நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது 13 ஆண்டுகள் கழித்து, தனுஷுடன் இரண்டாவது முறையாக இப்படத்தில் நடிக்கிறார்.
‘அனேகன்’, ‘மாரி’, ‘மாரி-2’ படங்களுக்கு பிறகு 4-வது முறையாக தனுஷுடன் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் பணியாற்றுகிறார்.
‘வடகறி’, ‘டோரா’, ‘குலேபகாவலி’ படங்களுக்கு இசையமைத்து, ‘ஒரசாத’ பாடலின் மூலம் ரசிகர்களின் மனதை உரசிச் சென்ற விவேக் மெர்வின் இரட்டையர்கள் இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள்.
இத்திரைப்படம் பற்றி இயக்குநர் துரை செந்தில்குமார் கூறும்போது, “கொடி’ படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் தனுஷ் சார் உடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சத்யஜோதி ஃபிலிம்ஸ் போன்ற ஒரு புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை நான் பெற்றிருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது. எந்த ஒரு படத்தையும் மிகச் சிறப்பாக திட்டமிட்டு செயல்படுத்தும் சத்யஜோதி நிறுவனத்தின் தனித்துவம் பலருக்கும் உத்வேகத்தை அளிக்கிறது. மிகச் சிறந்த படத்தை வழங்கும் பொறுப்பு என் தோள்களில் உள்ளது என்பதை நான் உணர்கிறேன். அதை நிறைவேற்ற கடுமையாக உழைப்பேன்…” என்றார்.
தனுஷ் மற்றும் சினேகா நடிக்கும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் இன்று காலை பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து 30 நாட்கள் அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
அடுத்து தனுஷ் மற்றும் ராட்சசன் புகழ் ராம்குமார் இணையும் ‘தயாரிப்பு எண்-35’ படத்தையும் சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.