நட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்

நட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்

Libra Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் கவின், ராஜூ, அருண்ராஜா காமராஜ் மூவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மன்சூரலிகான், ரமா, சுஜாதா, ஜெயமணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – யுவா, இசை – தரண், படத் தொகுப்பு – ஆர்.நிர்மல், கலை இயக்கம் – எம்.எஸ்.பி.மாதவன், நடன இயக்கம் – சதீஷ் கிருஷ்ணன், மக்கள் தொடர்பு – நிகில் முருகன், தயாரிப்பு – லிப்ரா புரொடெக்சன்ஸ், தயாரிப்பாளர் – ரவீந்தர் சந்திரசேகர், எழுத்து, இயக்கம் – ஷிவா அரவிந்த்.

கவின், ராஜூ, அருண்ராஜா காமராஜ் மூவரும் இணை பிரியாத நண்பர்கள். வடசென்னையின் மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 10-ம் வகுப்பிலேயே பெயிலானவர்கள்.

கவின் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வின்போது தன்னுடைய வகுப்புத் தோழிக்கு பிட் அடிக்க உதவுகிறான். ஆனால் அந்த மாணவியோ அவனுடைய பேப்பரையும் தன்னுடைய பேப்பரோடு சேர்த்து வைத்துக் கொடுத்துவிட்டு தப்பியோடுகிறாள். இதனால் 10-ம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைகிறான் கவின். தொடர்ந்து பல முறை தேர்வு எழுதியும் மூன்று பேருமே பாஸாகவில்லை.

தன்னுடைய படிப்பு தோல்வியடைந்ததற்குக் காரணமே அந்த 10-ம் வகுப்பு மாணவிதான் என்று கவின் உறுதியாக நம்புவதால் “பெண்களும் வேண்டாம்.. காதலும் வேண்டாம்..” என்று மன வெறுப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

25 வயதில் மூவருக்கும் புத்தி வந்து கல்யாண காண்ட்ராக்ட் வேலையை எடுத்துச் செய்யலாம் என்று நினைத்து புதிய தொழிலைத் துவக்குகிறார்கள்.

இந்த நேரத்தில் ராஜூ, நாயகி ரம்யா நம்பீசனை டாஸ்மாக் பாரில் சந்திக்கிறான். தனது தோழியை ஏமாற்றிவிட்டுப் போன அவளது காதலனின் மண்டையை பீர் பாட்டிலால் அடித்து மண்டையை உடைத்து, ரத்தத்தை தெறிக்கவிட்டு விட்டுப் போகும்  ரம்யாவைப் பார்த்தவுடன் ராஜூவுக்கு மிகவும் பிடித்துப் போய்விடுகிறது.

இதன் பின்பு ரம்யாவின் பின்னாலேயே அலையத் துவங்குகிறான் ராஜூ. கடைக்கே வராமல் டபாய்த்து வரும் ராஜூவை நண்பர்கள் இருவரும் பொறி வைத்துப் பிடிக்கிறார்கள். தான் ஒரு தலையாய் காதலிக்கும் காதலி இவள்தான் என்று ரம்யாவைக் காட்டுகிறான் ராஜூ.

ஆனால் அதற்குள்ளாக கவின் அட்டகாசமாக டிராமா போட்டு ரம்யாவின் முன்பாக போய் நின்றுவிட.. ரம்யாவுக்கும் அவனைப் பிடித்துப் போய்விடுகிறது. இதற்கு ஒரு சஸ்பென்ஸான காரணமும் இருக்கிறது. ரம்யா தன்னைக் காதலிப்பதை நேரடியாக சொல்லாமல் தனது நண்பர்களுக்குள் சண்டையை மூட்டிவிடுகிறான் கவின்.

ஆனாலும் ஒரு நாள் விஷயம் ராஜூவுக்குத் தெரிய வர.. இவர்களின் நட்பு பணாலாகிறது. ரம்யாவின் அப்பாவும் இவர்களது காதலைப் பிரிக்கிறார். கடைசியில் நட்பும், காதலும் ஒன்று சேர்ந்ததா.. இல்லையா… என்பதுதான் இந்தக் காதல் படத்தின் திரைக்கதை.

விஜய் டிவியின் ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் நாயகனான கவின் தனது முதல் படத்தில் நாயகனாகயிருக்கிறார். டிவி தொடர் அனுபவம் அவருக்கு மிகவும் கை கொடுத்திருக்கிறது. இவருக்கு நடிப்பும், நடனமும் எளிதாக வருகிறது. இருந்தாலும் இன்னமும் முக கவர்ச்சியும், காமெடியும் கூடுதலாக அவருக்குக் கை கொடுத்தால் அவருடைய எதிர்காலம் பிரகாசமாகும்.

இரண்டாவது நாயகனாக நடித்திருக்கும் ராஜூவுக்கும் இத்திரைப்படம் மிகப் பெரிய முகவரியைக் கொடுத்திருக்கிறது. கவினைக் காட்டிலும் பன்முக கலவை நடிப்பை காட்டியிருக்கிறார் ராஜூ. பல நேரங்களில் நகைச்சுவையை மிக எளிதாகக் கொணர்ந்திருக்கிறார்.

கவினைத் தேடி வரும் சுஜாதா அண்ட் கோ-விடம் ராஜூவும், அருண்ராஜாவும் மாட்டிக் கொண்டு முழிக்கும் காட்சியில் செம அலப்பறை செய்திருக்கிறார்கள் இருவரும்.

இவருக்குக் கை கொடுத்திருக்கிறார் அருண்ராஜா காமராஜ். காதல் தோல்வியில் இவர் புலம்பும் புலம்பலும், ஆற்றாமையால் கவினுக்கு இவர் சாபம் விடும் காட்சிகளிலும் நகைச்சுவை தெறிக்கிறது. அவ்வப்போது இடையிடையே இவர் விடும் ‘விட்டுக்கள்’தான் தியேட்டரை தெறிக்க விடுகிறது. சிறந்த நடிப்பு.

முதிர் கன்னியான ரம்யா நம்பீசனுக்கு முற்பாதியில் அதிகம் வேலையில்லை என்றாலும் பிற்பாதியில்தான் தனக்கான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். மாடர்ன் டிரெஸ்ஸில் கண்ணைப் பறிக்கிறார் ரம்யா. சிறந்த இயக்கம் என்பதால் சிற்சில இடங்களில் காதலிகள் செய்யும் சேஷ்டைகளைச் செய்து கவர்ந்திழுக்கிறார்.

மேலும் இவர்களுக்குப் போட்டியாளரான இளவரசு, ரம்யாவின் அப்பாவான அழகம் பெருமாள், கவினின் அம்மாவான ரமா, கவினின் அப்பா என்று ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளும் அவரவர் கதாபாத்திரங்களுக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். இளவரசு மிக, மிக பொருத்தமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

முன்னாள் நடிகை பபிதாவும் இரண்டு காட்சிகளில் தலையைக் காட்டியிருக்கிறார். ஆனால் அவர் யார்.. எதற்காக கவினின் வீட்டில் இருக்கிறார் என்பதையே சொல்லாமல் செய்திருக்கிறார்கள். ஏன் இந்தக் குழப்பம் இயக்குநரே..?

இரண்டே காட்சிகள் என்றாலும் டர்னிங் பாயிண்ட்டை மிகச் சரியாகச் செய்துவிட்டுப் போகிறார்கள் மன்சூரலிகாவும், ‘மொட்டை’ ராஜேந்திரனும்.

யுவராஜின் ஒளிப்பதிவு தரமானது. மீடியம் பட்ஜெட் படமென்றாலும் அது தெரியாதவண்ணம் தனது வேலையைச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். இசையமைப்பாளர் தரணின் இசையில் பாடல் வரிகள் புரிவதுபோல் இருந்தாலும் குரல் வளம் மிக்கவர்கள் பாடாததால் பாடல்கள் ஏமாற்றமளிக்கின்றன.

முதல் பாதியைவிடவும் இரண்டாம் பாதி மிக விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்வதால் திருப்தியோடு எழுந்து வர முடிகிறது.

இன்றைய இளசுகளுக்கு ஏற்ற கதையோடு காதல், நட்பையும் கலந்து கொடுத்திருப்பதால் நிச்சயமாக இத்திரைப்படம் இளைஞர்களால் பேசப்படும். கொண்டாடப்படும்.

லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனத்திற்கு முதல்முறையாக ஒரு பெரும் வெற்றியைத் பெற்றுத் தந்திருக்கிறது இத்திரைப்படம்.

சின்னக் கதை., குழப்பமில்லாத திரைக்கதை. சிறந்த இயக்கம். சிறந்த நடிப்பு.. அனைத்துத் தொழில் நுட்பக் கலைஞர்களின் அருமையான பங்களிப்பில் நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம் என்று சொல்ல வைத்திருக்கிறது இத்திரைப்படம்.

படத்தில் பங்கு கொண்ட அத்தனை கலைஞர்களும் நமது பாராட்டுக்கள்.