full screen background image

ரஜினியை தேடி வந்து சந்தித்தார் நரேந்திர மோடி..!

ரஜினியை தேடி வந்து சந்தித்தார் நரேந்திர மோடி..!

தமிழகமே பரபரப்பாக எதிர்பார்த்து காத்திருந்த அந்தச் சந்திப்பு முடிவடைந்துவிட்டது.

வருங்கால இந்தியாவின் பிரதமராக தேசிய ஜனநாயகக் கூட்டணியினரால் முன்னிறுத்தப்பட்டிருக்கும் குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி இன்று மாலை 6.35 மணிக்கு இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

modi-rajini-1

இந்தியா முழுவதிலும் இருந்தும் பிரச்சாரத்திற்கு பல அழைப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சொந்த மாநிலத்தில் பேசுவதற்கே நேரமில்லாமல் தவிப்பதாகச் சொல்லும் மோடி, விமான நிலையத்தில் இருந்து போயஸ் கார்டனுக்கே நேரில் வந்து ரஜினியைச் சந்தித்ததன் காரணம்தான் என்ன என்று மீடியாக்கள் யோசித்தவண்ணம் இருந்தன.

modi-rajini-2

ரஜினி தேர்தல் குறித்து ஏதாவது அறிக்கை விடுவாரோ என்றெல்லாம் நினைத்தவர்களுக்கு வழக்கம்போல புஸ்வாணமே கிடைத்துள்ளது. ரஜினியைச் சந்தித்துவிட்டு மோடி உடனடியாக மீனம்பாக்கத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்குக் கிளம்பிவிட்டார்.

இந்தச் சந்திப்பு பற்றிப் பேசிய ரஜினி, “எங்களுடைய இந்தச் சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை. நான் மருத்துவமனையில் இருந்தபோது, என்னை அவர் சந்தித்தார். அப்போதே சென்னையில் என் இல்லத்துக்கு ஒரு நாள் வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். இன்றைக்கு வந்திருக்கிறார். என்னை அவர் இங்கு வந்து சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் அவரது நலம் விரும்பி. அவர் என்னுடைய நலம் விரும்பி. அவ்வளவுதான்..” என்று சொல்லியிருக்கிறார்.

இந்தச் சந்திப்பு குறித்து மோடி கூறும்போது, “நடிகர் ரஜினிகாந்த், எனது நல்ல நண்பர். அதனால், அவரைச் சந்திக்க வந்தேன். சந்தித்துவிட்டேன்.. கிளம்பிவிட்டேன்..” என்றாராம்.

மோடி தேடி வந்ததற்கு அரசியல் உலகில் சொல்லும் காரணம், நண்பர்கள் எங்கிருந்தாலும் நான் தேடி வந்து பார்ப்பேன் என்று மறைமுகமாக தமிழக முதல்வருக்கு கொடுத்திருக்கும் கவுண்டர் அட்டாக் என்கிறார்கள். இதனால்தான் இத்தனை நாள் பிரச்சாரத்தில் இல்லாத அதிசயமாக முதல் முறையாக இன்றைக்குத்தான் முதல்வர் ஜெயலலிதா தனது பேச்சில் பாரதீய ஜனதாவை மிகக் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

எப்படியோ அரசியல் என்னும் சூழல் தன்னை எப்போதும் இழுத்தபடியே இருக்கிறது என்பதை உணர்ந்தேயிருக்கும் சூப்பர் ஸ்டார்.. யாருக்குமே பிடி கொடுக்காமல் இப்படியே இருக்கும் வித்தையை யாரிடம்தான் கற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை.. இதிலும் அவர் சூப்பர் ஸ்டார்தான்..

மோடி பிரதமரானால், வருங்கால இந்திய அரசியல் சரித்திரத்தில் ரஜினியுடனான இந்தச் சந்திப்பு மிகச் சிறந்த இடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை..!

Our Score