“லிங்குசாமியின் இயக்கத்தில் திரும்பவும் சைக்கிள் செயினை அறுக்கணும்..”-நாகார்ஜூனாவின் ஆசை..!

“லிங்குசாமியின் இயக்கத்தில் திரும்பவும் சைக்கிள் செயினை அறுக்கணும்..”-நாகார்ஜூனாவின் ஆசை..!

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘அஞ்சான்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘சிக்கந்தர்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் நாகார்ஜூனா, இயக்குநர் லிங்குசாமியை வெகுவாகப் பாராட்டி பேசினார்.

அப்படி அவர் பேசுகையில் அவர் வெளியிட்ட ஒரு ஆசை, வந்திருந்த ரசிகர்களை உச்சக்கட்ட சந்தோஷத்திற்குக் கொண்டு சென்றது..

நாகார்ஜுனா தன்னுடைய பேச்சில் இயக்குநர் லிங்குசாமி குறித்து பேசும்போது, “இயக்குநர் லிங்குசாமியின் அனைத்து படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். அவருடைய ‘வேட்டை’ திரைப்படம் நாக சைதன்யா நடிப்புல ‘தடகா’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். எனக்கும் இப்போ ஒரு பெரிய ஆசை இருக்கு.. இன்னொரு தடவை செயினை அறுத்து இழுக்கற சீனை, லிங்குசாமியோட படத்துலதான் செய்யணும்னு நினைக்கிறேன்..” என்று சொல்லி நிறுத்தியபோது அர்த்தம் புரிந்து ரசிகர்கள் எழுப்பிய கரவொலி அரங்கத்தை அதிர வைத்ததாம்.

இந்த ‘செயினை அறுத்து இழுக்குற சீன்’ என்பது நாகார்ஜூனாவை தெலுங்குலகின் ஹாட்டஸ்ட் ஹீரோவாக்கிய ‘சிவா’ என்கிற படத்தில் இடம் பெறும் ஆக்ரோஷமான சண்டைக் காட்சியின் துவக்கப் புள்ளி..

ராம்கோபால்வர்மா இயக்கியிருந்த இந்த ‘சிவா’ திரைப்படம் வர்மா, நாகார்ஜூனா இருவருக்குமே அவரவர் கேரியரில் ஒரு மிகப் பெரிய ஏற்றத்தைக் கொடுத்தது.

அப்போதைக்கு தமிழிலும் இந்தப் படம் ‘உதயம்’ என்கிற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு சக்கைப்போடு போட்டது. அப்போதைய தங்களது கனவுக் கன்னியான அமலாவிற்காக படத்தைப் பார்க்க போய், கடைசியாக நாகார்ஜூனா, ராம்கோபால்வர்மா இருவரின் பெயர்களையும் தமிழ்ச் சினிமா ரசிகர்கள் இந்தப் படத்தில் இருந்துதான் கண்டு கொண்டார்கள்.

செமத்தியான திரைக்கதையில், இறுக்கமான இயக்கத்தில் அதிரடியாக வந்திருந்த கமர்ஷியல் படம் இது. அதில் இடம் பெற்றிருக்கும் இந்த செயின் அறுப்பு காட்சி தென்னிந்திய சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத காட்சியாகும். இந்தப் படத்தின் முதல் டர்னிங் பாயிண்ட்டே இதுதான். இதுதான் படம் பார்த்த ரசிகர்களையும் கை தட்ட வைத்து நிமிர்ந்து உட்கார வைத்ததும் இந்த சண்டைகாட்சிதான்..

மறந்துவிட்டவர்களுக்கு ஞாபகப்படுத்த அந்தக் காட்சி இந்த வீடியோவில்..

Thanks To : Telugu Video Songs

Our Score