full screen background image

“சொந்தமாக டியூன் போடும் இசைக் கலைஞர்கள் இனிமேல் பிறக்கப் போவதில்லை”-இசைஞானி இளையராஜாவின் பேச்சு

“சொந்தமாக டியூன் போடும் இசைக் கலைஞர்கள் இனிமேல் பிறக்கப் போவதில்லை”-இசைஞானி இளையராஜாவின் பேச்சு

ஈரோட்டில் நடந்த புத்தகக் கண்காட்சியை இசைஞானி இளையராஜா திறந்து வைத்தார். கண்காட்சி நடக்கும் பன்னீர்செல்வம் பூங்காவில் கட்டுக்கடங்காத கூட்டம். இளையராஜாவை பார்க்க அவரது ரசிகர்களும், புத்தகப் பிரியர்களும் ஒன்று சேர வந்திருந்ததால் கூட்டம் அலைமோதியது.

இளையராஜாவின் கார் மைதானத்திற்குள் நுழையக் கூட கஷ்டப்பட வேண்டியதாகிவிட்டது.. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருந்ததால், இளையராஜா நேரடியாக மேடைக்கு அழைத்து செல்லப்பட்டார். தொடக்க விழா மேடையில் பேசும்போது, நேரடியாக சென்று திறக்க முடியாததால், மானசீகமாக மேடையில் இப்போது இருந்தபடியே திறந்து வைப்பதாகக் கூறி அரங்குகளைத் திறந்து வைத்தார்.

பாட்டு பாடும்படி கோரஸாக மக்கள் மத்தியில் இருந்து குரல்கள் எழ.. இசைஞானியும் சிரித்துக் கொண்டே “பாடலைன்னா விடவா போறீங்க…” என்று சொல்லிவிட்டு  ‘இதயம் ஒரு கோயில்’, ‘ஜனனி ஜனனி’ உள்பட நான்கு பாடல்களை மேடையில் பாடினார். ‘இதயம் ஒரு கோயில்’ பாடலைப் பாடும்போது, ‘நீயும் நானும் ஒன்றுதான்.. எங்கே பிரிவது?’ என கூடியிருந்த மக்களைப் பார்த்து கை நீட்டிப் பாட, அர்த்தம் புரிந்து கூட்டம் ஆர்ப்பரித்தது..!

பின்னர், ‘உங்களுக்காகத்தான் நான்… உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்கிறேன்’ என்று கூறி, தனக்கும் ஈரோட்டுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பைப் பகிர்ந்து கொண்டார்.

“கடந்த 1960 முதல் 1968-ம் ஆண்டுவரை ஈரோடு நகரில் எனது கால் படாத இடங்களே கிடையாது. இன்று இருக்கும் ஈரோடு நகரை அப்போது நான் கனவில்கூட சிந்தித்து பார்த்தது இல்லை. எனது சகோதர்களுடன் ஈரோடு நகரம் முழுவதும் பாடல் பாடி வந்திருக்கிறேன்.

எனது சகோதரர்களுடன் சென்னைக்கு கிளம்புவதற்கு முன் கடைசியாக கலை நிகழ்ச்சி நடத்திய இடம் கோவை மாவட்டம். வீட்டில் இருந்த ஒரு பழைய ரேடியோவை ரூ.400-க்கு விற்று அந்தப் பணத்தை எங்களுக்குக் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார் எங்க அம்மா.

ஆர்மோனிய பெட்டி, தபேலா, கிதார் இதை மட்டும் எடுத்துக்கிட்டு சென்னைக்கு கிளம்பினோம்.. அங்கே அவைகளை வைத்துதான் இசை அமைத்தோம். தானாக இசை அமைத்து டியூன் போடும் கலைஞர்கள் இனிமேல் இக்காலத்தில் பிறக்கப் போவதில்லை. நான் இசையமைத்த திரைப்படங்களில் பல கவிஞர்களின் பெயரில் வந்த பல பாடல் வரிகள் எனக்குச் சொந்தமானவைதான்.

தன்னை மட்டுமே தம்பட்டம் அடிக்க வேண்டும். மற்றவர்களை திட்ட வேண்டும் என்பதற்காகவே இப்போது பொது நிகழ்ச்சி மேடைகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொது மேடை நிகழ்ச்சிகளை நான் தவிர்த்து வருகிறேன்.

கல்வி என்பது புத்தகத்தில் இருந்து மட்டுமே கிடைப்பதல்ல. பரந்து கிடக்கிறது. எதில் இருந்தும் படிக்கலாம். வாழ்க்கையேகூட படிப்புதான். இதயம் ஒரு கோவில் போன்றது. ஆனால், நாம்தான் அதை சாக்கடையாக மாற்றி வைத்திருக்கிறோம். இதயம் என்னும் கோவிலை நல்ல நூல்கள் மூலம் சுத்தப்படுத்தப்படுத்தலாம்.

நான் பாடிய, இசை அமைத்த பாடல்கள் எல்லாம், நான் பாடுவதற்கு, இசை அமைப்பதற்கு முன்பே இருந்தவை. அதனால்தான் எனக்கு தானாக வருகிறது. சப்தம், நாதம் இல்லாமல் உலகம் இல்லை. உண்மையைச் சொன்னால் நமது நாத மண்டலம் நாசப்படுத்தப்பட்டுக் கிடக்கிறது. சுத்தமான இசை மூலம் நாத மண்டலத்தைச் சரிப்படுத்த முடியும். இப்போது வரும் இசை நமது மூளையை மழுங்கச் செய்யும் வகையில்தான் இருக்கிறது. எனவே, சுத்தமான இசையைக் கேட்க பொதுமக்கள் முன் வர வேண்டும்…” என்றார்.

Our Score