full screen background image

நான் வேற மாதிரி – விமர்சனம்

நான் வேற மாதிரி – விமர்சனம்

இரண்டு அண்ணன்கள், ஒரு அண்ணி, ஒரு பாட்டி என்று ஒரு அன்பான குடும்பத்தைச் சேர்ந்த நாயகி ஜோதிஷாவும், நாயகன் ஷாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். ஜோதிஷாவுக்கு இத்தனை பேர் குடும்பமாக இருந்தாலும், ஷாவுக்கு குடும்பத்தினர் என்று யாருமில்லை. இதனால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கும் ஜோதிஷாவின் குடும்பத்தினர், இவர்களது திருமண நிச்சயதார்த்தத்தை மிக சிறப்பாக நடத்தி வைக்கிறார்கள்.

இவர்களது திருமணம் விரைவில் நடைபெற இருக்கின்ற சூழலில் முதலில் ஜோதிஷாவின் பாட்டி திடீரென்று மரணம் அடைகிறார். இதை அடுத்து ஜோதிஷாவின் இரண்டு அண்ணன்களும், அவருடைய அண்ணியும் வரிசையாக மரணம் அடைய ஜோதிஷா பெரும் அதிர்ச்சி அடைகிறார்.

இந்த மரணங்கள் எதுவும் தற்செயலாக நடக்கவில்லை. யாரோ திட்டமிட்டு செய்கிறார்கள் என்ற சந்தேகம் வழக்கினை விசாரிக்கும் போலீசாருக்கு ஏற்படுகிறது.

போலீசார் ஒரு பக்கம் விசாரணையை நடத்த, இன்னொரு பக்கம் அதே வீட்டுக்குள் இருக்கும் யாரோ ஒருவர்தான் இந்த கொலை செய்திருக்கிறார் என்பது ஜோதிஷாக்கு தெரிகிறது.

கடைசியாக யார் அந்தக் கொலைகளை செய்தவன் என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா? ஜோதிஷாவுக்கு தெரிந்ததா? அவர்களின் கொலைக்கான காரணம் என்ன? என்பதுதான் இந்தப் படத்தின் சஸ்பென்ஸ் ஆன ஒரு திரைக்கதை.

ரொம்ப சின்ன பட்ஜெட்டில் கைக்கு கிடைத்த நடிகர்களை வைத்துக் கொண்டு அறிமுக இயக்குநர் என்ன செய்வாரோ அதைத்தான் இந்தப் படத்திலும் இயக்குநர் எஸ்.ஜவஹர்லால் செய்திருக்கிறார்.

ஹீரோவாக நடித்திருக்கும் ஷா அறிமுக நடிகர் என்பதால் அவருடைய நடிப்பை பற்றி அதிகமாக விமர்சிக்க வேண்டாம். ஆனாலும் இந்தப் படத்தில் ஆக்சன், டான்ஸ் இரண்டிலும் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்தது போல செய்து இருக்கிறார். பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு அவருடைய நடிப்பும் இதில் அமைந்திருக்கிறது.

இன்னொரு பக்கம் நாயகி ஜோதிஷா மிகப் பெரிய ஒரு கதாபாத்திரத்தை தாங்கி நடித்து இருக்கிறார். இவர் முன்பேயே பல படங்களில் நடித்து இருந்தாலும் இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக காட்சிகளை ஒதுக்கியிருந்தால் இவருடைய பிரஸ்னஸ் இந்தப் படத்திற்கு ஒரு பலமாக வளர்ந்திருக்கும். ஆனாலும் தான் வந்து போகும் சில காட்சிகளிலும், சில இடங்களிலும் அவருடைய நடிப்பு சிறப்புதான்.

போலீஸ் அதிகாரியான நக்ஷிப் பாஷா, சீதா தர்ஷன், ஜோதிஷாவின் அண்ணன்கள் அண்ணி, பாட்டி என்று அந்த ஒட்டு மொத்த குடும்பத்தில் நடித்தவர்களும் அவரவர்களுக்கான கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு ஓரளவுக்கு நடித்து முடித்து இருக்கிறார்கள்.

சஸ்பென்ஸ், திரில்லர் படம் என்பதால் படம் முழுவதும் அதற்கேற்றார் போலவே ஒளிப்பதிவாளர் தன்னுடைய கேமரா பணியை செய்திருக்கிறார். ஏற்காடு பகுதிகளை அவர் படமாக்கி இருக்கின்றவிதம் அழகு என்றே சொல்லலாம்.

இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் என்று இருந்தாலும், ஒரு முறை மட்டுமே கேட்கக் கூடிய அளவுக்கு இருக்கிறது ஆனால் பின்னணி இசை ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்துக்கு ஏற்றவாறு அமைத்து காதைக் கிழித்திருக்கிறார்கள்.

படத்தில் நடிகர்களின் நடிப்பு ஒரு பக்கம் நமக்கு கொஞ்சம் சோதனையை கொடுத்தாலும் இன்னொரு பக்கம் தொழில்நுட்பத்திலும் கொஞ்சமும் குறைச்சலான மதிப்பெண்களையே பெற்றிருந்தாலும் படத் தொகுப்பு செய்திருக்கும் கலைஞர் தன்னுடைய வேலையை மட்டும் கரெக்டாக செய்திருக்கிறார்.

முதல் காட்சிகளிலிருந்து கதை இதுதான் என்று பட்டென்று போட்டு உடைத்து சொல்வதைப் போல கதைக்குள் நம்மை இழுத்திருக்கும் இயக்குநர் கடைசி வரையிலும் அதை அப்படியே கொண்டு சென்று இருக்கிறார்.

தொடர்ந்து நடக்கும் மர்ம மரணங்கள்.. துயரங்கள்.. அதோடு, அந்த வீட்டுக்குள்ளேயே ஒரு கொலைகாரன் வலம் வருகிறார் என்பதை மறைமுகமாக சொல்லிக் கொண்டே வந்து கடைசி வரையில் கொலைக்கான காரணத்தை மட்டும் கடைசியில் காண்பித்திருக்கிறார் இயக்குநர். இது ஒன்றே படத்தைக் கடைசிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறது.

மொத்தமாக பார்க்கப் போனால் படத்தில் சில குறைகள் வெளிப்படையாக தெரிந்தாலும், மேக்கிங்கில் இதைவிடவும் சிறப்பாக செய்திருக்கலாம் இயக்குநரே என்று நம்மைச் சொல்ல வைத்திருக்கிறார் இயக்குநர் ஜவஹர்லால்.

RATING : 2 / 5

Our Score