full screen background image

பிரபாகரன் வேடத்தில் மஞ்சு மனோஜ் நடிக்கும் தமிழ்த் திரைப்படம்…!

பிரபாகரன் வேடத்தில் மஞ்சு மனோஜ் நடிக்கும் தமிழ்த் திரைப்படம்…!

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அரச பயங்கரவாதச் செயலாக அமைந்த ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ஈழப் போர் பற்றியும், அதன் பிரச்சனைகள் பற்றியும் தமிழில் சினிமாவாக எடுக்கவே முடியவில்லை.

‘ஈழம்’ என்ற பெயர் வைத்தாலே சென்சார் போர்டில் அனுமதி கிடைக்காத நிலைமைதான் இப்போதும் நீடிக்கிறது. இதன் விளைவாக ஏற்கெனவே எடுத்திருக்கும் சில திரைப்படங்களுக்குக்கூட இன்னமும் அனுமதி தரப்படாததால் அவைகள் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில் தைரியமாக ஒரு டீம், ஈழம் பற்றிய திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறது. அவர்கள் தமிழர்கள் அல்ல என்பதுதான் சுவையான விஷயம்.

பத்மஜா பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.என்.ரெட்டி மற்றும் லக்ஷ்மிகாந்த் தயாரிப்பில்தான் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். தமிழில் ‘நான் திரும்பி வருவேன்’ என்ற தலைப்பும், தெலுங்கில் ‘ஒக்கடு மிகலடு’ என்றும் இத்திரைப்படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான மோகன் பாபுவின் மகன் மஞ்சு மனோஜ்தான் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். எழுத்து, இயக்கம் – அஜய் ஆண்ட்ரூஸ் நூதக்கி. திரைக்கதை – கோபி மோகன்,  தமிழ் வசனம்,  பாடல்கள் – சுரேஷ் ஜித்தன்.

Naan Thirumbi Varuvean-Teaser-Stills-2

ஈழத் தமிழர்கள் எதிர் கொண்ட பிரச்சினைகள், அனுபவித்த கொடுமைகள் பற்றி பல படங்களில் சொல்லப்பட்டிருந்தாலும், இதுவரையிலும் அவைகளில்கூட சொல்லப்படாத பல சம்பவங்களை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்களாம்.

படத்தின் தலைப்பான ‘நான் திரும்பி வருவேன்’ என்பது விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை மனதில் கொண்டு எழுதப்பட்ட வசனம். ஈழப் பிரச்னையை பேசும் இந்தப் படத்துக்கு இதுவே பொருத்தமாக அமைந்துவிட்டதால் அதையே வைத்துள்ளார்களாம். 

படத்தில் இரண்டு வேறுபட்ட தோற்றத்தில் மஞ்சு மனோஜ் நடித்திருக்கிறார். இந்தியாவில் கல்லூரி காலத்தில் சமூகத்துக்காக போராடும் இளைஞனாக ஒரு வேடத்தையம், ஈழத்தில் தமிழின விடுதலைக்காக போராடும் இயக்கத்தின் தலைவராக பிரபாகரனின் தோற்றத்தில் மற்றொரு வேடத்தையும் ஏற்றிருக்கிறார் மஞ்சு மனோஜ். 

இந்தப் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது வெளியான டீஸரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடி போன்ற ஒரு கொடியும், அதன் பின்னணியில் ‘தேசம் வாழ்க’ என்ற குரலும் ஓங்கி ஒலித்தது.

தமிழ்ப் பெண்களை சிங்கள ராணுவம் வேட்டையாடிய கொடுமைகள் பலவும் டீசரில் இருந்தன. கடைசியான முள்ளிவாய்க்கால் போரை நினைவுபடுத்தும்வகையில் ராணுவ காட்சிகளும், போர்க்களக் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

Naan Thirimba Varuven Press Meet Photos (12)

நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் அஜய் ஆண்ட்ரூஸ் நூதக்கி  பேசும்போது  “ஈழத் தமிழர்களை ஒருவகையில் பார்த்தால் அவர்களும் இந்தியர்கள்தான். இந்தியாவில் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது, அவை மற்ற மாநிலத்து மக்களையும் பாதிக்கும். இதை உணர்த்துவதற்காகவே இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்.

மேலும், ஏற்கனவே ஈழத் தமிழர்கள், இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடல் வழியாக அகதிகளாக வரும்போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து ‘ராவண தேசம்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை நான் இயக்கியிருக்கிறேன். அப்போது இருந்தே விடுதலைப்புலிகள் மற்றும் ஈழத் தமிழர்களைப் பற்றி விரிவாக பேசும்வகையில் ஒரு திரைப்படத்தை உருவாக்க நினைத்திருந்தேன். அது இப்போதுதான் சாத்தியமானது.

நம் கண் முன்னால் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். தமிழ் பெண்கள் சீரழிக்கப்பட்டார்கள். இந்த விஷயம் உலகம் முழுவதும் இருக்கிற தமிழர்களால் மறக்கக் கூடாத, மறக்க முடியாத ஒன்று. இதைத்தான் படமாக எடுத்திருக்கிறோம்.

இலங்கையில் இருந்து அகதியாக இந்தியா வந்திருக்கிறான் ஓர் இளைஞன். இங்கே நடக்கும் சம்பவங்கள் அவனை நிம்மதி இழக்க வைக்கின்றன. என்னென்ன சம்பவங்களால் அவன் ஈழத்தில் அகதியானானோ, அதே சம்பவங்கள் தமிழகத்திலும் அவன் கண்ணெதிரில் நடக்கின்றன. இதனைப் பார்த்து கோபப்படும் அவன் என்ன செய்தான் என்பதுதான் இந்த நான் திரும்பி வருவேன் திரைப்படம். 

ஈழம் பற்றி தெலுங்கு ஆட்களாகிய நாங்கள் படம் எடுத்துள்ளோமே என்று நினைக்காதீர்கள். தமிழோ, தெலுங்கோ  வலி எல்லோருக்கும் ஒன்றுதானே. அந்த வலி உலகின் பார்வைக்கு என்றென்றும் ஒரு பதிவாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். படத்தை உருவாக்கும்போது அந்த வலியை நாங்களும் அனுபவித்தோம்…” என்றார். 

படத்தின் நாயகன் மஞ்சு மனோஜ் பேசும்போது “என் தாய் மொழி தெலுங்கு என்றாலும் நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே இதே சென்னையில்தான். நான் இந்த ஊரு தண்ணீர் குடித்து வளர்ந்தவன். எங்கப்பாவும் இங்கேயே வளர்ந்துதான் பெரிய ஆளானார்.

இதற்கு முன்பாக நான் ‘என்னைத் தெரியுமா’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருந்தேன். அது இங்கே சரியாக ஓடவில்லை. அப்படிப் பார்த்தால் இது எனக்கு இரண்டாவது படம்.

Naan Thirimba Varuven Press Meet Photos (15)

எனக்கு நிறைய ஈழத் தமிழ் நண்பர்கள் உண்டு. அவர்கள் மூலமாக ஈழத்தில் நடைபெற்ற போர், அப்பாவி தமிழ் மக்களுக்கு நேர்ந்த கொடுமைகள், சித்ரவதைகள்.. இன்றைக்கும் அகதிகளாய் உலகம் முழுவதிலும் பரிதாபமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்கள்… இதையெல்லாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன்.

தன் கண் முன்னாடியே தன் மண்ணில், தான் பிறந்த பூமியில், தன் நாட்டு இராணுவத்தாலேயே அப்பா அண்ணன், தம்பி எல்லாம் சுட்டுக் கொல்லப்படுவதையும், அம்மா,  அக்கா, தங்கைகள் கற்பழிக்கப்படுவதையும் பார்ப்பது எவ்வளவு பெரிய கொடுமை. அந்தக் கொடுமையை அனுபவித்தவர்கள் ஈழத் தமிழர்கள். 

பொதுவாக நாம் அனைவரும் நமது பிள்ளைகள் டாக்டராகவோ என்ஜினீயராகவோ ஆக வேண்டும் என்றுதான் நினைப்போம். ஆனால் ‘நம்ம பிள்ளை படகுல தப்பிப் போயி அகதி ஆயிட்டாலே போதும். உசுராவது பிழைச்சுக்குவான்..’ என்று ஏங்கின பெற்றோர்கள்தான் ஈழத்தில் அதிகம்.  

இதையெல்லாம் கேள்விப்பட்டபோது இதை ஏன் ஒரு திரைப்படமாக எடுக்கக் கூடாது என்று எனக்குள் தோன்றியது. அதன் விளைவுதான் இத்திரைப்படம்.

Naan Thirimba Varuven Press Meet Photos (16)

இந்தப் படம் அவர்களுக்கு நடந்த கொடுமைகளை அழுத்தமாக சொல்லும். படத்தில் நான் கோபக்கார ஈழத் தமிழ் இளைஞனாகவும், பின்பு போராளிகளுக்கு தலைமை தாங்கும் தலைவனாவும் நடித்திருக்கிறேன். 

தலைவனாக நடிக்கும்போது, அந்த கம்பீரம் வர வேண்டும் என்பதற்காக பதினைந்து கிலோ வெயிட் ஏற்றினேன். இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பான விஷயம் அது. இப்படி ஒரு படத்தில் நடிக்கும்போது செத்துப் போனால்கூட அது சந்தோஷமான விஷயம்தான். ஒரு நல்ல படம் பண்ணிட்டு செத்துப் போனானேன்னு பேராவது கிடைக்குமே…“ என்றார் நெகிழ்ச்சியோடு..! 

“ஈழத் தமிழர்கள் குறித்து படம் எடுத்தால் சென்சார் உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்குமே…?” என்று கேட்டதற்கு, “தெரியும். அதையெல்லாம் மனதில் வைத்துதான் இந்த படத்தை நாங்கள் இயக்கியிருக்கிறோம். ஈழத் தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் பற்றிய படமாக இருந்தாலும், அதை வெளிப்படையாக சொல்லாமல், விதிமுறைகளுக்கு உட்பட்டே இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம்.

எந்தவித சர்ச்சையையும் உருவாக்காமல், திரையரங்கில் வெளியாகும்படி காட்சிகள் அனைத்தையும் பார்த்து, பார்த்து எடுத்திருக்கிறோம். அதனால், எந்தவித பிரச்சினையும் வராது என்று நம்புகிறோம்..” என்றார் நாயகன் மஞ்சு மனோஜ்.

படத்தில் போராளிகளின் தலைவராக பிரபாகரனை நினைவுபடுத்தும் கேரக்டரில் நடித்திருக்கிறார் மஞ்சு மனோஜ். அதே சமயம் ‘ஈழம்’ என்கிற பெயரும், ‘விடுதலைப்புலிகள்’ என்கிற பெயரும் படத்தில் இடம் பெறாதவகையில் சூதானமாக படத்தை தயாரித்திருப்பதுபோல தெரிகிறது.

“ஈழப் போராட்டத்தையும், பிரபாகரனையும் தவறாகப் பேசினால் இங்கேயிருக்கின்ற ஈழ ஆதரவு அமைப்புகளே படத்தை திரையிட அனுமதிக்க மாட்டார்களே.. பிரச்சினை வருமே?” என்று கேட்டதற்கு, “அதையெல்லாம் நாங்கள் யோசித்துவிட்டோம். படத்தின் ரிலீஸூக்கு முன்பேயே அவர்கள் அனைவருக்கும் படத்தைப் போட்டுக் காட்டிவிட்டு அவர்களுக்கு விளக்கம் சொல்லிவிட்டுத்தான் படத்தை தியேட்டருக்கு கொண்டு வருவோம்..” என்றார்கள் உறுதியாக..!

“இந்தப் படத்தில் எந்தவொரு அரசையும், மத்திய, மாநில அரசையும் குற்றம்சாட்டி பேசவில்லை…” என்றார் இயக்குநர். “ஈழத்தின் கடைசி போரை நடத்தியதே இந்திய அரசுதான். பின்பு அவைகளை குற்றம் சாட்டாமல் நீங்கள் எப்படி ஈழம் பற்றி ஒரு படத்தை எடுக்க முடியும்…?” என்று கேட்டதற்கு “நாங்கள் இப்போது ஆட்சியில் இல்லாத, மறைந்த தலைவர்களை மட்டுமே இதில் விமர்சித்திருக்கிறோம்.. மற்றபடி ஈழத்தின் மக்கள் பிரச்சினைகளைத்தான் சொல்லியிருக்கிறோம். படம் வரட்டும் பாருங்கள். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்..” என்றார் இயக்குநர்.

இப்படி பார்த்தால் படத்தின் கதை ஈழத்தின் முழுமையான கதையாக இருக்காது என்றே தெரிகிறது. படம் வரட்டும் பார்ப்போம்..!  

Our Score