full screen background image

“விஜய் எப்போதும் சி.எம்.தான்..” – நடிகர்-இயக்குநர் பார்த்திபன் பேச்சு..!

“விஜய் எப்போதும் சி.எம்.தான்..” – நடிகர்-இயக்குநர் பார்த்திபன் பேச்சு..!

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘மெர்சல்.’ வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

இந்த நிகழ்வில் படத்தின் நடிகர்கள், கலைஞர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர். நடிகர் தனுஷ், இயக்குநர் பார்த்திபன், நடிகர்கள் சிபிராஜ், சாந்தனு பாக்யராஜ், நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா ஆகியோரும் பங்கேற்றனர்.

mersal-function-stills-6

விழாவுக்கு முன்பாகவே வந்த இளைய தளபதி  விஜய், வாசலில் நின்றபடியே விழாவுக்கு வந்த அனைத்து பிரபலங்களையும் கை குலுக்கி வரவேற்றார்.

படக் குழுவினர் மட்டுமல்லாது சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் பெருமளவில் விழா அரங்கில் குவிந்திருந்தனர். மேடையில் ஒவ்வொரு நட்சத்திரமும் வரும்போது ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றனர்.

நடிகர் பார்த்திபன் பேசும்போது, “இந்தப் படத்தின் முதல் பாடலை கேட்டபோதே நான் மெர்சலாயிட்டேன். பொடிமாஸ் செய்யணும்னா முட்டை வேணும், மாஸ் படத்திற்கு விஜய் மட்டும்தான் வேண்டும். விஜய்யின் அப்பாவும், அம்மாவும் சர்ச்சுகளுக்கு அடிக்கடி போய் அங்கே ‘மாஸ்’ என்ற பெயரில் நடத்தப்படும் வழிபாட்டில் நிறைய கலந்து கொண்டிருப்பார்கள் போல.. அதனால்தான் இப்படி ‘மாஸான’ ஒரு பிள்ளையை பெற்றெடுத்திருக்கிறார்கள்.

parthiban-1

நடிகர் விஜய் சம்பாதிச்சதெல்லாம் 100 கோடி, 200 கோடியெல்லாம் இல்லை.. அவர் சம்பாதித்து வைத்திருப்பது ரசிகர்களாகிய உங்களைத்தான். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இணைந்தால் என்னாகும்னு நமக்குத் தெரியாது.. ஆனால் விஜய்யும், அவரது ரசிகர்களாகிய நீங்களும் இணைநதால் 100 கோடி கிடைக்கும். கூடுதலாக ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்தால் 200 கோடி கிடைக்கும். இன்னும்கூட தேனாண்டாள் பிலிம்ஸும் இணைந்தால் 300 கோடி கிடைக்கும். கடைசியாக அட்லியும் இணைந்தால் 500 கோடியே கிடைக்கும். இந்தப் படத்திலும் இதுதான் நடக்கவிருக்கிறது.

இராம.நாராயணன் ஸார் 99 படத்துல செலவு பண்ணின காசை அவரது மகன் முரளி இந்த ஒரே படத்துக்காக செலவு செஞ்சிருக்காரு. அவருடைய இந்த தைரியமான முயற்சி வெற்றியடைய வேண்டும்ன்னு வாழ்த்துகிறேன்.

நான் தம்பி விஜய்யை பெரிதும் மதிக்கிறேன். இதுக்கு காரணம், சமீபத்தில் நடந்த ஒரு சர்ச்சையில் யாரையும் பாதிக்காத வண்ணம் கண்ணியமான ஒரு மெஸேஜை அவர் வெளியிட்டிருந்தார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

‘ஆளப் போறான் தமிழன்’னு பாடல் வெளியாகியிருக்கு. இப்போகூட டிவிட்டர்ல யாருக்குமே கிடைக்காத பாக்கியமாக விஜய்க்காக மட்டும் தனி இமோஜியையே உருவாக்கிக் கொடுத்திருக்காங்க.

உலகத்தில் மிகச் சிறந்த சி.எம். நீங்கதான் என்று விஜய்யின் அடுத்த படத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட் பண்ணுவார் பாருங்க. சி.எம்.முன்னா ‘கலெக்சன் மன்னன்’னு சொல்ல வந்தேன்.

இந்த மண்ணை இனிமேல் ஆளப் போறது ஒரு தமிழனாவோ, ஒரு மலையாளியாவோ, கன்னடராகவோ யாராக இருந்தாலும் வாழப் போறது விவசாயிகளாக இருக்கணும்…” என்றார்.

Our Score