full screen background image

‘V1’ – சினிமா விமர்சனம்

‘V1’ – சினிமா விமர்சனம்

பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா மூவ்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.

இப்படத்தின் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கிருஷ்ணா சேகர் T.S., இசை –  ரோனி ரப்ஹெல், படத் தொகுப்பு – C.S.ப்ரேம் குமார், கலை – V.R.K. ரமேஷ், SFX – ஒளி சவுண்ட் லாப்ஸ், மிக்ஸிங் – M.R.ராஜகிருஷ்ணன், மக்கள் தொடர்பு – சதிஷ்(AIM). தயாரிப்பாளர் – அரவிந்த் தர்மராஜ், N.A.ராமு, சரவணன் பொன்ராஜ், வெளியீடு – பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பாவெல் நவகீதன்,

பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பாக விநியோகஸ்தரான L.சிந்தன் இப்படத்தை வெளியிட்டுள்ளார்.

‘வட சென்னை’, ‘பேரன்பு’, ‘மகளிர் மட்டும்’, ‘குற்றம் கடிதல்’, ‘மெட்ராஸ்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ள நடிகர் பாவெல் நவகீதன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இது இவர் இயக்கிய முதல் திரைப்படமாகும்.

இன்வஸ்டிகேட்டிவ் திரில்லரான இப்படம் முழுக்க, முழுக்க விறுவிறுப்பாக இருக்கும் வகையில் காட்சிக்கு காட்சி புதுப்புது யுக்திகளை அமைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாவெல் நவகீதன்.

ஒரு சிலருக்கு கூட்டத்தை பார்த்தால் பயம். அதிலும் சிலருக்கு அந்தக் கூட்டத்தின் முன் பேச வேண்டும் என்றால் பயம். கத்தியை பார்த்தால் பயம். இரத்தத்தை பார்த்தால் பயம் என்று பலருக்கு பல வகையான பயங்கள் இருக்கும். இப்படத்தின் கதாநாயகனுக்கு இருட்டு என்றாலே பயம். இதனை ‘நிக்டோபோபியா’ என்பார்கள்.

கதைப்படி கதாநாயகன் காவல் துறையில் வேலை பார்க்கும் ஒரு போலிஸ் அதிகாரி. ‘V-1’ என்ற எண்ணை கொண்ட விட்டருகே ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலை பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயம் கதாநாயகனுக்கு.

இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன், இந்தக் கொலைக்கான மர்மத்தையும், கொலைக்காரனையும் கண்டு பிடித்தாரா…? இல்லையா..? என்பதுதான் இந்த ‘V1’ படத்தின் கதை.

நாயகன் ராம் அருண் காஸ்ட்ரோ போலீஸ் இன்ஸ்பெக்டர்தான். ஆனால் ஸ்டேஷன் டூட்டி வேண்டாம் என்று சொல்லிவிட்டு தடயவியல் துறையில் புதிதாக வேலைக்குச் சேர்பவர்களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர் பணிக்குச் சென்றுவிட்டார்.

சென்னையில் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வரும் காதலர்கள் லிஜேஸூம், காயத்ரியும். இவர்களுக்குள் இப்போதெல்லாம் நாள்தோறும் சண்டை, சச்சரவு. அந்தச் சூழலில் ஒரு நாள் இரவில் காயத்ரி மர்ம நபர் ஒருவரால் ஸ்குரு டிரைவரால் குத்திக் கொலை கொல்லப்படுகிறார்.

இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரியா விசாரிக்கிறா். தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை. கிடைத்தத் தடயங்களும் பலனளிக்கவில்லை. ஆகவே இந்த வழக்கில் காஸ்ட்ரோவை வலுக்கட்டாயமாக சேர்த்து விசாரணை செய்ய பணிக்கிறார் அவருடைய மேலதிகாரி.

காதலன் லிஜேஸ் குற்றவுணர்வின் காரணமாக தானே கொலை செய்ததாகச் சொல்கிறான். அது ஏற்கப்படவில்லை. காயத்ரியை ஒருதலையாய் காதலித்த லிங்காவும் விசாரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறான்.

காயத்ரி கொலையுண்ட இடத்தின் அருகேயிருக்கும் வீட்டில் குடியிருக்கும் பேச்சுலர் இளைஞன் ஒருவன் மன நலத்துக்காக சிகிச்சை பெற்று வருகிறான். அவன் மீதும் சந்தேகம் வந்து அதுவும் இல்லையென்றாகிறது.

இறுதியில் எதிர்பார்க்காத ஒரு நபர் கொலையாளியாகச் சிக்குகிறார். அவரை எப்படிக் கண்டுபிடித்தார்கள்..? அவர் ஏன் காயத்ரியைக் கொலை செய்தார் என்பதுதான் இந்த மர்டர் மிஸ்டரி படத்தின் சுவையான, விறுவிறுப்பான திரைக்கதை.

ஹீரோ ராம் அருண் கேஸ்ட்ரோ புதிய வித்தியாசமான நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். அவருடைய தங்குத் தடையில்லாத வசன உச்சரிப்பும், உடல் அசைவும், அதற்கேற்ற நடிப்பும் இந்தக் கேரக்டருக்கு மிகவும் பொருந்திப் போயிருக்கிறது.

ஆக்சன் ஹீரோக்களுக்கேற்றவாறு சண்டை காட்சிகளிலும் துணிச்சலுடன் நடித்துள்ளார். இரவைப் பார்த்தால் பயம் வரும் காட்சிகளில் இன்னும் அதிகமாக இவரைக் காட்டியிருக்க வேண்டும். அதற்கான களத்தைத் திரைக்கதை தராததால் ஒட்டு மொத்தப் படத்திலும் அந்த ‘போபியா’ என்ற விஷயம் எதற்காக என்ற கேள்வி எழுகிறது.

ஒரு போலீஸ் ஆபீஸருக்குரிய சந்தேகக் குணம்.. எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாத தன்மை.. குற்றவாளிகளை பயமுறுத்தும் சந்தேகப் பார்வை.. இவை அத்தனையையும் வெளிக்காட்டியிருக்கிறார் கேஸ்ட்ரா. நல்வரவு ஸார்..

இதேபோல் இன்னொரு காவல்துறை அதிகாரியாக விஷ்ணுபிரியா.. புதிய இள வயது அதிகாரியாக தனது இளமைத் தோற்றத்தை முன் நிறுத்தியே காட்சிகள் அனைத்திலும் தோன்றுகிறார். வசன உச்சரிப்பு மட்டுமே அவரை அன்னியமாகக் காட்டுகிறது. மற்றபடி பெண் போலீஸ் அதிகாரிக்கு ஏற்ற மிடுக்கும், தோற்றமும் இவருக்கு பிளஸ்ஸாக அமைந்திருக்கிறது.

கொலை செய்யப்படும் காயத்ரியும், லிஜீஷ் ஜோடியும் சண்டை போடும் காட்சிகளிலெல்லாம் தற்போது சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் ‘லிவிங் டூ கெதர்’ என்னும் கெட்டக் கலாச்சாரத்தின் பக்க விளைவுகள் எதிரொலிக்கின்றன. இதனுடன் சேர்ந்து ஒரு மர்மக் கொலைக்கான பிளாட்டும் இருக்கும்படி திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பானது.

மைம் கோபியின் 2 நிமிட அலட்டல் பேச்சும்.. லிங்கேஷின் 10 நிமிட சலசலப்பும் வழக்கமான விசாரணைக்கு நடுவில் ஒரு கவன ஈர்ப்பைக் கொடுத்திருக்கிறது.

ஒரு சிறந்த திரில்லர் படத்திற்கு ஒளிப்பதிவும், இசையும் மிக முக்கியம். இந்தப் படத்தில் கிருஷ்ண சேகரின் ஒளிப்பதிவில் கலர் டோனில் எந்த மாற்றமும் இல்லை. முதலில் இருந்து கடைசிவரையிலும் ஒன்று போலவே அமைந்திருக்கிறது.

சேஸிங் காட்சியில் மிகப் பிரமாதமான ஒரு பணியை கேமிரா செய்திருக்கிறது. இதேபோல் ஆக்சன் காட்சிகளிலும்..! ரோனி ராபலின் பின்னணி இசை அடக்கி வாசிக்கப்பட்டு காட்சிகளில் திக்… திக்… உணர்வைக் கூட்டும்வகையில் இருப்பது படத்திற்குக் கிடைத்திருக்கும் கூடுதல் பலம்.

இது போன்ற மர்மக் கொலைகளைத் துப்பறியும் சம்பந்தமான கதைகளுடைய திரைப்படங்களின் திரைக்கதை ஒன்று போலவேதான் இருக்க முடியும். கொலை.. சந்தேகம். விசாரணை.. தேடுதல்.. வலைப் பின்னல்.. கடைசியாக எதிர்பாராத ஒருவன்தான் கொலையாளி.. என்ற டெம்ப்ளேட் திரைக்கதைதான் இந்தப் படத்திற்கும்.

ஆனால் கொலைக்கான காரணம் இது போன்ற மர்மக் கொலை பற்றிய திரைப்படங்களில் இதுவரையிலும் வராதது என்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு. கொலை செய்தவர் தான் ஏன் கொலை செய்தேன் என்பதை திமிராகப் பதிவு செய்யும் இடம்தான் தற்போதைய தமிழகத்தின் சமூக நிலை. இதனை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். இந்தத் தைரியத்திற்காக அவருக்கு ஒரு பாராட்டுக்கள்.

ஆனால் அதே சமயம்.. எந்த மாநிலத்தின் பாரன்ஸிக் டிபார்ட்மெண்ட்டில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் இது போன்ற வழக்குகளை இப்படி கையாள்கிறார்கள்..? என்பதை இயக்குநர் சொல்லவில்லை. ஸ்டேஷன் லிமிட்டில் செய்ய வேண்டிய விசாரணையை தடயவியல் துறையினர் மேற்கொள்வதாகக் காட்டியிருப்பது குழப்புகிறது.

ஆதாரங்களைத் திரட்டி கொடுக்க வேண்டியது மட்டும்தான் தடயவியல் துறையினரின் பணி. அதற்கு மேல் அதை வைத்துக் கொண்டு விசாரணையை துரிதமாக்கி குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனின் அதிகாரிகளின் பணி. இதை அப்படியே உல்டாவாக்கி இதில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். வித்தியாசம் தேவைதான்.. ஆனால் அது இந்த அளவுக்காக இருக்க வேண்டும்..?

நிக்டோபோபியா நோயால் பாதிக்கப்பட்ட நாயகன் அது தொடர்பாக எங்காவது ஓரிடத்தில் பாதிக்கப்பட்டு அந்த நோயின் கொடூரத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்த்தால் கடைசிவரையிலும் அதனைக் காட்டவேயில்லை. பின்பு எதற்காக அந்த கேரக்டர் ஸ்கெட்ச்சும்.. நாயகனின் மனைவி சம்பந்தப்பட்ட காட்சிகளும்.. இயக்குநருக்கே வெளிச்சம்..!

இன்னொரு பக்கம் ஒரு கொலை வழக்கு விசாரணையை தடயவியல் துறையினர் எப்படி கையாள்வார்கள்.. எதை வைத்து ஆதாரங்களைக் கண்டறிவார்கள்.. என்பதையெல்லாம் இந்தப் படத்தில் துல்லியமாக குறித்து வைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

சந்தேகம் வரக் கூடிய இடங்கள், விஷயங்கள், நபர்கள் என்று அனைத்திற்கும் தெளிவான தொடர்புகளுடன் திரைக்கதை அமைத்து.. தெளிவான வசனங்கள் மற்றும் ஓவர் ஆக்டிங் இல்லாத காட்சியமைப்புகளால் படத்தை கடைசிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநரான பாவல் நவகீதன். அவருக்கும், அவரது குழுவினருக்கும் நமது பாராட்டுக்கள்.

Our Score