full screen background image

N-4 – சினிமா விமர்சனம்

N-4 – சினிமா விமர்சனம்

My Son Is Gay” என்ற படத்தின் மூலம் இயக்குராக அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் குமார். முதல் படத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்த இவர் தனது இரண்டாவது படமாக இந்த N4’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

தரம்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும், பியாண்ட் தி லிமிட் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ள.

இப்படத்தில் மைக்கேல் தங்கதுரை, கேப்ரியல்லா செலஸ், அனுபமா குமார், வடிவுக்கரசி, அபிஷேக் சங்கர், அழகு, அஃப்சல் ஹமீது, வினுஷா தேவி, அக்க்ஷய் கமல், பிரக்யா நாக்ரா  என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் – நவீன் சர்மா, யோகேஷ் சர்மா, லோகேஷ் குமார், தயாரிப்பு நிறுவனம் – தர்மராஜ் பிலிம்ஸ், பியாண்ட் தி லிமிட் கிரியேஷன்ஸ், இணை தயாரிப்பாளர் – ரபேல் ராஜசேகர், ஒளிப்பதிவு – திவ்யன்க்.S, படத் தொகுப்பு – டேனி சார்லஸ், இசை – பாலசுப்ரமணியன்.G, சண்டை இயக்கம் – V.கோட்டி, உடைகள் – நந்தா அம்ரிதா, லோகேஷ், பத்திரிகை தொடர்பு – சதிஷ் (AIM).

இப்படம் ‘Calcutta International Cult Film Festival’ திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதினை இயக்குநர் லோகேஷ் குமாருக்கு பெற்றுக் கொடுத்தது.

2021-ம் ஆண்டுக்கான 11-வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த பின்னணி இசைக்கான விருதை இத்திரைப்படம் வென்றுள்ளது.

வட சென்னை மக்களின் வாழ்வியலை எதார்த்தமான கோணத்தில் காட்டுகிறது இப்படம்.  வட சென்னை பகுதியில் இருக்கும் ‘என்-4’ என்ற போலீஸ் ஸ்டேஷனை மையப்படுத்திய கதை என்பதால், அதையே படத்துக்கும் தலைப்பாக வைத்துள்ளனர்.

வடசென்னையின் மீனவர் குப்பத்தில் வசித்து வருகிறார்கள் மைக்கேல் தங்கதுரை, கேப்ரியல்லா செலஸ், அஃப்சல் ஹமீது, வினுஷா தேவி. இவர்களின் பாட்டி வடிவுக்கரசி. இதில் வினுஷா தேவி கல்லூரி மாணவி. வாய் பேச முடியாத ஊனமுற்றவர். மைக்கேலும், அஃப்சலும் கடற்கரையில் மீன்களை ஏற்றி, இறக்கும் வேலையில் இருக்கிறார்கள். கேப்ரியல்லா மீன் விற்பனை செய்து வருகிறார்.

இதில் கேப்ரியல்லாவை மைக்கேல் தங்கத்துரை காதலித்து வருகிறார். இதேபோல் அஃப்சலை வினுஷா தேவி காதலிக்கிறார். இவர்களின் காதல்கள் ஊடலும், கூடலுமாக தொடர்ந்து வருகிறது.

இந்த நேரத்தில் கல்லூரி மாணவரான அக்சய் கமல், தனது நண்பர்களுடன் அவ்வப்போது அந்த மீனவப் பகுதிக்கு வந்து கஞ்சா புகைப்பது வழக்கம். அப்படியொரு நாள் கஞ்சை புகைத்துக் கொண்டிருக்கும்போது  அவர்கள் இருந்த படகில் ஒரு துப்பாக்கி கிடைக்கிறது.

அக்சய் மது போதையில் அந்தத் துப்பாக்கியின் டிரிக்கரை தட்டிவிட குண்டு வெளிப்பட்டு அந்தப் பக்கமாக வந்த வினுஷா தேவியின் கழுத்தில் பாய்கிறது. ரத்த வெள்ளத்தில் கிடக்கும் வினுஷாவை மருத்துவனைக்குக் கொண்டு போகிறார்கள் அவளது குடும்பத்தினர்.

என்-4 போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருக்கும் பாத்திமா(அனுபமா குமார்) ஹானஸ்ட் போலீஸ் ஆபீஸர் என்று டிபார்ட்மெண்ட்டில் பெயர் வாங்கியவர். இதையறிந்துதான் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், அவரை இந்த ஸ்டேஷனுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

இந்த வழக்கை விசாரிக்கத் துவங்கும்போது அனுபமாவின் நோயாளி மகன் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். சின்ன வயதில் இருந்தே வலிப்பு நோயால் அவதிப்படும் மகனுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டிய கட்டாயம். இதற்காக பாத்திமாவுக்கு இப்போது, 5 லட்சம் ரூபாய் உடனடியாக தேவை.

இந்த நேரத்தில் இந்தத் துப்பாக்கி வழக்கில் சுட்டவன் அக்சய் என்பது போலீஸுக்குத் தெரிய வர அவன் தனது வழக்கறிஞருடன் நேரில் வந்து சரண்டைகிறான். அந்த வழக்கறிஞர் பாத்திமாவிடம் பேரம் பேசுகிறார். அந்த ஸ்டேஷனின் சப்-இன்ஸ்பெக்டரான அபிஷேக் இந்தப் பேரத்துக்கு இடைத் தரகராக இருக்கிறார்.

அக்சய்யை ஜாமீனில் இப்படியேவிட்டுவிட்டு கதையைத் திருப்பிப் போட்டு வினுஷா தேவியின் குடும்பத்தினரை கைது செய்து சிறையில் வைத்தால் பாத்திமாவின் மகனது சிகிச்சைக்கு தேவைப்படும் பணத்திற்கு மேலேயே தருவதாகச் சொல்கிறார் வழக்கறிஞர். இன்னொரு பக்கம் வினுஷா தேவியை சுட்டது அக்சய் என்பது மைக்கேலுக்குத் தெரிய வர.. அவனும் அக்சய்யை தேடியலைகிறான்.

அடுத்து நடந்தது என்ன..? பாத்திமா என்ன முடிவெடுத்தார்..? அக்சய் தப்பித்தானா..? மைக்கேல் அக்சயை பிடித்தானா..? என்பதெல்லாம் படம் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்..!

படத்தைத் தாங்கிப் பிடித்திருப்பது கேப்ரியல்லாவும், இன்ஸ்பெக்டர்  பாத்திமாவாக நடித்திருக்கும் அனுபமா குமாரும்தான். கேப்ரியல்லா தனது அழுத்தமான நடிப்பினால் நம்மைப் பெரிதும் கவர்ந்திழுக்கிறார். கஞ்சா புகைத்தமைக்காக வருங்கால கொழுந்தனை திட்டி விரட்டுவதும், கஞ்சா விற்கும் ரவுடிகளை தட்டிக் கேட்பதும், தனது காதலன் மைக்கேலிடம் தான் செய்தது சரி என்று வாதாடுவதிலும் சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

அதேபோல் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து போலீஸையே கேள்வி மேல் கேள்வி கேட்டு மடக்கும்போதும், “வீட்டுக்கு இப்படியொரு பொண்ணு இருந்தால் போதுமய்யா!” என்று எண்ணத் தோன்றுகிறது.

இன்னொரு பக்கம் அமைதியான குணத்துடன் இன்ஸ்பெக்டராக அனுபமா குமார் தனது அழுத்தமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். வழக்கறிஞர் தன்னிடம் பேரம் பேசும்போது அவர் காட்டும் அலட்சிய நடிப்பு ரசிக்க வைக்கிறது. குற்றவாளிகளிடம் விசாரிக்கும் காட்சியில், அழகான இயக்கத்தையும் தாண்டிய நடிப்பைக் காண்பித்திருக்கிறார் அனுபமா.

தனது மகனுக்காக தனது இத்தனை வருட கொள்கையைத் தூக்கிப் போட வேண்டிய நிர்ப்பந்தத்தை அவர் அணுகும்விதமும், ஏற்கும்விதமும் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. இதனாலேயே அது தவறு என்பதைவிடவும் “பாவம்.. அந்தம்மா என்ன செய்யும்” என்று அவர் மீது பரிதாபம் ஏற்படும்விதமாகவே நமக்குத் தோன்றுகிறது.

வினுஷா தேவி தனது ஊமை பாஷையில் காதல் மொழி பேசும்போதும், கடலுக்குப் போன காதலன் இன்னமும் திரும்பி வராத சூழலை எண்ணி கலங்கியிருக்கும் காட்சியிலும் தனது அழகான நடிப்பை பதிவு செய்திருக்கிறார்.

வடிவுக்கரசி ஓடிப் போன தனது கணவரை இத்தனையாண்டுகள் கழித்து சந்திக்கும் காட்சியில் பேச்சற்று வீட்டுக்குள் ஓடிப் போய் நிற்கும் காட்சியில் நம் மனதைத் தொடுகிறார். சிறப்பான இயக்கமும் உடன் சேர்ந்து இந்தக் காட்சியை நம் மனதைத் தொட வைத்திருக்கிறது.

மைக்கேல் தனது குடும்பத்தைத் தாங்கும் கேப்டன் கதாப்பாத்திரத்திற்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார். பிரக்யா நக்ரா தனது காதலனான அப்சலைக் காப்பாற்றுவதற்காக பேரத்துக்குத் துணை போகும் சாதாரண பெண்ணாக நடித்திருக்கிறார்.

கடலும், கரையும் சேர்ந்த இடம் என்றாலே ஒளிப்பதிவாளர்கள் கொண்டாடுவார்கள். இந்தப் படத்திலும் ஒளிப்பதிவாளர் திவ்யன்க்கின் கேமிராவுக்கு நிறைய வேலைகளைக் கொடுத்து படம் முழுவதும் அழகு காட்சிகளாய் நிரப்பியிருக்கிறார்கள்.

ஜி.பாலசுப்ரமணியனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் மட்டுமே. டைட்டில் பாடலின் வரிகள் சுலபமாக காதில் விழுகிறது. பின்னணி இசையும் கதையுடன் ஒன்றிப் போய் இருக்கிறது. கதைக் களமான லொகேஷன்களைத் தேடிப் பிடித்துப் படமாக்கியிருக்கிறார்கள். கலை இயக்குநரின் அறிவுத்திறனான வேலைக்கு பாராட்டுக்கள்.

படத்தில் இயக்கம் மிகச் சிறப்பு. அனைத்துக் கதாப்பாத்திரங்களும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர். அதிகமான லாஜிக் எல்லை மீறல் இல்லாமல் பார்த்துக் கொண்டதற்காக இயக்குநருக்கு ஒரு ஷொட்டு..!

இடைவேளை வரையிலும் கதை இதுதான் என்பதை சொல்லாமலேயே படத்தை நகர்த்தியிருக்கிறார்கள். இடைவேளைக்கு பின்புதான் அந்தத் துப்பாக்கிக் குண்டினை மையமாக வைத்து கதையை கொண்டு சென்றுள்ளார் இயக்குநர்.

படத்தின் இறுதிக் காட்சிகளில் ஒரு பரபரப்பு, வேகம் இதைக் கூட்டி வைத்திருக்கிறார் இயக்குநர். படத்தின் முடிவில் நிகழும் துப்பாக்கிச் சூடு எல்லாம் நன்மைக்கே என்பதை சொல்வதுபோல முடிந்திருக்கிறது.

சின்ன பட்ஜெட் ஓகே. சின்ன நடிகர், நடிகைகளை வைத்து எடுத்துவிட்டோம். ஓகே. தலைப்பையாவது மிக எளிதாக மக்களைக் கவரும்வகையில் வைத்திருக்கலாமே? பின்பு எப்படி மக்கள் தியேட்டருக்கு ஓடி வருவார்கள்..!?

எந்தவொரு நல்ல சினிமாவும் வெகுஜன மக்களிடையே பேசப்படாத பட்சத்தில் “ஏதோ ஒண்ணு இடிக்குதே…” என்பார்களே… அது இந்தப் படத்துக்கும் பொருந்தும்..!

RATING : 3.5 / 5

Our Score