full screen background image

சங்கராபரணம், சலங்கை ஒலி மாதிரி கதை கிடைத்தால் அது போன்ற இசையும் வரும் – இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை..

சங்கராபரணம், சலங்கை ஒலி மாதிரி கதை கிடைத்தால் அது போன்ற இசையும் வரும் – இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை..

டி.எஸ்.பி. என்றழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் அதிசயமாக நேற்றைக்கு பத்திரிகையாளர்களை  சந்தித்தார்.

கிராப் வைத்த கிருதாவுடன் பார்ப்பதற்கு ஹீரோ போலவே இருந்தார். அது பற்றிய அறிவிப்பாக இருக்குமோ என்று நினைத்தோம். எடுத்த எடுப்பிலேயே புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட டிஎஸ்பி., சென்ற ஆண்டு கனடா, அமெரிக்காவில் தான் இசைக் கச்சேரி நடத்தியதை பற்றி மிகுந்த உற்சாகத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து பேசத் துவங்கினார்.

அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் ஒரு வயதான பாட்டி பாடலுக்கேற்றவாறு டான்ஸும் ஆடினாராம். “நான் சேர் மேல ஏறி நின்னு பாடிக்கிட்டே ஆடுறேன். அவங்களும் அதே மாதிரி ஆடுறாங்க.. அப்படியே ஸ்டன் ஆயிட்டேன்.. என்னவொரு எனர்ஜி அவங்களுக்கு இந்த வயசுல.. டான்ஸ் முடிவுல அந்த பாட்டி கால்ல விழுந்து ஆசீர்வாதமும் வாங்கிக்கிட்டேன்..

அப்புறம் எல்லாரும் மேடை கச்சேரில சினிமாவில் ஒலித்த பாடல்களைத்தான் பாடுவாங்க. நான் கொஞ்சம் வித்தியாசமா மகேஷ்பாபு நடிச்சு நான் இசையமைச்ச படத்தோட பின்னணி இசையை மேடையில் இசைத்தேன். செம ரெஸ்பான்ஸ்.. இந்த மாதிரி ஒரு இசைக் கச்சேரியை நாங்க பார்த்ததே இல்லைன்னு அமெரிக்காவுலேயும், கனடாவுலேயும் பல ரசிகர்கள் சொன்னாங்க.. இதுவே எங்களுக்குக் கிடைச்ச வெற்றியா நினைக்கிறேன். அந்த நிகழ்ச்சி கூடிய விரைவில் தமிழ்ல ஒரு டிவில ஒளிபரப்பாகப் போகுது..” என்றார் மூச்சே விடாமல்..

கொஞ்சம் நின்று மூச்சை இழுத்துவிட்டு அடுத்த டாபிக்கை தொட்டார். அது இளைய தளபதி விஜய் நடிப்பில் சிம்பு தேவன் இயக்கும் ‘புலி’ படத்திற்கு இசையமைப்பது பற்றி..

“நான் போன வருஷமே செலக்டிவ்வான படங்களுக்குத்தான் தமிழ்ல இசையமைச்சேன். ‘வீரம்’, ‘பிரம்மன்’னு ரெண்டே படம்தான். ஆனா தெலுங்கில் நிறைய கமிட்மெண்ட்டுகள் இருந்த்தால தமிழ்ல அதிகமா செய்ய முடியலை.

இந்த வருடமே எனக்கு நல்ல ஆரம்பமா இருக்கு. ஏன்னா விஜய் நடிக்குற ‘புலி’ படத்துக்கு நான் இசையமைக்கிறது. விஜய் ஸார் படத்துக்கு மியூஸிக் போடுறதே ஒரு இனிமையான அனுபவம்தான்.. அவர் நடிப்புல நான் இசையமைச்ச ‘வில்லு’ படத்துலதான் எல்லா பாட்டுமே ஹிட்டுன்னு அவரே என்கிட்ட சொல்லியிருக்காரு.

அவர் என்னோட வெல்விஷர். என்னோட கனடா-அமெரிக்கா புரோகிராமைகூட அவர்தான் பிரமோட் செஞ்சாரு. இந்த ‘புலி’ படத்துல முதலில் நான் கமிட் ஆனபோதே கொஞ்சம் பயந்திருந்தேன். ஏன்னா இது ஹிஸ்டாரிக்கல் படம்ன்னு வேற சொல்லிட்டாங்களா.. அது மாதிரி மியூஸிக் போடுறதுக்கு கொஞ்சம் நிறைய உழைக்கணுமேன்னு..

ஆனா சிம்புதேவன் ஸார்கூட முதல் சந்திப்பிலேயே கதை என்னன்னு எனக்கு அழுத்தமா புரிய வைச்சிட்டாரு. அதுலேயே எனக்கும் அவருக்கும் செட்டாயிருச்சு. கதையைப் பத்தி பார்ட், பார்ட்டா டிராயிங் வரைஞ்சு காட்டினதால எனக்கும் நல்லா புரிஞ்சிருச்சு..

இந்தப் படத்துல மொத்தம் 6 பாடல்கள் இருக்கு. அதுல மூணு பாட்டுக்கு மியூஸிக் போட்டுக் கொடுத்திட்டேன். ஒரு பாட்டை அவங்க முன்னாடியே ஷூட் செஞ்சுட்டாங்க.. இந்தப் படத்தோட இசை நிச்சயமா என்னோட மத்த படங்கள்ல இருந்த்தைவிடவும் வித்தியாசமாத்தான் இருக்கும்.. அந்தப் படத்தோட பிரமாண்டத்துக்கும், கதைக்கும் ஏற்ப என் இசை இருக்கும். நிச்சயமா நீங்க நம்பலாம்..” என்றார்.

“புலின்னா என்ன விஜய்யோட பெயரா..? இல்லாட்டி ஏதாவது கதை இருக்கா..?” என்று அப்பாவியாய் கேள்வி கேட்க.. டக்கென்று புரிந்து கொண்ட டிஎஸ்பி, “ஐயையோ.. இதுக்கு மேல நான் எதுவுமே சொல்லக் கூடாது. சொன்னா புலி வந்து அடிச்சிரும்..” என்று சொல்லித் தப்பித்துக் கொண்டார்.

“விஜய் பாடுவாரா..? ஸ்ருதிஹாசனை பாட வைப்பீங்களா..?” என்றெல்லாம் கேட்க.. “அதையெல்லாம் இப்போ சொல்ல முடியாது. இன்னும் 3 பாடல்கள் ரெடியாகணும். அது, அது அப்பத்தான் தெரியும்..” என்றார் டி.எஸ்.பி.

“ஏன் இப்பல்லாம் ‘சங்கராபரணம்’, ‘சலங்கை ஒலி’ மாதிரியான மியூஸிக்கெல்லாம் யாருமே போடுறதில்லை..?” என்று கேட்டதற்கு, “அது மாதிரியான கதைகள் கிடைக்கலியே.. கதை கிடைச்சு ஆர்ட்டிஸ்ட் ஓகேன்னா நிச்சயமா அது மாதிரி இசை வந்தே தீரும்..” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பேச்சு அப்படியே இசைஞானி பக்கம் திரும்பியது. “இசைஞானியை பார்த்தாலே எனக்கு கை, காலெல்லாம் உதறல் எடுக்கும். ஒரு முறை அவர் பக்கத்துல நின்னு புகைப்படம் எடுத்திட்டு ‘ஸார் உங்க பக்கத்துல நின்னாலே நடுக்கம்தான் ஸார் வருது’ன்னு சொன்னேன். உடனே அவர் சிரிச்சுக்கிட்டே ‘என் பக்கத்துல நின்னா இசைதானே வரும்’ என்றார்.  இப்பவும் இசைஞானியை நினைத்தால் எனக்கு நடுக்கம்தான் என்றார் நடுங்காமலேயே..! 

தொடர்ந்து “என்னோட மாண்டலின் குரு மாண்டலின சீனிவாஸ். அவரோட அகால மரணத்தை இன்னமும் என்னால நம்ப முடியலை.. அவர் இறந்ததுக்கப்புறம் ஒரு வாரமா என்னால ஒரு வேலையும் செய்ய முடியலை. அந்த அளவுக்கு எனக்கு பீலிங் ஆயிருச்சு.

நான் சின்னப் புள்ளைல இருந்து.. அவர்கிட்ட மாண்டலின் கத்துக்கிட்டேன். தினமும் காலைல ஐந்தரை மணிக்கெல்லாம் அவர்கிட்ட டியூஷன் போவேன். ஸ்கூலுக்கு போயிட்டு வந்துட்டு திரும்பவும் சாயந்தரமும் அவர்கிட்ட டியூஷன் போவேன். அப்படியொரு இசையைக் கத்துக் கொடுத்த ஆசான் அவர்..

அவருக்கு இசைக் கலைஞர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு அஞ்சலி செலுத்துற மாதிரி மியூஸிக் அகாடமில ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சிருக்கேன். அனைத்து இசைக் கலைஞர்களும் அதுக்கு வர்றாங்க. உலக நாயகன் கமல்ஹாசன்தான் அந்த நிகழ்ச்சியை துவக்கி வைக்கப் போறாரு. அந்த நிகழ்ச்சிக்கு இன்னமும் பெயர் வைக்கலை. கூடிய சீக்கிரம் அது பற்றி தனியா ஒரு பிரஸ் மீட் வைத்து சொல்லுவோம்..” என்றார்.

முத்தாய்ப்பாக “அமெரிக்கா, கனடாவில் நடந்தது போன்ற இசைக் கச்சேரியை தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் நடத்தப் போகிறேன். சென்னை, கோயம்புத்தூர் இப்போதைக்கு மனசுல இருக்கு. சீக்கிரமா சொல்றேன்..” என்றார் தேவிஸ்ரீ பிரசாத்.

Our Score