அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் டி.சிவா மிகப் பிரம்மாண்டமான செலவில் தயாரித்துள்ள படம் ‘சார்லி சாப்ளின்-2’.
இந்தப் படத்தின் முதல் பாகமான ‘சார்லி சாப்ளின்’ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது.
முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த நடிகர் பிரபு, இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, செந்தில், ரவிமரியா, கிரேன் மனோகர், செந்தி, சாம்ஸ், காவ்யா, அமீத் ,பார்கவ், கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோரும் நடித்துள்ளனர். கூடவே தயாரிப்பாளர் டி.சிவாவும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கெளரவ வேடத்தில் வைபவ் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – செளந்தர்ராஜன், இசை – அம்ரீஷ், பாடல்கள் – மகாகவி பாரதியார், யுகபாரதி, பிரபுதேவா, ஷக்திசிதம்பரம், கருணாகரன், படத் தொகுப்பு – சசி, கலை இயக்கம் – விஜய் முருகன், நடன இயக்கம் – ஜானி ஸ்ரீதர், சண்டை பயிற்சி – கனல் கண்ணன், தயாரிப்பு நிர்வாகம் – மகேந்திரன், தயாரிப்பு மேற்பார்வை – பரஞ்சோதி, தயாரிப்பு – டி.சிவா, எழுத்து, இயக்கம் – ஷக்தி சிதம்பரம்.
இந்த ‘சார்லி சாப்ளின்-2’ படத்தில் இடம் பெற்றிருந்த ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. உடனேயே யூ டியூபில் சுமார் 53 லட்சம் பார்வையாளர்களைப் பெற்று பெருமையடைந்துள்ளது இந்தப் பாடல்.
பிரபல இசையமைபபாளர் அம்ரிஷின் இசையில் பாடகர் தம்பதிகளான செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி இணைந்து பாடிய இந்தப் பாடல் இப்போது ‘சார்லி சாப்ளின்-2’ படத்திற்கே அடையாளமாகியிருக்கிறது.
இந்தப் பாடல் பெற்றிருக்கும் வெற்றியினால் அது ஏற்படுத்தியிருக்கும் சந்தோஷத்தை படத்தின் தயாரிப்பாளரான அம்மா கிரியேசன்ஸ் T.சிவா, மற்றும் இயக்குநர் சக்தி சிதம்பரம் மற்றும் இசையமைப்பாளர் அம்ரீஷ் மூவரும் நேற்றைக்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது, “இந்தப் பாடல் விஜய் டிவியில் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்பதியினரால் பாடப்பட்டபோதே இது சூப்பர் ஹிட் ஆகும் என்று அவர்களிடம் பேசி ரைட்ஸ் வாங்கி வைத்தருந்தேன். அதற்கு பிறகுதான் அந்த பாடலுக்காக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அந்தப் பாடலை ‘சார்லி சாப்ளின்-2’ படத்திற்காக அம்ரீஷ் இசையில் உபயோகப்படுத்திக் கொண்டோம்…” என்றார்.
இயக்குநர் ஷக்தி சிதம்பரம் பேசும்போது, “அம்ரீஷ் நல்ல இசை ஞானம் உள்ளவர். இன்று இந்த ஒரு பாடலே பட்டையை கிளப்பி இருக்கு என்றால், அடுத்து அவரது இசையில் வரவருக்கும் பாடல்கள் எல்லாம் இன்னும் அதிகமாக சூட்டைக் கிளப்பும்…” என்றார்.
இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசும்போது, “சின்ன மச்சான் செவத்த மச்சான்’ பாடல் எல்லா சோசியல் மீடியாவிலும் முதல் இடத்தை பிடித்து டிரெண்டிங்கில் இருப்பது எங்களது இசைக் குழுவினருக்கு கிடைத்த வெற்றியாகும்.
இந்த நல்ல வாய்ப்பை எனக்கு வழங்கிய தயாரிப்பாளர் சிவா சார், இயக்குநர் ஷக்தி சிதம்பரம் சார், பிரபுதேவா சார் ஆகியோருக்கும் இந்த பாடலை ட்விட் மூலம் மேலும் பாப்புலராக்கிய தனுஷ் சாருக்கும் இந்த நேரத்தில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரபு தேவா சார் எவ்வளவோ பாடல்களுக்கு விதவிதமாக டான்ஸ் ஆடி இருக்கிறார். வெற்றி பெற்றிருக்கிறார். இந்த ‘சின்ன மச்சான்’ பாடல் மூலம் அவர் ஆடி நான் வெற்றி பெற்றிருக்கிறேன்.
எனக்கான ஒரு இடம் சினிமாவில் ராகவா லாரன்ஸ் மூலம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் மூலமாகவும், பிரபுதேவா சாரின் ‘சார்லி சாப்ளின்-2’ மூலமும் எனக்கு கிடைத்திருக்கிறது என்னும்போது பெருமையாக இருக்கிறது.
தமிழ்ச் சினிமாவில் இப்போதிருக்கும் மிகப் பெரிய இசையமைப்பாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எனக்கும் ஒரு இருக்கை கிடைத்திருக்கிறது என்பதில் எனக்கும் சந்தோஷம். ‘சார்லி சாப்ளின்-2’ படத்தில் இன்னும் நான்கு பாடல்கள் இருக்கின்றன. அவைகளும் இசை ரசிகர்களின் ஆதரவோடு பெரும் வெற்றியினைப் பெறும் என்று நம்புகிறேன்..” என்றார் பெருமையுடன்..!
இந்த நிகழ்ச்சியில் சரிகம ஆடியோ நிறுவனத்தை சேர்ந்த ஆனந்த் தியாகராஜனும் கலந்து கொண்டார்.