முருங்கைக்காய் சிப்ஸ் – சினிமா விமர்சனம்

முருங்கைக்காய் சிப்ஸ் – சினிமா விமர்சனம்

1985-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ப்ராபர்ட்டி முருங்கைக்காய்’. நடிகர் மற்றும் இயக்குநரான கே.பாக்யராஜ் இயக்கிய ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலமாக தமிழகத்தில் பிரபலமாகி இப்போதுவரையிலும் வைரலாகவே இருக்கிறது இந்த முருங்கைக்காய்.

தற்போது அவரது மகனான சாந்தனுவின் நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படம் வந்திருப்பதால், படத்தில் A-டா கூட விசயங்கள் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கும் என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் எல்லாம் எதிர்பார்த்தார்கள் இப்படத்தை. சிப்ஸ் டேஸ்டாக இருக்கிறதா..?

படத்தின் கதை…?

ஹீரோ சாந்தனு, ஹீரோயின் அதுல்யா இருவருக்கும் படத்தின் முதல் காட்சியிலே திருமணம் நடக்கிறது. திருமணம் முடிந்ததும் வரும் “முதல் இரவு உங்களது வாழ்க்கையில் மிக முக்கியமானது…” என்று தம்பதிகள் இருவருக்கும் சொல்லப்படுகிறது. இதில்தான் ஒரு ட்விஸ்ட்…!

“எப்படியாவது இந்த முதல் நாளிலேயே இருவரும் தாம்பத்யத்தில் ஈடுபட்டே ஆக வேண்டும். அப்போதுதான் நம் குடும்பத்தில் வாரிசு பிறக்கும்…” என்று மணப்பெண் அதுல்யாவிடம் அவரது அத்தையான ஊர்வசி சொல்கிறார்.

ஆனால், சாந்தனுவின் தாத்தாவான பாக்கியராஜ், “நீ இன்றைய இரவில் மனைவியை நெருங்காமல் விரதம் இருக்கணும். இது நமது குடும்பப் பாரம்பரியம். நம்முடைய பரம்பரையில் வந்த அனைத்து ஆண்களும் இதைக் கடைப்பிடித்தார்கள். அந்த வரிசையில் நீயும் இதைப் பின்பற்ற வேண்டும். இதை நீ மீறினால் சொத்து முழுவதையும் அனாதை இல்லத்திற்கு எழுதி வைத்துவிடுவேன்…” என்று பயமுறுத்துகிறார்.

இதற்கிடையில் இந்த முதலிரவை எப்படியாவது நடக்க வைக்க வேண்டும். அதன் மூலம் ஆசிரமத்திற்குப் போகும் பணத்தில் நாமும் கொஞ்சம் கமிஷன் காசு பார்த்துவிட வேண்டும் என்று  பாக்யராஜின் மேனேஜரான மனோபாலா திட்டம் தீட்டுகிறார்.

மனோபாலா தனக்கு உதவிக்காக யோகிபாபுவின் உதவியை நாட.. அவர் அவருடைய மாமாவான அன்பு டிரெஸ்ட்டின் உரிமையாளரைப் பிடிக்க.. அவரோ ஊரின் பெரும் புள்ளியும் இந்தப் படத்தின் நிஜமான தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரைப் பிடிக்கிறார்.

இந்தத் தம்பதிகளுக்கு இன்றைய இரவில் தாம்பத்யம் நடக்குமா.. நடக்காதா.. என்பதை எதிர்பார்த்து ஒரு பெரிய கோஷ்டியே பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறது.  

சாந்தனு விரதத்தை கடைபிடித்தாரா? இல்லை அதுல்யாதான் ஜெயித்தாரா? சொத்துக்காக அலையும் இந்தக் கூட்டத்தின் கதி என்ன? என்பதை எல்லாம் ஒரே இரவுக்குள் சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குநர்.

மனைவி அதுல்யா நெருங்கும் போதெல்லாம் விலகி விலகி ஓடும் பரிதாபக் கணவனாக சாந்தனு நன்றாக நடித்துள்ளார். ஆசை இருந்தும் தாத்தாவின் வார்த்தைக்காக அவர் அதுல்யாவை தவிர்க்கும் காட்சிகள் எல்லாமே ரசனை. 

கணவனை வசப்படுத்தி முதல் நாள் முதலிரவை வெற்றிகரமாக நடத்தும் வேட்கையில் அதுல்யா திரையில் அதகளப்படுத்தி இருக்கிறார். பல இளைஞர்களை தூக்கமின்றி தவிக்க வைக்கும் அளவுக்கு தன்னுடைய செக்ஸி ரியாக்‌ஷன்களால் கவர்ந்திழுக்கிறார். கணவன், மனைவி இருவரின் கெமிஸ்ட்ரியும் பக்காவாக வொர்க் கவுட் ஆகியிருப்பது இந்தப் படத்தின் பலம்.

யோகிபாபு படம் நெடுக வந்தாலும் ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். நடிகராக அறிமுகம் ஆகியிருக்கும் படத்தின் தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்திரனின் நடிப்பு ஓரளவு ஓ.கே. அடுத்தடுத்தப் படங்களில் அவர் மெருகேற வாய்ப்பு இருக்கிறது. அவருடைய கடைசிக் கட்ட புலம்பல் மட்டும் ரசிக்க வைத்திருக்கிறது.

மனோபாலா, மயில்சாமி, மதுமிதா என படத்தை ரசிக்க வைக்க சிரிக்க வைக்க நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் சிரிப்புதான் வரவில்லை.

படத்தின் பின்னணி இசை சுமார் ரகம்தான் என்றாலும் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. முந்தானை முடிச்சு’ படத்தின் புகழ் பெற்ற பாடலான “கண்ணத் தொறக்கணும் சாமி” என்ற பாட்டையாவது இதில் ரிமேக்  செய்திருக்கலாம். இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்.

ஒரு அறைக்குள்ளே நடக்கும் கதை என்பதால் கேமரா கோணங்களில் வித்தியாசம் காட்டி அழகுபடுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். வெளிப்புற பாடல் காட்.சிகளிலும், மாண்டேஜ் ஷாட்டுகளிலும் ஒளிப்பதிவு ஜலீர். அழகுப் பதுமையாக இருக்கும் அதுல்யாவை இன்னும் அழகாகக் காட்டியிருக்கிறார். பாராட்டுக்கள்.

படத்தின் கதையோ அடல்ட் கதை என்பதால் படத்தில் நடித்த அத்தனை பேருமே இதற்காக இரட்டை அர்த்தத்தில் பேசியிருக்கிறார்கள். இது கொஞ்சம் ஓவராகவே போய் முகச் சுழிப்பு வரும் அளவுக்கு ஓவர் டோஸாகிவிட்டது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது போலவேதான் இந்தப் படத்தின் ரிசல்ட்டும் வந்திருக்கிறது.

கடைசியாக ஒரு குழந்தைக்காக சொத்துக்களை வேண்டாம் என்று சொல்லும் சாந்தனுவின் கொள்கைக்காக தாத்தா மனம் திருந்துவதெல்லாம் சீரியல் டைப் சென்டிமெண்ட் டிவிஸ்ட். இது சினிமாவுக்கு செட் ஆகாது.

அந்த ஒரேயொரு காரணத்துக்காக ஒட்டு மொத்தப் படத்தையும் நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. சுவையில்லாத திரைக்கதையால் இந்தப் படத்தின் வெற்றி பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் இந்தக் காசும் மொத்தமா போச்சு என்று புலம்பிக் கொண்டே செல்வதைப் பார்த்தால் மனிதர் தெரிந்தேதான் காசை இந்தப் படத்தில் விட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.

நமது ஆழ்ந்த அனுதாபங்களை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்..!

RATING – 2.5 / 5

Our Score