ஆன்டி இண்டியன்- சினிமா விமர்சனம்

ஆன்டி இண்டியன்- சினிமா விமர்சனம்

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

நடிகர்கள் ராதாரவி, ஆடுகளம் நரேன், பிக்பாஸ்’ புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, இயக்குநர் ராமகிருஷ்ணன், விஜய் டிவி பாலா, துரை சுதாகர், வழக்கு எண்’ முத்துராமன், விஜயா மாமி, பசி’ சத்யா, ஜெயராஜ், சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சினிமா விமர்சகர்’ என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

ஆன்டி இண்டியன்’  என்ற படத் தலைப்பே பெரிய கவனம் பெற்றது. மேலும் படத்தின் இயக்குநர் ப்ளு சட்டை’ மாறன்  பிரபல யூ ட்யூப் விமர்சகர் என்பதால் ரசிகர்களுக்கும் படம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ரஜினி, கமல், விஜய், அஜித் என எல்லா நடிகர்களின் படங்களையும் இஷ்டத்துக்கு துவைத்தெடுத்த மாறன் தன் படத்தை எப்படி எடுத்திருக்கிறார்..?

2014-ம் ஆண்டு வெளியான ‘DEKH TAMASHA DEKH’ என்கிற மராத்திப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை மொழி மாற்று உரிமமே இல்லாமல் தைரியமாக காப்பி செய்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

படத்தின் துவக்கத்திலே ஒரு சாவு காட்டப்படுகிறது. பாட்ஷா’ என்ற ஓவியர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். பாட்ஷாவின் தந்தை இப்ராஹிம் முஸ்லிம்தான். ஆனால் பாட்ஷா முஸ்லிமிற்கான எந்த சம்பிரதாயங்களையும் செய்து கொள்ளாதவர். மேலும் அவரது அம்மா இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மாறியவர். அதனால் மாறனின் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் எழுகிறது.

மாறனின் அக்கா மகனான ஏழுமலை, தன் மாமனின் உடலை அடக்கம் செய்ய பல முயற்சிகளை எடுக்கிறார். அவரை அவர் அங்கம் வகிக்கும் ஓர் மதவாத அரசியல் கட்சி பயன்படுத்திக் கொள்கிறது. மேலும் அந்தச் சாவை வைத்து ஒரு அரசியல் சூதாட்டமே நடக்கிறது. இதற்கு அந்தத் தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலும் ஒரு காரணமாக இருக்கிறது.

எல்லா ரிக்கார்டுகளிலும் பாட்ஷா முஸ்லிம். அம்மா பிறந்த வழியில் பார்த்தால் பாட்ஷா இந்து. அம்மாவின் தற்போதைய மதத்தின்படி பார்த்தால் பாட்ஷா கிறிஸ்டியன். இப்படியான இடியாப்பச் சிக்கல் தீர்ந்து எந்த வழிமுறைப்படி பாட்ஷாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது என்பதுதான் இந்த ‘ஆன்டி இண்டியன்’ படக் கதையின் முடிவு.

படத்தில் ப்ளு சட்டை மாறன்தான் இறந்த பாட்ஷாவாக நடித்திருக்கிறார். படத்தின் முதல் ஷாட்டே அவரின் இறந்த உடல் மீதுதான். கோயில்களையும், கோபுரங்களையும் முதல் ஷாட்டாக காட்டும் செண்டிமெண்ட் கொண்ட, தமிழ் சினிமாவில் முதல் ஷாட்டையே பிணத்தின் மீது வைத்து திடுக்கிட வைத்திருக்கிறார் இயக்குநர்.

படத்தில் நடித்திருப்பதில் டஜன் கணக்கானவர்கள் புதுமுகங்கள்தான். ஆனால் அந்தப் பதட்டம் யார் நடிப்பிலும் இல்லை. மைத்துனராக நடித்தவர் கடைசிவரையிலும் தன்னுடைய உரிமை மற்றும் கட்சி விசுவாசம் இரண்டுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு தவிப்பவரைப் போல சிறப்பாக நடித்திருக்கிறார்.

ராதாரவி சி.எம்.ஆக நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகளில் எல்லாம் தற்கால அரசியலின் போக்கை கனெக்ட் செய்து ரசிக்க முடிகிறது. ஆடுகளம்’ நரேனின் கதாப்பாத்திரம் படத்தில் மிக முக்கியமானது. அந்தப் பொறுப்பை உணர்ந்து தன் இருப்பை அழகாக பதிவு செய்திருக்கிறார் நரேன். சமாதானக் கூட்டத்திற்கு வந்தவர்களை ஒரு கட்டத்தில் மிரட்டி பணிய வைக்கும் போலீஸ் வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் ஆடுகளம்’ நரேன்.

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் முத்துராமன் எதார்த்தம் மீறாமல் நடித்திருக்கிறார். மீடியாக்கள் குறித்து அவர் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் கை தட்டல் எழுகிறது. விஜய் டிவி பாலா டெண்ட்டை மாட்டுவதும், கழட்டுவதற்குமான புலம்பல் காட்சிகளில் கவனிக்க வைத்திருக்கிறார்.

படத்தில் கானா பாடல்களில் சாவு வீட்டில் என்ன பாடலைப் பாடுவார்களோ அதை பாட வைத்திருக்கிறார்கள். புதிய பாடல்களை மக்கள் தெரிந்து கொண்டுள்ளார்கள்.

ஒளிப்பதிவில் பெரிய வித்தைகளெல்லாம் இல்லை. ஏதோ பெசன்ட் நகர் ஏரியாவை விஸ்தாரமாகக் காட்டியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

இரண்டு முறை சடலத்தைத் தூக்கிச் சென்று திரும்பவும் தூக்கி வந்து வைத்துவிட்டு அடுத்தக் கட்ட நகர்வை நோக்கி சிந்திக்க வைக்கும் அந்தக் கணம்தான் படத்தின் மையம். படத்தின் கதையில் இருக்கும் இந்த நேர்த்தியும், வலிமையும் அதைப் படமாக்கியதில் இல்லாதது சிறிய குறை.

பல இடங்களில் பட்ஜெட் பற்றாக்குறை படத்தில் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. சாதி, மதம் சார்ந்த அரசியல் கட்சி இதை அரசியலாக்கும் நிகழ்வு வலிந்து திணிக்கப்பட்டது போல தெரிகிறது. திரைக்கதையில் இன்னும் சில வசனங்களை வைத்து இதற்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஒரிஜினல் கதையில் இருக்கின்ற அதே அளவைத்தான் இதிலும் இயக்குநர் வைத்திருக்கிறார். இவரைக் குற்றம் சொல்லி என்ன புண்ணியம்..?

படத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் படத்தின் வசனங்கள்தான். இதற்காக ஒரிஜினல் வசனகர்த்தாவுக்கு நமது பாராட்டுக்கள். இந்தியா முழுவவதுமே இப்போது இந்தப் பிரச்சினைதான் ஓடிக் கொண்டிருப்பதால் படத்தின் வசனங்கள் எந்த மொழிப் படத்திற்கும் பொருந்துப் போகும் என்பதில் ஐயமில்லை.    

அதிகாரப் போதையில் எளிய மக்களை வேட்டையாடும்  அரசியல்வாதிகளை  துணிச்சலாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். மதத்தால் இங்கு யாருக்கும் பிரச்சனையில்லை. மதத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களால்தான் எல்லாப் பிரச்சனைகளும் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளது இந்த ஆன்டி இண்டியன்’.

ஆனால், “இது என்னுடைய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அல்ல.. காப்பியடிக்கப்பட்டது…” என்று தைரியமாக முன் வந்து சொல்லி செய்திருந்தால் நிச்சயமாக புளூ சட்டை மாறனை பாராட்டியிருக்கலாம்.

ஆனால் திருட்டுத்தனமாக, கடைசிவரையிலும் இது பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லாமல் அனைத்து பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தனக்குத்தானே வாங்கிக் கொண்டு இ்ப்போதுவரையிலும் அதில் திளைத்துக் கொண்டிருக்கும் மாறனும், இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் மதச் சார்பான கட்சி வில்லன்களும் ஒன்றுதான் என்பதை அழுத்தம் திருத்தமாக இங்கே பதிவு செய்கிறோம்.

ஒரிஜினல் படைப்பாளிகளான மராத்தி படத்தின் நாயகர்களுக்கு நமது பாராட்டுக்களும், வாழ்த்துகளும்..!

RATING : 3.5 / 5

Our Score