full screen background image

3.33 – சினிமா விமர்சனம்

3.33 – சினிமா விமர்சனம்

மனித வாழ்வில் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. காலம் பொன் போன்றது என்பது மூத்தோர் மொழி. அக்காலத்து மனிதர்களும் மகான்களும் ஒவ்வொரு நேரத்திற்கும் ஒரு காரணத்தை வகுத்து வைத்திருக்கிறார்கள். மேலும் ஜோதிடத்திலும், ஜாதகதத்திலும் நேரத்தைக் கொண்டே கிரகங்களின் செயல்பாடுகளும் அமைகின்றன.

ஒரு குழந்தை பிறந்தால் அடுத்த நொடியே நேரத்தைதான் குறிக்கிறோம். இப்போது சிலர் ஜோசியரிடம், “குழந்தை எந்த நேரத்தில் பிறந்தால் நல்லது?” என்பதைக் கேட்டு அந்த நேரத்தில் ஆபரேசன் மூலமாக குழந்தைகளைப் பெற்றெடுக்கும் அவலம்கூட நம் நாட்டில் நடக்கின்றன.

நேரம் நடத்தும் கால விளையாட்டைச் சொல்ல பேனா மையால் முடியாது. அப்படியான நேரத்தை அடிப்படையாக கொண்டுதான் இந்த 3.33’ என்ற படம் உருவாகி இருக்கிறது.

Bamboo Trees Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் T. ஜீவிதா கிஷோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

நடன இயக்குநர் சாண்டி நாயகனாக நடித்துள்ளார். மேலும் பருத்தி வீரன்’ சரவணன், ரமா, ரேஷ்மா பசுபுலடி, கெளதம் வாசுதேவ் மேனன், மைம் கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து  & இயக்கம் – நம்பிக்கை சந்துரு, ஒளிப்பதிவு –  சதீஷ் மனோகரன், இசை – ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், படத் தொகுப்பு –  தீபக்  S.துவாரகநாத், VFX  சூப்பரவைசர்  – அருண், சண்டை இயக்கம்  – ஸ்டன்னர் ஷாம், மிக்சிங் –  ராம்ஜி சோமா, SFX – A.சதீஷ்குமார், மக்கள் தொடர்பு –  சதீஷ் (AIM), விளம்பர வடிவமைப்பு  –  SABA DESIGNS.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக காலம் கதையின் வில்லனாக இருக்கும் கதையில், நேரத்தை மையமாக கொண்ட ஹாரர் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இதுவரையிலான சினிமா வரலாற்றில் இறந்து போன ஆத்மாக்கள், கொலையுண்ட ஆவிகள் தான் பேயாக வந்து பயமுறுத்தும். இப்படத்தில் நாயகனை 3.33 என்னும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பயமுறுத்துகிறது.

அந்தக் குறிப்பிட்ட நேரம் நாயகனை பாடாய்படுத்தி சிக்கலுக்கு உள்ளாக்குவதும், அந்த நேரத்தில் மாட்டிக் கொள்ளாமல் நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பதும்தான் இந்தப் படத்தின் கதை.

படத்தின் பெரும் பகுதி ஒரு வீட்டில் நடப்பதாக கதை நடப்பதால் ஒரு  வீட்டின்  செட் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.

3.33 என்ற நேரத்தில் பிறந்திருக்கும் சாண்டிக்கு தனது இளம் வயதில் 3.33 என்ற நேரத்தைக் கடக்கும் போதெல்லாம் எதாவது பிரச்சனை வருகிறது. அந்தப் பிரச்சனைகள் பெரும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. பிரச்சனை அவருக்கும் அவரைச் சேர்ந்தோருக்குமே நடக்கிறது.

ஒரு கட்டத்தில் ஒரு பாதிரியார் அவர்கள் வீட்டுக்கு வந்து “இவனோடு யாரும் இருக்காதீர்கள்” என்று எச்சரித்துவிட்டுப் போகிறார். பிரச்சினையின் தீவிரம் அவ்வளவு மோசமாக இருக்க, சாண்டி தன் பிரச்சனைகளை எபப்டி சரி செய்கிறார்? என்பதுதான் படத்தின் கதை.

சாண்டி என்றாலே துள்ளல் நடனமும் கலகல வசனமும் இருக்கும் என்று நம்பும் ரசிகர்களுக்கு  இந்தப் படத்தில் சாண்டி சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார். மிகவும் இறுக்கமான முகத்துடன் குழப்பத்துடன் இருக்கும் கேரக்டர் அவருக்கு. கூடுமான வரைக்கும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். எமோஷ்னல் காட்சிகளில் மட்டும் இன்னும் அவர் கவனம் செலுத்தி நடிக்க வேண்டும்.

நாயகிக்கு வெறுமனே சாண்டியை காதலிக்கும் கேரக்டர்தான். அதைச் சரியாகச் செய்திருக்கிறார். ஒரு இடத்தில் ஹீரோவை பயமுறுத்தும் காட்சியும் அவருக்கு உண்டு. படத்தில் சாண்டியின் அம்மாவாக நடித்திருக்கும் ரமா சில காட்சிகளில் மிகவும் மிரட்டியிருக்கிறார். அழகாக நடித்திருக்கிறார். அக்காவாக வரும் ரேஷ்மா பசுபலட்டியின் நடிப்பும் குறைவில்லாதது. ரேஷ்மாவின் குழந்தையும் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளது.

ஒளிப்பதிவாளர் படத்தின் அரணாக இருந்து படத்தைக் கரை சேர்த்திருக்கிறார். ஒரு வீட்டிற்குள்ளே நகரும் கதையை கூடுமானவரை அலுப்புத் தட்டாமல் விதவிதமான ஷாட்களை வைத்து சமாளித்திருக்கிறார். நிறைய கேரக்டர்களுக்கு க்ளோசப் ஷாட் இருந்தாலும் அவற்றை கவனமாக கையாண்டிருக்கிறார்.

படத்தில் பின்னணி இசை ஓரளவு பரவாயில்லை. இசை அமைப்பாளர் திரில்லர் இசைக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் உழைப்பைக் கொடுத்திருக்கலாம். க்ளைமாக்ஸில் வரும் மேக்கிங் வீடியோ பாடலில் துள்ளல் இருக்கிறது.

தீபக் துவாரகநாத்தின் படத் தொகுப்பு பாராட்டுக்குரியது. இவருடைய சிறப்பான பணியினால் பேய்களின் விளையாட்டைக் காண்பிக்கும் காட்சிகளிலெல்லாம் அந்தப் பயமுறுத்தலையும், திகிலையும், அடுத்தது என்ன என்ற சஸ்பென்ஸையும் ஒரு சேரக் கொடுத்திருக்கிறது படம்.

இந்த 3.33 என்ற நம்பரைப் பற்றியும் இந்த நம்பர்கள் செய்யும் வினைகள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கும் கேரக்டர் கெளதம் மேனனுக்கு. அதை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

3 என்ற எண் இறை சக்தியைக் குறிக்கும். இறை சக்திக்கு எதிராக துஷ்ட சக்திகள் இரு மூன்றை சேர்த்து இந்த இறை சக்தியான மூன்றோடு இணைத்துவிட்டனர். அதனால் இந்த நேரத்தில் ஒருவன் பிறந்தால் அவன் தீவினைகளில் இருந்து விடுபடுவது கடினம் என்பதாக எடுத்துரைக்கிறார்.

அவர் சொல்லும் விசயங்கள் அறிவியலோடு கனெக்ட் ஆகாது என்றாலும் ஒரு பேண்டசியாக அவற்றை எடுத்துக் கொள்ளலாம். வித்தியாசமான கதைக் களமும், மிக வித்தியாசமான படத் தலைப்பு இவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

ஆனால் இவற்றைவிட திரைக்கதைதான் மிக முக்கியம். இயக்குநர் அதில் கூடுதல் சிரத்தை எடுத்திருந்தால் இது சிறந்த படமாக வந்திருக்கும். முடிவில் என்ன சொல்லியிருக்கிறார்கள்.. என்ன சொல்ல வருகிறார்கள் என்பது யாருக்குமே புரியவில்லை. சப்பென்று முடிந்த அனுபவம்தான் கிடைத்தது.

3:33 பேய்ப் பட ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.

RATING : 3 / 5

Our Score