full screen background image

சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றிப் பேச வரும் சீமான் நடிக்கும் ‘முந்திரிக்காடு’

சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றிப் பேச வரும் சீமான் நடிக்கும் ‘முந்திரிக்காடு’

‘ஆதி திரைக்களம்’ என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘முந்திரிக் காடு.’

இந்த படத்தில் இயக்குநர் சீமான் போலீஸ் அதிகாரியாக  கதையின்  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான C.மகேந்திரனின் மகன்.   கதாநாயகியாக சுபபிரியா நடித்துள்ளார். மற்றும் ‘தியேட்டர் லேப்’ ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல் திரு, கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

எழுத்து – இயக்கம் – மு.களஞ்சியம், இசை – ஏ.கே.பிரியன், ஒளிப்பதிவு – ஜி.ஏ.சிவசுந்தர், படத் தொகுப்பு – எல்.வி.கே.தாசன், கலை இயக்கம் – மயில் கிருஷ்ணன், பாடல்கள் – கவி பாஸ்கர், இளைய கம்பன், நிழற்படம் – தஞ்சை ரமேஷ், மூலக்கதை – எழுத்தாளர் இமையம், மக்கள் தொடர்பு – மெளனம் ரவி, வரைகலை – பவன்குமார், தயாரிப்பு – ஆதி திரைக்களம்.

தீண்டாமையை தீவிரமாகக் கடைப்பிடிக்கும் தட்டாங்காடு என்கிற கிராமத்தில் நடந்த ஒரு கொடூரமான கொலை சம்பவம் அந்த சரகத்தில் பணிபுரிந்த காவல் துறை ஆய்வாளர் அன்பரசனை (செந்தமிழன் சீமான் ) மன ரீதியாக கடுமையாக பாதிக்கிறது.

அந்த ஊரை சேர்ந்த ஒரு ஆதிக்க சாதி ஆணும், தாழ்த்தப்பட்ட பெண்ணும் காதலிக்கின்றனர். அந்த தாழ்த்தப்பட்ட பெண்ணை, உள்ளூர் சாதி வெறியர்கள் ஒன்பது பேர் சேர்ந்து கொலை செய்து விடுகின்றனர்.

வலுவான சாதிய அரசியல் பின்னணி இருப்பதால் கொலையாளிகளை சட்டம் எதுவும் செய்ய இயலாமல் தலைகவிழ்ந்து நிற்கிறது. ஆனால், சட்டப்படி அவர்களை எப்படியாவது தண்டித்துவிட வேண்டும் என்று அன்பரசன் கடுமையாக போராடிக் கொண்டிருக்கும்போது, அடுத்து அதே ஊரில் இன்னொரு காதல் உருவாவது கண்டு அதிர்ச்சியடைகிறார்.

தட்டாங்காடு கிராமத்தில் வாழுகிற முருகன் ஒரு ஏழை முந்திரி விவசாயி. அவரது மூத்த மகள் தெய்வம் என்னும் சுபபிரியா. தன் மகள் தெய்வத்தை எப்படியாவது கலெக்டருக்கு படிக்க வைத்து விடவேண்டும் என்பது முருகனின் கனவு. ஆனால் விதி சும்மா விடுமா..? தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்லமுத்துவை தெய்வம் காதலிக்கிறாள்.

அந்தக் காதல் மெல்ல, மெல்ல ஊருக்குள் கசிகிறது. தெய்வத்தின் சாதியினர் காதலை ஏற்க மறுக்கின்றனர். அந்த ஒன்பது கொலை வெறியர்களும் அவளையும் அவளது குடும்பத்தையும் துன்புறுத்துகிறார்கள். அந்த கிராமம் ஒன்று திரண்டு தெய்வத்தை பல வழிகளில் அடித்தும் உதைத்தும் திருத்தப் பார்க்கிறது.தெய்வம் திருந்தவில்லை.

சாதிய வெறியர்கள் கிராமத்தின் நடுவில் வைத்து முடியை அறுத்து அவமானப்படுத்துகிறார்கள். ஆனாலும் தெய்வம் அத்தனை சாதியக் கட்டுப்பாடுகளையும் மீறி, செல்லாவோடு வாழ்ந்துவிட முடியும் என்று உறுதியாக நம்புகிறாள்.

எல்லா அவமானங்களையும், எல்லாத் துயரங்களையும் பொறுத்துக் கொள்கிறாள். தன் காதலை அழிக்க நினைக்கிற சாதி வெறிக் கும்பலை எதிர்த்து,உயிரையும் பணயம் வைத்து போராடுகிறாள்.

எனவே, இனி தெய்வம் ஒருபோதும் திருந்தவே மாட்டாள் என்கிற முடிவுக்கு வந்த கிராம மக்கள் தெய்வத்தைக் கொன்றுவிட தீர்மானிக்கிறார்கள். ‘பாலிடாயில்’என்கிற கொடிய விஷத்தை வாயில் ஊற்றி கொல்ல வேண்டும் என்கிற கொடுமையான திட்டத்தை முருகனிடம் முன் வைக்கிறார்கள்.

தனது மகளை தானே எப்படி கொல்வது என்று நினைத்து கதறித் துடிக்கிறார் முருகன். “எங்களுக்காவா இதை செய்யுறோம்? ஆயிரம் தலக்கட்டுக்காரனும் வேட்டி கட்டிக்கிட்டுப் போகணுமில்ல.. நம்ம சாதி மானம் போவக் கூடாதுன்னுதான்.. இத செய்ய சொல்லுறோம்..”  என்று சொல்லி முருகனை நிர்பந்திக்கிறார்கள்.

மொத்தக் கிராமத்தையும் பகைத்துக் கொள்ள முடியாமல், முருகன் தான் தவமிருந்து பெத்த மகளை கொல்ல ஒத்துக் கொள்கிறார்.விடிவதற்குள் கொன்று, மகளை பிணமாக ஊரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கிராமம் கட்டளையிடுகிறது.

அதே நேரம் காவல்துறை ஆய்வாளர் அன்பரசன், அந்த கிராமத்தின் வன்மம், கொலை வெறி, சாதித் திமிர், மனிதர்கள் என்கிற போர்வையில் திரியும் கொடூரர்கள் என எல்லாவற்றையும் தாண்டி, எப்படியாவது தெய்வத்தைக் காப்பாற்றி, செல்லமுத்துவோடு வாழவைத்து விட வேண்டும் என்று நினைக்கிறார்.

ஆனால் முருகன் தன் மகளை தானே விஷம் வைத்து கொன்று கிராமத்துக்கு தனது சுய சாதி உணர்வை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இருவரில் வென்றது யார் என்பதுதான் இந்தப் படத்தின் மீதிக் கதை.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் மூத்த கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களான நல்லக்கண்ணு, சி.மகேந்திரன், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மூவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா முந்திரிக்காடு படத்தின் இசையை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.

Our Score