full screen background image

86 வயதிலும் பட இயக்கம் செய்யவுள்ள இயக்குநர் முக்தா சீனிவாசன்..!

86 வயதிலும் பட இயக்கம் செய்யவுள்ள இயக்குநர் முக்தா சீனிவாசன்..!

திரைப்படத் துறைக்கு வந்து 70 ஆண்டுகளைக் கடந்து விட்டார் பிரபல தயாரிப்பாளரான முக்தா பிலிம்ஸின் முக்தா சீனிவாசன்.

சிவாஜி, ரஜினி, கமல், முத்துராமன், ஜெய்சங்கர், ஏ.வி.எம்.ராஜன், ஜெமினிகணேசன், பாண்டியராஜன் உட்பட பல நடிகர்களை வைத்து படங்களைத் தயாரித்து இயக்கியிருக்கிறார். மாடர்ன் தியேட்டர்ஸில் வேலை பார்த்த அனுபவம் கொண்ட சொற்ப திரைத்துறை ஊழியர்களில் இவரும் ஒருவர்.

‘முதலாளி’, ‘நாலு வேலி நிலம்’, ‘தாமரைக் குளம்’, ‘ஓடி விளையாடு பாப்பா’,’ மகனே கேள்’, ‘ஸ்ரீராமஜெயம்’, ‘சினிமா பைத்தியம்’, ‘பனித்திரை’, ‘இதயத்தில் நீ’, ‘பூஜைக்கு வந்த மலர்’, ‘தேன் மழை’, ‘நினைவில் நின்றவள்’, ‘பொம்மலாட்டம்’, ‘ஆயிரம் பொய்’, ‘நிறைகுடம்’, ‘அருணோதயம்’, ‘தவப் புதல்வன்’, ‘சூரியகாந்தி’, ‘அன்பைத் தேடி’, ‘அந்தரங்கம்’, ‘பேரும் புகழும்’, ‘அந்தமான் காதலி’, ‘இமயம்’, ‘அவன் அவள் அது’, ‘பொல்லாதவன்’, ‘கீழ் வானம் சிவக்கும்’, ‘சிம்லா ஸ்பெஷல்’, ‘பரிட்சைக்கு நேரமாச்சு’, ‘சிவப்பு சூரியன்’, ‘தம்பதிகள்’, ‘இரு மேதைகள்’, ‘ஒரு மலரின் பயணம்’, ‘கோடை மழை’, ‘நாயகன்(தயாரிப்பு மட்டும்)’, ‘கதாநாயகன்’, ‘சின்னச் சின்ன ஆசைகள்’, ‘எதிர் காற்று’, ‘பிரம்மச்சாரி’, ‘ராஜ பாண்டி’, ‘வாய்க் கொழுப்பு’, ‘கண்களின் வார்த்தைகள்’, ‘பாஞ்சாலி’, ‘பலப் பரீட்சை’ ஆகிய முக்கிய படங்களை தயாரித்து இயக்கிய அனுபவம் கொண்டவர்.

கடந்த 25 வருடங்களுக்கு முன்பு படவுலகில் இருந்து விலகியிருந்தார் முக்தா சீனிவாசன். இப்போது.. இந்த வயதிலும் மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

ஸ்ரீராமானுஜரின் வாழ்கையைத் தழுவி ‘மனித நேயர் ராமானுஜர்’ என்கிற படத்தை அவரே தயாரித்து இயக்குகிறாராம்.

இது பற்றி பேசிய இயக்குநர் முக்தா சீனிவாசன், “இது நான் இயக்கும் 45-வது படம். இந்தப் படத்தில் ராமானுஜராக புதுமுகம் ஒருவர் நடிக்கவுள்ளார். பிரபல நடிகர்களை நடிக்க வைத்தால் அது மக்கள் மனதில் பதியாது. அவர்களது நெடுநாளைய இமேஜ் அந்த கதாப்பாத்திரத்தை மழுங்கடித்து விடும். அதனால்தான் ராமானுஜராக புதுமுகத்தை நடிக்க வைக்க உள்ளேன்.

வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பை துவக்கி மூன்றே மாதத்தில் படத்தினை முடித்து திரைக்குக் கொண்டு வரவுள்ளோம். ஸ்ரீபெரும்பத்தூர், கல்யாணபுரம், கோவிலடி, திருக்கோவிலூர், ஸ்ரீரங்கம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர் ஸ்ரீராமானுஜர். பிராமணர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் செல்லலாம் என்கிற கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்த முதல் ஆன்மிக குரு ராமானுஜர்தான். அவரது வாழ்கையை திரையில் பதிவிடுவதில் எனக்குப் பெருமையே..,” என்றார்.

Our Score