full screen background image

“3 வருட காலத்திற்குள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்..” – நடிகர் பொன்வண்ணன் பேட்டி..!

“3 வருட காலத்திற்குள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்..” – நடிகர் பொன்வண்ணன் பேட்டி..!

நடிகர் சங்கத்தின் தேர்தல் முடிவடைந்து  புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற பிறகு மற்ற சங்கங்களைவிடவும் மிக அதிகமாக தினமும் ஒரு செய்தியாக நடிகர் சங்கத்தின் நலப் பணிகள் தொடர்ந்து வருகின்றன.

இது பற்றி நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர்களில் ஒருவரான நடிகர் பொன்வண்ணன் மிக விளக்கமாக நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

“நாங்கள் பதவியேற்று இன்றோடு சுமார் 90  நாட்கள் ஆகிவிட்டது. இந்த 90 நாட்களும் நாங்கள் சரியான அளவில் நிறைய வேலைகள் பார்த்துள்ளோம் என்றே சொல்லலாம். பொறுப்புக்கு வந்த நாளில் இருந்து அலுவலகம் மற்றும் நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளை முதலில் சீர் செய்துள்ளோம்.

நாங்கள் பொறுப்புக்கு வந்து இதுவரை மூன்று செயற் குழு கூட்டங்களை நடத்தியுள்ளோம், ஒன்று அறிமுகக் கூட்டம். இரண்டாவது மாதாந்திர செயற் குழு கூட்டம். மூன்றாவது சிறப்பு செயற்குழு கூட்டம். இந்த மூன்று செயற் குழு கூட்டங்களிலும் முன் வைக்கப்பட்ட அனைத்து விஷயங்களும் முறைப்படி உறுப்பினர்களுக்குள் விவாதிக்கப்பட்டு பின்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.

முதல் பிரச்சினையாக திரைப்படங்களையே நம்பி வாழ்கின்ற துணை நடிகர்கள் பலருக்கும் படங்களில் வேலை செய்ததற்கான ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்ததை அறிந்தோம்.

அந்தப் பாக்கி தொகை, பல தயாரிப்பு நிறுவனங்களிலும், ஏ.ஆர்.ஓ. எனப்படும் துணை நடிகர்களின் ஏஜெண்டுகளிடமும் இருந்தது. அந்தப் பாக்கித் தொகையை அவர்களிடமிருந்து சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளோம்.

கூடுதலாக ஏ.ஆர்.ஓ. எனப்படும் துணை நடிகர் ஏஜெண்டு என்பவர்களின் பொறுப்பென்ன..? அவர்கள் திரைத்துறையில் யாரை, எப்படி அணுகி படங்களை பெற வேண்டும்..? அதேபோல படங்களில் நடிக்க வரும் துணை நடிகர்களை எப்படி வழி நடத்த வேண்டும்..? எப்படி வேலை வாய்ப்பு வாங்கி தர வேண்டும்..? அவர்களுக்கான ஊதியத்தை எப்படி பெற்று தர வேண்டும்..? இப்படி எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி அந்த ஒழுங்கு முறைக்குள் வருகிறவர்களை மட்டுமே இப்போது பொறுப்பில் அமர்த்தியுள்ளோம். இது எங்களுடைய ஒருவிதமான செயல்பாடு.

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சங்க உறுப்பினர்கள் 2,5௦00 பேருக்கு தீபாவளி பரிசு பொருட்களை அனுப்பி வைத்தோம். அந்த மிகப் பெரிய வேலையை எங்களது, செயற்குழு உறுப்பினர்களும், நடிகர்களும் வெளி மாவட்டங்களுக்கு சென்று உறுப்பினர்களை நேரடியாக சந்தித்து பரிசு பொருட்களை வழங்கினர்.

தீபாவளி முடிந்த ஒரு வார இடைவேளையில் மழை கொட்டித் தீர்த்ததில் கடலூர் மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டது. அப்போது அங்குள்ள ஒரு கிராமத்துக்கு நடிகர் சங்கத்தின் சார்பாகவும், நடிகர் சங்க நிர்வாகிகளின் சார்பாகவும் நிவாரணப் பொருட்களை பணியாளர்களுடன் அனுப்பி வைத்தோம்.

அம்மழையின் தொடர்ச்சியாக சென்னையில் வரலாறு காணாத கன மழை பெய்து சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பேரழிவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் சங்கம், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களோடு இணைந்து தொடர்ந்து 15 நாட்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டது.

அது முடிவடைந்தவுடன் இடைவேளை ஏதும் இல்லாமல்  தற்போது நிர்வாகத்தினுடைய தேவைகள் என்ன என ஆராய்ந்து நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய ‘குரு தட்சணை திட்டம்’ எனப்படும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம்.

ஒரு செயலை செய்வதற்கு நாம் கற்றுக் கொள்ளும் குருவுக்கு தட்சணை வைத்து நாம் அவருக்கு செலுத்தும் முதல் மரியாதைக்கு பெயர்தான் ‘குரு தட்சணை’.

இந்தக் குருதட்சனை திட்டத்தால் பயன் அடைபவர்கள் இரண்டு வகைப்படுவர். அதில் ஒரு வகையினர் வசதி படைத்த உறுப்பினர்கள். நடிகர் சங்கத்துக்கு குரு தட்சணையாக செய்வது. மற்றொன்று, வசதி இல்லாதவர்களுக்கு குரு தட்சணையாக நடிகர் சங்கம் செய்வது.  இப்படி இரண்டுவிதமான தன்மையில் இந்த
‘குரு தட்சனை திட்டம்’ செயல்படுத்தப்படவுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் எந்த திட்டத்தை தொடங்குவதற்கு முன்பும் முதலில் நாம் அறிய வேண்டியது சங்கத்தின் உண்மையான உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களை பற்றிய விவரங்கள் மட்டுமே என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். ஏனென்றால், சங்கத்தில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று முழுமையாக நமக்கு தெரிந்தால்தான் நம்மால் ஒரு திட்டத்தை செயல்படுத்த முடியும்.

எங்களுடைய உறுப்பினர்கள் யார்..? அவர்களுக்கு என்ன தேவை..? அவர்கள் வீட்டில் யாருக்கும் கல்வி தேவையா..? அல்லது வயதானவர்களுக்கு மருத்துவம்  தேவையா..? மருத்துவம் தேவை என்றால் என்னவிதமான மருத்துவம் தேவை..? எத்தனை பேருக்கு தேவை..? முதியோருக்கான ஓய்வூதியம் எத்தனை பேருக்கு தேவை..? போன்ற விவரங்கள் எங்களிடம் இருந்தால்தான் நாங்கள் அதனை சிறப்பாக நடைமுறைப்படுத்த முடியும்.

எங்களுடைய ரிஜிஸ்தர் கணக்குப்படி சென்னையில் மட்டும் 1500 உறுப்பினர்கள் உள்ளனர். அதே போல் வெளியூரில் 1000 உறுப்பினர்கள் உள்ளனர் இதுபோக வாழ்நாள் உறுப்பினர்கள் என்ற பிரிவில் நாடக நடிகர்கள் மற்றும் துணை நடிகர்கள் 500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இப்படி எல்லாம் சேர்த்து 2750 பேர் உள்ளனர்.

இருந்தாலும் இந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை மிகச் சரியாக தெரிந்து கொள்ளவும், அவர்களை முறைப்படுத்தவும் ஒரு கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்தோம். இந்த உறுப்பினர் கணக்கெடுப்பை சென்னையில் இருந்து ஆரம்பிக்கவும் முடிவெடுத்தோம்.

முதலாவதாக சென்னையில் 7 நாளாக இந்த கணக்கெடுப்பை நடத்தினோம். ஒரு நாளைக்கு 250 பேர் என்று பிரித்து, ஒவ்வொரு பகுதியாக சென்று கணக்கெடுப்பை நடத்தினோம். பகுதி வாரியாக 250 பேரை பிரித்து அவர்களுக்கு எந்த தேதியில் எங்கே வர வேண்டும் என்ற விவரத்தோடு கடிதம் எழுதி அனுப்பி, பின்னர் அப்பகுதிகளுக்கு சென்று ‘குரு தட்சனை’ திட்டத்தின் கீழ் அவர்களை சந்தித்தோம்.

இந்த நிகழ்வை எங்களுடைய சங்கத்தின் மூத்த கலைஞர்களான நடிகர் சிவகுமார் அவர்களும், திருமதி சச்சு அம்மா, திருமதி மேனகா அவர்களும் துவக்கி வைத்தார்கள்.

இந்த நிகழ்வில் களப் பணியாற்றுவதற்காக இயக்குநர் சங்கத்திடம் பேசி இருபது உதவி இயக்குநர்களை வரவழைத்திருந்தோம். அவர்கள்தான் இந்த விண்ணப்பப் படிவத்தை எல்லாம் சரி பார்ப்பது முதலிய வேலைகளை செய்தனர். அதோடு வருகிற 25௦ உறுப்பினர்களும் பயனடையும் வகையில் அவர்களுக்கு உணவு, தேனீர், மருத்துவ முகம் போன்ற பல்வேறு விஷயங்களையும் செய்து கொடுத்தோம்.

இந்த விண்ணப்பப் படிவத்தை பார்த்தவுடனேயே, அவர்களுக்கு மருத்துவ முகாமில் செக்கப் செய்து, கண் பார்வை பிரச்சனைகள் இருந்தால் உடனே அவர்கள் கண்ணாடி வழங்குவது போன்று ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

மிகப் பெரிய குறைபாடு உள்ளவர்களை குறிப்பெடுத்து கொண்டு. சாதரணமான பிரச்னை உள்ளவர்களுக்கு சாதாரண வாசிப்பு கண்ணாடி வாங்கி கொடுத்தோம். தினமும் 50-ல் இருந்து 75 பேருக்கு இந்த கண்ணாடியை நாங்கள் வழங்கியுள்ளோம். வந்தவர்கள் அத்தனை பேருக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

வேல்ஸ் பல்கலைகழகத்தில் இருந்து விஸ்காம் படிக்கும் மாணவர்கள் 10 பேர்  கேமராக்களுடன் வந்திருந்தார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் சின்ன சின்ன அரங்கங்களை தயார் செய்து, கேமராமேன் வேல்ராஜ் அவர்கள் வழங்கிய லைட்ஸ் மற்றும் உதவியாளர்கள் துணையுடன் லைட்ஸ் செட்டிங்க்ஸ் எல்லாம் தயார் செய்திருந்தோம்.

வந்திருந்த உறுப்பினர்கள் அத்தனை பேரையும் லைட்ஸ் செய்யப்பட்ட அந்த இடத்தில் வைத்து புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதுபோக வீடியோவும் எடுக்கப்பட்டுள்ளது.  வீடியோ எதற்கெனில் “தாங்கள் நடித்ததற்கான பதிவேதும் இல்லாத துணை நடிகர்கள் மற்றும் நாடகக் கலைஞர்களுக்கு அவர்கள் பயன்பெறும் வகையில் சரியாக லைட் செய்யப்பட்ட அழகான இடத்தில் வைத்து அவர்கள் திறமையை வெளிப்படுத்தும்படி கூறி அவர்களுக்கு தோணுவதை. அதாவது பாடுவது, பேசுவது போன்ற விஷயங்களை செய்ய சொல்லி அவர்களுடைய குரல், முகம், பாவனைகள் போன்றவற்றை பதிவு செய்யும்வகையில் இதை அமைத்தோம்.

இதை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இணையதளத்தில் பதிவு செய்து வைக்க வேண்டும் என்பதுதான் எங்களது தலையாய திட்டம்.

இணைய தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த பதிவை தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இங்கே உள்ள இயக்குநர்கள்  போன்றவர்கள் பார்க்கும் வகையில் நாங்கள் அதை அமைத்துள்ளோம்.

அவர்களுக்கு தேவைப்படும் வித்தியாசமான முக அமைப்பு, குரல் ஆகிவற்றை இதன் மூலம் தேர்ந்தெடுத்து பயன் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகளை நாங்கள் இதன் மூலம் ஏற்படுத்தியுள்ளோம்.  சென்னையில் இந்த நிகழ்வு 7 நாட்கள் நடைபெற்று முடிந்துவிட்டது.

அடுத்தது வெளியூர்தான். வெளியூரில் இருப்பவர்கள் அனைவரும் திரைப்பட துறையில் உள்ளவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் முழுக்க முழுக்க நாடகத்தையே வாழ்க்கையாக கொண்டவர்கள்.

நாடகக் கலைஞர்களையும், திரைப்பட நடிகர்களையும் ஒன்றாக்கி ஒரு நாடகத்தை நடத்தவுள்ளோம். இதனை எதிர்கால திட்டமாக நடத்தவுள்ளோம்.

வெளி மாவட்டங்களில் உள்ள உறுப்பினர்களை கணக்கெடுப்பின் மூலம் கண்டறியவுள்ளோம். புதுக்கோட்டையில் மட்டும் 150 நாடக நடிகர்கள் உள்ளனர். அதில் முதியவர்கள் எத்தனை பேர்..? அவர்களில் எத்தனை பேருக்கு ஓய்வூதியம் தேவைப்படுகிறது..? எத்தனை பேருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது..? என்று கேட்டு அறிந்து அவர்களுக்கு அருகில் இருக்கக் கூடிய மருத்துவமனையில் பேசி மருத்துவச் சலுகை பெற்று தரப்படும்.  உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு புதுக்கோட்டையை சுற்றியுள்ள கல்லூரிகளில் சீட்டு பெற்று தர முடியும்.

இதையெல்லாம் செய்ய இந்தக் கணக்கெடுப்பு மிக அவசியமாகிறது. இந்த ஜனவரி மாத இறுதிக்குள் அனைத்து கலைஞர்களின் குடும்ப கணக்கெடுப்பு எடுத்து முடிக்கப்படும்.  

அதற்கு பிறகு சென்னையில் இருக்க கூடிய பெரிய நடிகர்களுக்கு விண்ணப்பங்களை அவரவர் PRO-க்கள் மூலமாக அனுப்ப உள்ளோம்.

இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன் ஏற்கனவேயுள்ள உறுப்பினர்களுடைய எண்ணிக்கை தொடர்ச்சியாக இல்லாமல் விடுபட வாய்ப்புள்ளது. ஏனெனில் பல முதிய உறுப்பினர்கள் காலமாகியிருப்பதால் அவர்களது உறுப்பினர் எண்கள் விடுபட்டு இருக்கின்றன. இதை ஒழுங்குபடுத்தி உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் தொடர் எண்கள் கொடுக்கப்படவுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பு சங்க நிர்வாகம் நடைமுறைப்படுத்த உள்ள கல்வி, மருத்துவம் போன்ற அனைத்து அவசர கால உதவிகளுக்கு பயன்படுத்துவதற்காக மட்டுமே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்..!

நாங்கள் பொறுப்பில் இருக்கும் இந்த மூன்று வருட காலத்தில் இந்த நடிகர் சங்கத்துக்கு எவ்வளவெல்லாம் செய்துவிட முடியுமோ அவ்வளவையும் செய்துவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். எங்களுடைய கனவும் அதுதான். அதற்கான முயற்சியையும் நாங்கள் எடுத்து வருகிறோம். நிச்சயம் செய்து முடிப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது..!” என்று நீளமாகப் பேசி முடித்தார்.

வாழ்த்துகள்..! பாராட்டுக்கள்..!!!

Our Score