சாம்பியன் – சினிமா விமர்சனம்

சாம்பியன் – சினிமா விமர்சனம்

களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.ராகவி இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் தயாரிப்பாளர் கே.ராகவியின் மகனான விஷ்வா கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். மிருணாளினி, செளமிகா பாண்டியன் இருவரும் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். மற்றும் ‘அஞ்சாதே’ நரேன், மனோஜ் பாரதிராஜா,  வாசவி, ஸ்டண்ட் சிவா, ‘பிச்சைக்காரன்’ வினோத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

எழுத்து, இயக்கம் – சுசீந்திரன், ஒளிப்பதிவு – சுஜித் சாரங், இசை – அரோல் கரோலி, படத் தொகுப்பு – தியாகு, கலை இயக்கம் – பி.சேகர், வசனம் – எஸ்.வெங்கட்ராஜ், பாடல்கள் – கபிலன், விவேகா, மோகன்ராஜன், சண்டை இயக்கம் – தினேஷ் காசி, இணை இயக்கம் – எம்.ராஜபாண்டியன், இளங்கோ, பூபாள்ராஜ், உடை வடிவமைப்பு – யு.எம்.கலை, ஒலிப்பதிவு – ஜி.தரணிபதபி, நிர்வாகத் தயாரிப்பு – ராஜா தர், கள தயாரிப்பாளர் – எம்.செந்தில்குமார், மக்கள் தொடர்பு – ஜான்ஸன், டிஸைன்ஸ் – வெங்கி, தயாரிப்பு – கே.ராகவி, வெளியீடு – ஸ்டூடியோ 9, இசை வெளியீடு – டிரெண்ட் மியூஸிக். நேரம் – 108 நிமிடங்கள்.

‘ஜோன்ஸ்’ என்னும் நாயகன் விஷ்வா வட சென்னைப் பகுதியில் தனது விதவை அம்மாவான ‘ஜெயலட்சுமி’ என்னும் வாசவியுடன் வசிக்கிறார். இவருடைய அப்பாவான ‘கோபிநாத்’ என்னும் மனோஜ் பாரதிராஜா, அந்தப் பகுதியின் தற்போதைய கவுன்சிலரான தனசேகரிடம் கையாளாக வேலை பார்த்தவர். அதே நேரம் தீவிர கால்பந்து வீரரும்கூட. பிரியரும்கூட.

தனது மகன் ஜோன்ஸையும் ஒரு பெரிய கால்பந்தாட்ட வீரனாக்க வேண்டும் என்று விரும்பிய மனோஜ் இதற்காக தனது மகனுக்கும் தீவிரமாக கால்பந்து விளையாட்டில் பயிற்சியளித்து வருகிறார்.

ஆனால் திடீரென்று ஒரு நாள் கால்பந்து விளையாடும்போது இறந்து போகிறார் மனோஜ். இதனால் மனம் உடைந்து போகும் ஜோன்ஸின் அம்மாவான வாசவி தன் மகன் ஜோன்ஸை கால்பந்து விளையாட போகவே கூடாது என்று தடுக்கிறார்.

ஆனாலும் அம்மாவுக்குத் தெரியாமல் கால்பந்து விளையாடி தனது திறமையை வளர்த்துக் கொண்டே போகிறார் ஜோன்ஸ். ஒரு கட்டத்தில் இப்படியே பள்ளித் தோழர்களுடனேயே விளையாடினால் மேலே வர முடியாது என்று சொல்லி கால்பந்து கிளப்பில் கோச்சாக இருக்கும் ‘சாந்தா’ என்னும் நரேனிடம், ஜோன்ஸை அனுப்பி வைக்கிறார் அவரது பள்ளியின் பி.டி.மாஸ்டர்.

நரேனுக்கு தனது நண்பனான மனோஜின் மகன்தான் இந்த ‘ஜோன்ஸ்’ என்பது தெரிய வந்து மிகவும் சந்தோஷப்படுகிறார். ஜோன்ஸுக்கு பயிற்சியளிக்க ஒத்துக் கொள்கிறார். ஜோன்ஸ் பிடிவாதம் பிடித்து தனது அம்மாவிடம் ஒப்புதல் பெற்று கால்பந்தாட்டத்தில் தீவிரமாகிறார்.

இந்த நேரத்தில்தான் ஜோன்ஸின் அப்பாவான மனோஜ் தானாக இறக்கவில்லை. அவரை கொலை செய்திருக்கிறார்கள் என்கிற தகவல் ஜோன்ஸூக்கு தெரிய வருகிறது. அதுவரையிலும் வன்முறை பக்கமே போகாமல் இருந்த ஜோன்ஸூக்கு குணம் மாறுகிறது. அவனது நோக்கம் திசை திரும்புகிறது.

தனது அப்பாவைக் கொலை செய்தவன் தற்போது தனக்கு குடும்ப நண்பராகவும், நல்லவனாகவும் வலம் வரும் ஏரியா கவுன்சிலரான ‘தனசேகர்’ என்னும் ஸ்டன் சிவாதான் என்பதை அறிகிறான் ஜோன்ஸ்.

தனது கால்பந்து வீரன் என்கிற லட்சியத்தை மூட்டைக் கட்டி வைக்கும் ஜோன்ஸ், தனசேகரை பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறான். இதையறியும் நரேன் ஜோன்ஸுக்கு தகுந்த அறிவுரை சொல்லி அவரைத் திருத்தப் பார்க்கிறார். ஆனால் ஜோன்ஸ் கேட்பதாக இல்லை. எடுத்த சபதத்தை முடித்தே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார். இறுதியில் என்னாகிறது என்பதுதான் இந்தச் ‘சாம்பியன்’ படத்தின் திரைக்கதை.

‘வெண்ணிலா கபடி குழு’, ‘கென்னடி கிளப்’ ஆகிய திரைப்படங்களின் மூலமாக கபடி விளையாட்டையும், ‘ஜீவா’ படம் மூலமாக கிரிக்கெட் விளையாட்டு பற்றியும் படமெடுத்த இயக்குநர் சுசீந்திரன், இந்த ‘சாம்பியன்’ படம் மூலமாக கால்பந்து விளையாட்டு பற்றியும் சொல்லியிருக்கிறார்.

புதுமுக நாயகனான விஷ்வா தனது வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். பள்ளிப் பருவக் காட்சிகளில் அவருடைய இன்னசென்ட் முகம் அவரை இயல்பாக நடிக்க வைத்திருக்கிறது. அதே வேகத்துடனும், குருட்டு தைரியத்துடனும் தனது வகுப்புத் தோழி மீது கை வைத்தவனை பேருந்தில் வைத்து புரட்டியெடுக்கிறார்.

சாப்பிடாமல் இருந்து தனது அம்மாவிடம் தனது எதிர்ப்புணர்வைக் காட்டி கால்பந்து விளையாட அனுமதி வாங்கும் காட்சியில் கதையோடு ஒன்றிப் போயிருக்கிறார் விஷ்வா. அதே நேரம் அதே விடலைப் பசங்களின் தன்மையோடு அப்பாவின் மரணத்திற்குப் பழி வாங்கப் போகத் துடிக்கும் காட்சிகளிலும் மிக யதார்த்தமாக இருக்கிறது இவரது நடிப்பு.

நாயகன் விஷ்வா இந்தப் படத்திற்காக… கால்பந்து வீரனுக்கான பயிற்சியை ஒரு வருடம் எடுத்திருக்கிறார். அமெரிக்காவில் நடிப்பு கோர்ஸ் படித்திருக்கிறார். இந்த முன்னேற்பாட்டுடன் நடித்திருந்தாலும் சிறந்த இயக்குநரின் கை வண்ணத்தினால்தான் இது சாத்தியமானது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்தடுத்த படங்களில் சிறந்த இயக்குநர்கள் கிடைத்தால் மட்டுமே சினிமாவின் ஏணிப்படிகளை விஷ்வா மிதித்து தாண்ட முடியும் என்பதைச் சொல்லிக் கொள்கிறோம்.

மனோஜ் பாரதிராஜா மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல கதையில் நடித்திருக்கிறார். பெயர் சொல்லும்படி அமைந்திருக்கிறது அவரது கதாபாத்திரம். கோச் ‘சாந்தா’வாக நடித்திருக்கும் நரேன் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார். கண்டிப்பான கோச்சாகவும், அன்பான அண்ணனாகவும் பல காட்சிகளில் தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார். இறுதியில் நாயகனைக் காப்பாற்றும் காட்சியில் மிக ஆவேச நடிப்பையும் காட்டியிருக்கிறார். பாராட்டுக்கள்.

அம்மா ‘ஜெயலட்சுமி’யாக நடித்திருக்கும் வாசவிக்கு இது நிச்சயமாக குறிப்பிடத்தக்க படமாக அமையும். தனது மகனுக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கும் ஒரு அம்மாவாக திரையில் மிளிர்ந்திருக்கிறார்.

வீடு தேடி வந்து அன்பாக மிரட்டும் தனசேகர் அண்ட் கோ-விடம் பயந்து நடுங்கும் அம்மா வாசவி, அதே தனசேகரின் வீட்டுக்குப் போய் அவரை நிமிர்ந்துகூட பார்க்காமல் தனது கணவர் கொலை செய்யப்பட்டது தனக்கு முன்பே தெரியும் என்பதையும், தனது மகனுக்காக தான் அனைத்தையும் பொறுத்துக் கொண்டதாகத் தைரியமாகச் சொல்லிவிட்டுப் போகும் காட்சியில் ஒட்டு மொத்த அனுதாபத்தையும் பெறுகிறார் வாசவி. சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். பாராட்டுக்கள்.

மிருணாளினி, செளமியா என்று பள்ளி & கல்லூரி கால இரண்டு நாயகிகள். இது விளையாட்டு சம்பந்தமான திரைப்படம் என்பதால் காதலுக்கு அதிகம் வேலையில்லை என்று சொல்லி ‘தடா’ போட்டிருக்கிறார் இயக்குநர். ஆனால் ஒரு தூண்டுதல் சக்தியை பையன்களுக்கு, பிள்ளைகள்தான் கொடு்க்க முடியும் என்பதால் அவர்களை வைத்தே சில திரைக்கதைகளை அமைத்திருக்கிறார் இயக்குநர்.

அந்தப் பணியையும் சிறப்பான இயக்கத்தினால் நாயகிகள் செம்மையாகவே செய்திருக்கிறார்கள். கல்லூரி கால நாயகியைவிடவும், பள்ளிக் கால நாயகி அதிகம் கவர்கிறார்.

வில்லன் ஸ்டன் சிவா ஒரு பக்கம் தெறிக்கவிட.. இன்னொரு பக்கம் ‘பிச்சைக்காரன்’ வினோத் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் ‘அச்சச்சோ’ உணர்வைத் தூண்டிவிட்டிருக்கிறார். பாராட்டுக்கள் வினோத் ஸார்.

ஒளிப்பதிவாளர் சுஜித்தின் கேமராவில் வட சென்னை கொஞ்சம் புதிதாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. கால்பந்து விளையாட்டையும் பரபரவென படமாக்கியிருக்கிறார்கள். கிளைமாக்ஸ் சண்டை காட்சியை பதிவாக்கியிருக்கும்விதம் அசத்தல்.

சிறப்பான இயக்கமும், சிறப்பான ஒளிப்பதிவும், சிறப்பான சண்டை இயக்குநரும், சிறப்பான படத் தொகுப்பும் சேர்ந்தால் மிகச் சிறப்பான சண்டை காட்சி கிடைக்கும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்..!

இசையமைப்பாளர் அரோல் கரோலினின் இசையில் பாடல்கள் வழக்கம்போல இருக்கிறது. வசனங்களை எழுதிய வெங்கட்ராஜூக்கு ஒரு நன்றி. வட சென்னைவாசிகள் என்றாலே ரவுடிகள்தானா என்பதற்கு ஒரு பையன் மூலமாக முழு விளக்கம் அளித்து வடசென்னை பகுதிவாசிகளை கவுரப்படுத்தியிருக்கிறார் வசனகர்த்தா.

சிறந்த இயக்குநர்தான் சிறப்பான நடிப்பையும் வரவழைக்க முடியும். அந்த வகையில் இந்தப் படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல் திரும்பவும் கேட்டுக் கேட்டு அலுத்துப் போன விளையாட்டுக் கதையா என்று யோசித்தபடியே படம் பார்க்க அமர்ந்தால் அதையும் சுவாரஸ்யமாக புதிதாக பார்க்கும்படி வழங்கியிருக்கிறார் கதாசிரியர் சுசீந்திரன்.

படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்..! நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்..!

Our Score