மெல்லிசை மன்னர் என்றும், திரையிசை சக்கரவர்த்தி என்றும் போற்றி புகழப்பட்ட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.
சமீப காலமாக வயது மூப்பின் காரணமாக உடல் நலக் குறைவினால் சென்னை அடையாறு மலர் போர்ட்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஒரு மாத காலமாக அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார்.
மெல்லிசை மன்னர் விஸ்வநாதனின் உடல், சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
இவருடைய துணைவியார் ஜானகி அம்மாள் ஏற்கெனவே காலமாகிவிட்டார். எம்.எஸ்.வி.க்கு கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்களும் லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்களும் உள்ளனர். இவரது மகன்களில் ஒருவரான எம்.எஸ்.வி.கோபி சில திரைப்படங்களை தயாரித்திருக்கிறார்.
அவரது மகன்களில் ஒருவரான பிரகாஷ், துபாயிலிருந்து இன்று மாலை சென்னை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதி சடங்குகள் நாலை காலை 10 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மின் மாயானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எம்.எஸ்.விஸ்வநாதன் வாழ்க்கை குறிப்பு…
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் 1928 ஜூன் 24-ம் தேதி கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். எம்.எஸ்.விஸ்வநாதன், 1945 முதல் 2015 வரை 60 ஆண்டு காலம் திரைத்துறையில் கோலோச்சியவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 1,200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
1953ல் வெளிவந்த ‘ஜெனோவா’ படத்துக்கு முதன் முதலாக இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தியுடன் இணைந்து 700 படங்களில் இசை அமைத்துள்ளார். அதன் பின்னர் தனியாக 500 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார்.
நடிகர் சிவாஜி கணேசன், எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ‘மெல்லிசை மன்னர்’ என்ற பட்டத்தை வழங்கி பெருமை சேர்த்தார். ‘நீராரும் கடலுடுத்த’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மோகன ராகத்தில் இசை கோர்த்துள்ளார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
இசை அமைப்பாளர்கள் இளையராஜா, தேவா, கங்கை அமரன் பாடல்களில் பாடிய எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன்சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் பாடல்களுக்கும் குரல் கொடுத்துள்ளார்.
தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசின் விருதும் பெற்றவர்.









