full screen background image

மிஸ்டர் சந்திரமெளலி – சினிமா விமர்சனம்

மிஸ்டர் சந்திரமெளலி – சினிமா விமர்சனம்

கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

தந்தை, மகனான நவரச நாயகன் கார்த்திக்கும், கௌதம் கார்த்திக்கும் இந்தப் படத்தில்தான் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன், மைம் கோபி, விஜி சந்திரசேகர், ஜெகன், வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ரிச்சர்டு எம்.நாதன், இசை – சாம் சி.எஸ்., கலை இயக்குநர் – ஜாக்கி, ஆடை வடிவமைப்பு – ஜெயலஷ்மி, கார்த்திகா திரு, சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா, நடனம் – பிருந்தா, தஸ்தா, பாடல்கள் – விவேக், சாம் சி.எஸ்., லோகன், வித்யா தாமோதரன், படத் தொகுப்பு – டி.எஸ்.சுரேஷ், ஒலி வடிவமைப்பு – விஜய் ரத்னம், ரஹமத்துல்லா, விளம்பர வடிவமைப்பு – ஜோசப் ஜாக்சன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா டிஒன், ஸ்டில்ஸ் – ராமசுப்பு, மதன், இணை தயாரிப்பு – எம்.ரபி, எஸ்.குணசேகரன், பி.பார்த்திபன், திவ்யரூபன் மதிவாணன், விஜய் ஜனார்த்தனன், ரேவதி தனஞ்செயன், ஹரிதா தனஞ்செயன், தயாரிப்பு – ஜி.தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், லலிதா தனஞ்செயன், எழுத்து, இயக்கம் – திரு.

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத திரைப்படமான ‘மெளன ராகம்’ படத்தில் ரேவதியின் தந்தையாக நடித்த நடிகர் சங்கரனின் பெயர் ‘சந்திரமெளலி’. ரேவதியும், கார்த்திக்கும் ஒரு கார்டன் ரெஸ்ட்டாரெண்ட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று ரேவதியின் அப்பாவான சங்கரனும் அங்கே சாப்பிட வருவார்.

உடனே ரேவதி அவரைப் பார்த்து பயப்பட.. கார்த்திக் வேண்டுமென்றே கலாய்ப்பதுபோல் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ என்று அவரை பெயர் சொல்லி அழைப்பார். இந்தக் காட்சி ‘மெளன ராகம்’ படத்தில் மிக, மிக சுவையான மறக்க முடியாத காட்சி. இந்தப் படம் கார்த்திக்கை மையப்படுத்திய கதை என்பதால் அந்தப் பெயரையே பொருத்தமாக வைத்திருக்கிறார் இயக்குநர் திரு. இதற்காக அவருக்கு நமது தனியான பாராட்டுக்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சி தற்போதைய இந்தியாவில் மக்கள் தொகையைவிடவும் அதிகமாக பெருகி வருகிறது. அவைகளின் வளர்ச்சி அதிகரிக்கும் அதே வேளையில் நாட்டில் குற்றச் செயல்களும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. இரண்டுக்கும் தொடர்பு இல்லையென்று நாம் நம்பினாலும் யதார்த்த உண்மை அப்படியல்ல. தற்போது நாட்டில் நடக்கும் புதுவிதமான குற்றச் செயல்கள் அனைத்திற்கும் பின்னணியில் இருப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் என்பது உண்மை.

அப்படியொரு குற்றச் செயல்களை செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களை தோலுரிக்கும் படம்தான் இந்த ‘மிஸ்டர் சந்திரமெளலி’ திரைப்படம்.

ஒரு சுவையான கதைக் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு அதற்குத் தேவையான குடும்பக் கதை, உணர்ச்சிப்பூர்வமான காட்சியமைப்புகள், தோற்கடிக்க முடியாத காதல், நட்பு, பாசம், அன்பு என்று எல்லாவற்றுக்கும் உரிய மரியாதை கொடுத்து இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.

“ஒருத்தனை அழிச்சிட்டுத்தான் இன்னொருத்தன் வளர்வான். இதுதான் கார்ப்பரேட் உலகத்தின் சூத்திரம்…” என்று அழகர் என்னும் மிகப் பெரிய தொழிலதிபர் மூலமாக இயக்குநர் நமக்கு இந்தப் படத்தின் மூலமாகச் சொல்லியிருக்கிறார். இந்த உண்மையை உரக்கக் கூறியமைக்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நமது நன்றிகள்.

‘சந்திரமெளலி’ என்னும் கார்த்திக் மனைவியை இழந்தவர். இவருக்கு ஒரே மகன். ‘ராகவ்’ என்னும் கவுதம் கார்த்திக். கார்த்திக் தனது மகன் மீதும், தான் வைத்திருக்கும் பழைய பத்மினி கார் மீதும் அலாதி பாசம் வைத்திருப்பவர். தனது மனைவி பத்மினி கார் மீது ஒரு பாசத்துடன் இருந்ததால் செண்டிமெண்ட் கருதி அந்தக் காரை விற்காமலேயே ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

கவுதம் கார்த்திக் புரொபஷனலாக குத்துச் சண்டை வீரர். இவருடைய நெருங்கிய நண்பர் ‘பத்மினி’ என்னும் சதீஷ். கார்த்திக்கின் பத்மினி, ஒரு சமயம் நாயகியான ‘மது’ என்னும் ரெஜினா கேஸண்ட்ராவின் டூவீலருடன் மோதி அதன் பின் பக்கக் கண்ணாடியை உடைக்கிறது.

இதை சரி செய்யும் காரணமாக ரெஜினாவை பார்க்கப் போகும் கவுதம் கார்த்திக்கிற்கு ரெஜினாவின் அழகு கவர்ந்திழுக்கிறது. பார்த்தவுடனேயே மடங்கி விடுகிறார். காதலிக்க நூல் விடுகிறார். காதலும் ஓகே ஆகிறது.

இன்னொரு பக்கம் வருடாவருடம் சிறந்த தொழிலதிபருக்கான விருதை பெறும் அழகர் என்னும் மகேந்திரன் ‘கருடா’ என்னும் கால் டாக்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதற்குப் போட்டியாக விநாயக் கனகசபை என்னும் சந்தோஷ் பிரதாப் ‘கோ‘ என்னும் கால் டாக்சியை ஆரம்பிக்கிறார். தனக்குப் போட்டியாக வந்திருக்கும் புதிய நிறுவனத்தைப் பற்றி தனது கையாள் ‘மைம்’ கோபியிடம் எச்சரிக்கிறார் மகேந்திரன்.

இதற்கடுத்து திடீரென்று ‘கோ’ கால் டாக்சியில் பயணிக்கும் பயணிகளுக்கு, அந்தக் கால் டாக்சி டிரைவர்களாலேயே கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்கின்றன. இதையடுத்து ‘கோ’ கால் டாக்சி நிறுவனத்தின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்படுகிறது.

போலீஸ் விசாரணை மும்முரமாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் கார்த்திக்கும், கவுதம் கார்த்திக்கும் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளாகிறது. இந்த விபத்தினால் கவுதம் கார்த்திக்கின் கண் பார்வையில் குறைபாடு ஏற்படுகிறது. கண்ணுக்கு மிக அருகில், 2 அடி தொலைவில் இருப்பவைகளை மட்டுமே அவரால் பார்க்க முடியும் என்கிற நிலைமை. அதே சமயம் இந்த விபத்தில் கார்த்திக் இறந்துவிடுகிறார்.

தந்தையையும் இழந்து பார்வை குறைபாட்டுடன் வாழத் துவங்கும் கவுதம் கார்த்திக்கிற்கு தனது தந்தையின் சாவு குறித்த சந்தேகம் எழுகிறது. அது தற்செயல் விபத்து அல்ல… படுகொலை என்பது கவுதமுக்குத் தெரிய வர.. தன் தந்தையின் கொலைக்கான காரணத்தை அறிய முற்படுகிறார்.

இதனால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. அதையும் பொருட்படுத்தாமல் களமிறங்க.. இறுதியில் அந்தக் காரணத்தைக் கண்டறிந்தாரா இல்லையா என்பதுதான் இந்த ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தின் சுவையான திரைக்கதை.

ஒரு சஸ்பென்ஸ்-திரில்லர் கதையில் போதிய அளவுக்கான செண்டிமெண்ட் காட்சிகளையும் குடும்பப் பாசங்களுக்கான திரைக்கதையையம் அமைத்து பலவித எமோஷன்களையும் ரசிகர்கள் அனுபவித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் படத்தைப் பார்க்க வைக்கிறார் இயக்குநர்.

கவுதம் கார்த்திக்கின் நடிப்பு இந்தப் படத்தில் சற்று மெருகேறியிருக்கிறது. இடைவேளைக்கு பின்பு தனது தந்தைக்காக் கண்ணீர் சிந்தி வருந்தும் காட்சியிலும், உண்மையை அறிய அவர் புறப்படும்விதமும், சண்டை காட்சிகளில் தனது குறைபாடு தெரியாத வண்ணம் ஆனால் அதே ஆக்ரோஷத்துடன் நடித்திருக்கும் அவரது பங்கு பாராட்டுக்குரியது. நடிப்பில் குறை என்று சொல்லவே முடியவில்லை.

ஆனால் கார்த்திக்குதான் சற்று ஏமாற்றிவிட்டார். அவரது வழக்கமான நடிப்பைத் தொலைத்துவிட்டு வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்ட நடிப்பு போல அவர் நடித்திருப்பது மிகையாக இருக்கிறது. அதிலும் துவக்கக் காட்சியில் நடுரோட்டில் கார் நின்றுவிட அவர் பேசும்பேச்சுக்களை சொல்லலாம். இதேபோல் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளில்கூட ஒரு சொட்டு கண்ணீரைக்கூட அவரால் வரவழைக்க முடியவில்லை என்பது சோகம்தான்.

ஆனால் டைமிங் டயலாக் டெலிவரியில் ஜூனியர்களையும் மிஞ்சிவிட்டார் சீனியர் கார்த்திக். அப்படியொரு பேச்சு. அதிலும் வரலட்சுமியுடனான அவரது பேச்சும், நடிப்பும் மிகுந்த சுவாரஸ்யத்தைக் கொடுத்தது. இந்தப் படத்திலேயே மிகவும் பிடித்துப் போனதுபோல இருப்பது வரலட்சுமியின் கேரக்டர்தான்.

அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாம். அவர்கள் இருவரின் நட்பு எதை நோக்கிப் போகிறது.. எதற்காக நடக்கிறது என்பதையும் விளக்கியிருந்தால் அவர்களுடன் இன்னும் கொஞ்சம் நெருக்கமாகியிருக்கலாம்.  

ரெஜினா கேஸண்ட்ராவின் அழகுக்கு குறையில்லை. முதல் காட்சியில் அப்பனிடம் கோபப்பட்டு, அடுத்தக் காட்சியில் மகனிடம் ஆத்திரப்பட்டு கோபத்தைக் கொட்டும் ரெஜினா திடீரென்று எப்படி, எதனால் கவுதமை காதலிக்கத் துவங்குகிறார் என்பதைச் சொல்லாமலேயே காதலைத் துவக்கிவிட்டார் இயக்குநர்.

ஆனால் இந்தக் கேள்வியே எழாத வண்ணம் ரெஜினாவின் அழகை வெளிச்சம் போட்டுக் காட்டும்விதமாய், சீனியர்களைக்கூட “யாருய்யா இந்த ரெஜினா…?” என்று கேட்கும் அளவுக்கு ‘ஏதோதோ’ பாடல் காட்சியில் குளிர குளிர நனைய வைத்திருக்கிறார்கள். இந்த பாடல் காட்சிக்குப் பிறகும் ஏன் காதல்.. எப்படி காதல் என்று கேட்க இங்கே யாரும் முட்டாள்கள் இல்லை என்பதால் இதனை சாய்ஸில் விட்டுவிடுவோம். இடைவேளைக்கு பின்பு தனது காதலனின் நிலைமையை எண்ணி கதறி அழும் காட்சியில் தனக்கு நடிப்பும் வரும் என்று நிரூபித்திருக்கிறார் ரெஜினா.

வரலட்சுமியின் கேரக்டர் ஒரு இனிய அனுபவம். அவருக்கு வைத்திருக்கும் குளோஸப் ஷாட்டுகளும், காட்சிக் கோணங்களும் அவரும் கார்த்திக்கு இணையப் போகிறார்கள் என்பது போலவே காட்டியிருக்கிறார்கள். ஆனால் ஏமாற்றிவிட்டார் இயக்குநர். வரலட்சுமியின் அழகான நடிப்புக்கு இந்தப் படம் ஒரு உதாரணம்.

சதீஷ் படம் முழுக்க கவுதம் கார்த்திக்குடன் வலம் வருகிறார். அவ்வப்போது காமெடிக்கான விட்டுக்களை அவர் அள்ளி வீசினாலும் நகைச்சுவை தெறிக்கவில்லை என்பது மட்டும் உண்மை. இதேபோல் ஜெகனுடைய கேரக்டரும்..! ஒரேயொரு காட்சியென்றாலும் அதிலும் சுவை குன்றாமல் நடித்திருக்கிறார் ஜெகன்.

சந்தோஷ் பிரதாப் வில்லனா, குணச்சித்திரமா என்று யோசித்து, யோசித்து மண்டை காய வைத்திருக்கிறார் இயக்குநர். கடைசியில் ஏற்படு்ம் டிவிஸ்ட் எதிர்பாராதது. ஆனால் மிகச் சரியான திரைக்கதை. கார்ப்பரேட்டுகளின் தந்திரம் எந்த எல்லைக்கும் போவதற்குத் தயங்காது என்பதற்கு இவருடைய கேரக்டர் மிகச் சிறந்த உதாரணம்.

இயக்குநர் மகேந்திரன் அழகர் என்னும் கார்ப்பரேட் சக்கவர்த்தியாக நடித்திருக்கிறார். “என்னைய மாதிரி கார்ப்பரேட் சிங்கமா வரணும்ன்னா மொதல்ல கக்கூஸை கிளின் பண்ண கத்துக்க..” என்று மைம் கோபிக்கு அவர் கொடுக்கும் அட்வைஸே அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை மேலே தூக்கி நிறுத்தியிருக்கிறது. திரைக்கதையின்படி இவரை சந்தேகம் கொள்ளும் அளவுக்கு இருப்பதாலும், அதிகமான காட்சிகள் இல்லையென்பதாலும் வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.

இயக்குநர் அகத்தியன் தனது மாப்பிள்ளைக்காக ஒரு கேரக்டரில் கார்த்திக்கின் குடும்ப நண்பர் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். படத்தின் முடிச்சை இவர்தான் அவிழ்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

துவாரகா ஐ.பி.எஸ். கேரக்டரில் விஜி சந்திரசேகரும், சந்தோஷிடம் வேலை செய்பவராக வெங்கட்டும் நடித்த காட்சிகளில் வஞ்சகமில்லாமல் நடித்திருக்கிறார்கள். அதிலும் வெங்கட் சந்தோஷ் அடிபடும் காட்சியில் காப்பாற்ற ஓடி வரும் வாட்ச்மேனை மடக்கி “ஒருத்தன் என்ன செஞ்சானோ அதுவே அவனுக்குத் திருப்பி வரும்…” என்று டைமிங்காக சொல்லித் தடுப்பது கையைத் தட்ட வைத்தது.

ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். ஒளிப்பதிவாளர் என்ற ஒருவர் இருக்கிறார் என்பதே தெரியாத அளவுக்கு முதல் காட்சியி்ல இருந்து கடைசிவரையிலும் படம் மிக அழகாகவே காட்சியளித்திருக்கிறது. ஏதேதோ பாடல் காட்சியில் இயற்கை அழகுடன் ரெஜினாவின் அழகையும், காதல் காட்சிகளையும் படமாக்கியிருப்பதைப் பார்த்தால் ஒளிப்பதிவாளரும் ரசிகராகிவிட்டாரோ என்று கேட்கத் தோன்றுகிறது.

படத் தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷின் பணியும் பாராட்டத்தக்கது. கொஞ்சமும் பிசிறு தட்டாதவண்ணம் காட்சிகளை தொகுத்தளித்திருக்கிறார். உதாரணமாக மைம் கோபியை கவுதம் கார்த்திக் துரத்தி வரும் காட்சியும், நடந்த சம்பவத்தின் உண்மையை கண்ணாடி மூலமாக அறியும் காட்சியிலும் அடுத்தடுத்து நடக்கும் டிவிஸ்ட்டுகளையும் சற்றே அதிரும்வண்ணம் கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர்.

ரெஜினாவுக்கு மிகக் குறைவான ஆடைகளையே கொடுத்திருந்தாலும் அவருக்கு மட்டும் கவர்ந்திழுக்கும் ஆடை வடிவமைப்பை செய்திருக்கும் ஜெயலட்சுமிக்கு ஒரு ‘ஜே’ போடலாம்.

சாம் சி.எஸ்.ஸின் இசையில் ‘ராஜாதி ராஜா’ பாடல் ஏக ஹிட். இந்தாண்டுக்கான ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது. இதற்கடுத்து ‘ஏதேதோ’ பாடல் இளசுகளைக் கவர்ந்திழுக்கும். ‘தீராத வலி’ பாடல் காட்சிகளை நகர்த்த உதவியிருப்பதோடு படத்திற்கான சோகத்தையும் கொஞ்சம் தாங்கியிருக்கிறது.

மாநிலம் முழுவதும் மக்கள் ‘கோ’ கால் டாக்சி மீது கோபத்தில் இருக்கும்போது மீண்டும், மீண்டும் அதே டாக்சியில் அவர்கள் பயணிக்கிறார்களே என்கிற கேள்விக்கு பதில் இல்லை என்பது போன்ற சில பக்ஸ்கள் படத்தில் இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாத அளவுக்கு இயக்குநர் திரு தனது இயக்கத்தைச் செய்திருக்கிறார்.

படம் ஒட்டு மொத்தமாய் பார்க்கப் போனாலும் ஒரு சுவையான திரில்லர் படத்தைப் பார்த்த அனுபவம் கிடைக்கிறது. இயக்குநர் திரு தனது அழுத்தமான இயக்கத்தினால் படத்தை இறுதிவரையிலும் பார்த்தே தீர வேண்டும் என்கிற கட்டாயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார் என்பதில் மறுப்பேதும் இல்லை.

சில காட்சி கோணங்கள், திரைக்கதை அமைப்புகள், கடைசியில் ஏற்படுத்தும் சுவையான டிவிஸ்ட்டுகள்… இவையே இந்தப் படத்தின் வித்தியாசமான படைப்பாக்கத்திற்கு காரணமாக இருக்கின்றன.

‘மிஸ்டர் சந்திரமெளலி’ சிறந்த பொழுது போக்கு திரைப்படம் என்பதில் சந்தேகமில்லை.

Our Score